பத்து லட்சம் வேலைவாய்ப்பு: தேர்தலுக்குத் தயாராகிறது பாஜக!

பத்து லட்சம் வேலைவாய்ப்பு: தேர்தலுக்குத் தயாராகிறது பாஜக!
Updated on
1 min read

அடுத்துவரும் 18 மாதங்களுக்குள் நாடு முழுவதும் 10 லட்சம் அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கவிருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருப்பது, இளைஞர்களிடத்தில் உற்சாக அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இருந்தாலும், இது மக்களவைத் தேர்தலைச் சந்திப்பதற்கான பாஜகவின் வியூகம் என்ற அரசியல் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்ட பெரும் எண்ணிக்கையிலான வேலையிழப்புகள், பணவீக்கத்தின் எதிர்மறையான விளைவுகள் இவற்றுக்கிடையே வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என்று பொருளியல் வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.

இந்நிலையில், பிரதமரின் இந்த அறிவிப்பு தேர்தல் வியூகமா இல்லையா என்ற விவாதங்களைக் காட்டிலும் காலத்தின் தேவை என்பதே எதார்த்தம். இந்த அறிவிப்பு முழுமையாகச் செயல்வடிவம் பெறும்பட்சத்தில், அது பாஜகவுக்கு மக்களவைத் தேர்தலில் சாதகமாக அமையும். ஒருவேளை, அறிவிக்கப்பட்ட இந்த இலக்கை எட்ட முடியாதபட்சத்தில், அதுவே அக்கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்திவிடக்கூடிய அபாயமும் உள்ளடங்கியிருக்கிறது.

குறைந்தபட்சக் கால அவகாசத்துக்குள் அரசுத் துறைகளிலும் பொதுத் துறை நிறுவனங்களிலும் அதிக எண்ணிக்கையிலான பணியிடங்களை நிரப்பும்போது, தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தெளிவான வழிமுறைகளை வகுத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

ரயில்வே, பாதுகாப்புத் துறை, வரித் துறை உள்ளிட்ட முக்கியத் துறைகளில் ஏற்கெனவே காலிப் பணியிடங்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், அவற்றை முதலில் நிரப்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது.

அதிக எண்ணிக்கையில் பணியிடங்களை நிரப்புவதால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் நிதிச் சுமையானது, சமூக நலத் திட்டங்களுக்காக அரசு ஆண்டுதோறும் செலவிட்டாக வேண்டிய செலவினங்களைக் குறைக்கும் நிலைக்கு இட்டுச்சென்றுவிடக் கூடாது என்ற எச்சரிக்கைகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை.

பெருந்தொற்றுக்குப் பிறகு மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள முக்கியமான அரசியல் அழுத்தம் என்பது, வேலைவாய்ப்பின்மைப் பிரச்சினையைக் கட்டுக்குள் கொண்டுவர தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான்.

தற்போதுள்ள நிலவரப்படி, ஒன்றரை ஆண்டு காலத்துக்குள் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கினாலும், அது வேலைவாய்ப்பின்மைச் சிக்கலில் மிகச் சிறிய அளவிலேயே நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுதான். மொத்தமாக, சுமார் 43 கோடி பேரைத் தொழிலாளர்களாகக் கொண்டுள்ள இந்தியாவில் ஆண்டுதோறும் 50 லட்சம் புதிய தொழிலாளர்கள் இணைகின்றனர்.

எனவே, 10 லட்சம் அரசு வேலைவாய்ப்பு என்ற இலக்கோடு தனியார் துறை வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதற்கான சூழலை வளர்த்தெடுப்பது, நியாயமான ஊதியம் கிடைப்பதை உறுதிசெய்வது, சுயதொழிலுக்கான வாய்ப்புகளை உருவாக்குவது எனப் பல்வேறு கோணங்களிலும் மத்திய அரசு இச்சிக்கலை அணுக வேண்டியுள்ளது. தற்போதைக்கு, வேலைவாய்ப்பின்மைச் சிக்கலுக்கு மத்திய அரசு என்ன செய்தது என்று எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பினால், பாஜகவுக்குத் தெளிவான ஒரு பதில் கைவசம் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் இப்படியொரு பதிலுக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயமும் உருவாகியிருக்கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in