அக்னி பாதை: வேலைவாய்ப்பு அல்ல, தேசத்தின் பாதுகாப்பு!

அக்னி பாதை: வேலைவாய்ப்பு அல்ல, தேசத்தின் பாதுகாப்பு!
Updated on
1 min read

ராணுவச் சேவையில் இளைஞர்களை ஊக்குவிக்கும் ‘அக்னி பாதை’ திட்டத்துக்கு எழுந்துள்ள எதிர்ப்புகளும் அதை முன்னிட்டு நடத்தப்படுகிற வன்முறைச் செயல்களும் கண்டனத்துக்கு உரியவை என்பதோடு, கடுமையான தண்டனைக்கும் உட்படுத்தப்பட வேண்டியவை.

ராணுவச் சேவையில் சேர்வதற்குத் தயாராகிவரும் இளைஞர்களிடையே இந்தப் புதியத் திட்டத்தால் தங்களது வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகுமோ என்ற எண்ணம் எழுந்துள்ளது. அத்தகைய எண்ணம் தவறானது என்று மத்திய அரசு போதுமான விளக்கங்களை அளித்துள்ளது.

இத்திட்டத்தில் பணியாற்றிய வீரர்களுக்குக் காவற்படைப் பிரிவுகளில் சேர்வதற்கு இடஒதுக்கீடும், வயது வரம்பில் சலுகையும் அளிக்கப்படும். மேலும், இத்திட்டத்தில் பணியாற்றும் இளைஞர்களுக்குப் பாதுகாப்புத் துறை அலுவலகங்களிலும் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களிலும் வயது வரம்புச் சலுகையுடன் கூடிய இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது அணியைச் சேர்ந்தவர்கள், பாதுகாப்புத் துறை சார்ந்த பணிகளில் சேரும்போது, வயது வரம்பில் கூடுதல் சலுகை அளிக்கப்படும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனினும், இத்திட்டம் குறித்த எதிர்மறையான எண்ணங்கள் இன்னும் நீடிப்பது துரதிர்ஷ்டம்.

மேலை நாடுகளிலும் எல்லைப் பரப்பில் சிறிய நாடுகளிலும் கட்டாய ராணுவச் சேவை என்பது ஓர் அடிப்படைக் கடமையாகப் பின்பற்றப்பட்டுவருகிறது. அங்கெல்லாம் யாரும் ராணுவச் சேவையை ஓர் வேலைவாய்ப்பாக மட்டும் பார்க்கவில்லை.

ஆனால், எல்லைப் பரப்பிலும் மக்கள்தொகையிலும் பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியாவில் ராணுவச் சேவையை உடல்திறன் கொண்ட வேலைவாய்ப்பாக மட்டுமே கருதுவது ஆபத்துகளுக்கே இட்டுச் செல்லும். ராணுவச் சேவை என்பது இந்திய எல்லையைக் காப்பதோடு நிறைவுபெற்றுவிடுவதில்லை.

உள்நாட்டில் ஏற்படும் கிளர்ச்சிகளின்போது அவற்றைக் கட்டுப்படுத்தவும், சர்வதேச அளவில் நாடுகளுக்கிடையே அமைதியை உருவாக்கும் பணிகளிலும் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்நிலையில், கண்ணியத்தை இழந்து வன்முறைச் செயல்களில் ஈடுபடும் இதுபோன்ற மனப்போக்கு உள்ளவர்கள் ராணுவத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால், உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்தியாவுக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்திவிடக்கூடிய அபாயங்கள் இருக்கின்றன.

தேவை ஏற்பட்டால், நாட்டைக் காப்பதும் நாட்டுக்காகப் பணியாற்றுவதும் இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரது அடிப்படைக் கடமை என்று இந்திய அரசமைப்பு வலியுறுத்துகிறது. மேலும், பொதுச் சொத்துகளைக் காப்பதும் வன்முறையினை முற்றாக ஒழித்தலும் அரசமைப்பு வலியுறுத்தும் மற்றொரு கடமையாகும்.

அரசமைப்புக் கடமையை வெறும் வேலைவாய்ப்பாகவே கருதி, அதை இழக்க நேருமோ என்ற எண்ணத்தில் வன்முறையில் ஈடுபடுபவர்கள், அரசமைப்பையே அவமதிக்கிறார்கள். குடிமக்களாகத் தங்களது கடமையிலிருந்து தவறும் இவர்கள் பொறுப்புமிக்க பாதுகாப்புச் சேவையை எவ்விதம் மேற்கொள்வார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

நாட்டின் பொதுச் சொத்துகளை அழிப்பதும் சேதப்படுத்துவதும் நாட்டுக்கு எதிரான கொடுங்குற்றங்கள். இச்செயல்களில் ஈடுபட்டவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். மிக முக்கியமாக, அவர்கள் இனிவரும் காலத்தில் ராணுவச் சேவையில் மட்டுமின்றி, எந்தவொரு அரசுப் பணியிலும் சேர்வதற்கான தகுதியை இழந்ததாக அறிவிக்கப்பட வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in