

நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி மாநிலங்களிலும் ஒன்றிய பிரதேசங்களிலும் குறிப்பிட்ட சில பிரிவுகளின் கீழாகச் சிறைத் தண்டனை அனுபவித்துவருபவர்களுக்குத் தண்டனைக் காலத்தைக் குறைக்க மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டும் நெறிமுறைகளை வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.
சிறப்பு விதிவிலக்கான இந்தத் தண்டனைக் குறைப்பானது, 2022-ன் சுதந்திர தினம், 2023-ன் குடியரசு, சுதந்திர தினங்கள் என்று மூன்று கட்டங்களாகச் செய்யப்படவிருக்கின்றன. 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்களும் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் தங்களது மொத்தத் தண்டனைக் காலத்தில் பாதியை நிறைவுசெய்திருந்தால் இந்தத் திட்டத்தின் கீழ் தண்டனைக் குறைப்பு வாய்ப்பைப் பெற முடியும்.
70% குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளிகள் தங்களது தண்டனைக் காலத்தில் பாதியை நிறைவுசெய்திருந்தால், அவர்களும் இந்தத் தண்டனைக் குறைப்பு வாய்ப்பைப் பெற முடியும். கடுமையான உடல்நலப் பாதிப்புகளைக் கொண்டிருக்கும் சிறைவாசிகள், அவர்களது தண்டனைக் காலத்தில் மூன்றில் இரண்டு பங்கைக் கடந்திருந்தாலே தண்டனைக் குறைப்புக்குத் தகுதியானவர்கள் ஆவார்கள்.
18-21 வயதில் புரிந்த குற்றச்செயலுக்காகத் தண்டனையை அனுபவித்துவரும் சிறைவாசிகளின்மீது வேறெந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லாத நிலையில், அவர்களது தண்டனைக் காலமும் குறைக்கப்படும். மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களோ, மரண தண்டனை விதிக்கப்பட்டு, அது ஆயுட்காலத் தண்டனையாகக் குறைக்கப்பட்டவர்களோ, மரண தண்டனை விதிக்கத்தக்க ஒரு குற்றச்செயலில் தண்டிக்கப்பட்டவர்களோ இந்தத் தண்டனைக் குறைப்பைப் பெற முடியாது.
ஆயுட்காலத் தண்டனை விதிக்கப்பட்டவர்களும் பயங்கரவாதச் செயல்கள், வரதட்சிணைக் கொலை, வல்லுறவு, கறுப்புப் பணம், போதைப் பொருட்கள் விநியோகம், ஊழல் உள்ளிட்ட கொடுங்குற்றங்களில் ஈடுபட்டவர்களின் தண்டனையும் குறைக்கப்பட மாட்டாது.
வயது, பாலினம், உடல்நிலை, குற்றத்தின் தன்மை, குற்றவாளியின் பின்னணி ஆகியவற்றின் அடிப்படையில், தண்டனைக் காலத்தைக் குறைக்கும்வகையில், மத்திய உள் துறை அமைச்சகம் வகுத்துள்ள இந்த நெறிமுறைகள் பாராட்டுக்குரியவை. சிறைத் தண்டனை விதிக்கப்படும்போதே இந்தக் கூறுகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. தண்டனை விதிக்கப்பட்ட பிறகு, சிறைவாசிகளின் நன்னடத்தை, உடல்நிலை, மனநிலை ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணித்து, அதற்கேற்பத் தண்டனைக் காலத்தை மறுவரையறை செய்ய வேண்டும்.
சிறைவாசிகளை நல்வழிப்படுத்துவதற்கான கொள்கைத் திட்டங்களும் பன்முனை முயற்சிகளும் அவசியத் தேவை. சிறைச் சீர்திருத்தம் தொடர்பாகத் தொடர்ந்து பல்வேறு கமிட்டிகள் நியமிக்கப்பட்டு, பரிந்துரைகள் பெறப்பட்டிருப்பினும் பெருமளவில் அவை நடைமுறைக்கு வரவில்லை.
கொள்ளளவுக்கு அதிகமாகக் கைதிகள் அடைக்கப்பட்டுச் சிறைகளில் இடநெருக்கடி நிலவுகிறது. தாமதமாகும் நீதியால், விசாரணைக் கைதியாகவே அடைக்கப்பட்டிருப்போரும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அத்தியாவசியச் செலவுகளுக்காகச் சிறைவாசியை நம்பியிருந்த குடும்பங்களின் நிலையும் கேள்விக்குறியாகத் தொடர்கிறது.
75-வது சுதந்திர நாளில், சிறைவாசிகளுக்குக் காட்டப்படும் கருணை, அடையாள நிமித்தமாக முடிந்துவிடாமல், காலனிய காலத்துக் குற்றவியல் சட்டங்களின் கடுமையைக் குறைத்துச் சீர்திருத்தும் நோக்கத்திலான தண்டனைக் கொள்கை நோக்கிய புதிய பாதையை உருவாக்கட்டும்.