

போராட்டங்கள், உயிர்த் தியாகங்கள், அரசியல் மாற்றங்கள் என உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்கு மத்தியில் உதயமாகி யிருக்கிறது தெலங்கானா. இந்தியாவில் இந்தி நீங்கலாக ஒரே மொழி பேசும் மக்கள் வாழும் நிலம் இரண்டாகப் பிரிக்கப்படுவது இதுவே முதல்முறை. இனம், மொழி அடையாளங்களைத் தாண்டி பாகுபாடு, முன்னேற்றமின்மை போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து நடக்கும் பிரிவினையும் இதுதான். அன்றைக்கு ஆந்திரம்-தெலங்கானா இணைப்பைப் பற்றி, “தம்பதியர் பரஸ்பர ஒத்துழைப்புடன் நடந்துகொண்டால் நல்லது; மாறாக வேறுபட்ட மனநிலையுடன் நடந்துகொண்டால் ஆபத்தாக முடியும்” என்று தெரிவித்தார் நேரு. 57 ஆண்டுகளுக்குப் பின்னர் அவருடைய வார்த்தைகளில் பொதிந்திருந்த உண்மை வெளிப்பட்டிருக்கிறது.
கதம்பம் போன்ற நம்முடைய அமைப்பில் ஒவ்வொரு பகுதியின் நலனும் பேணப்படுவது அவசியம். சுதந்திரத்துக்குப் பின் நடந்த மொழிவாரி மாநிலங்களின் பிரிவினை இந்தியா போன்ற ஒரு பன்மைத்துவ நாட்டுக்கு மிகப் பொருத்தமான ஒன்று. தேசம் ஓர் ஒன்றியமாகவும் தேசிய இனங்கள் தம் தனித்துவ அடையாளங்களுடனும் ஒருமித்த குரல்களுடனும் நீடிக்கக் கிடைத்த அற்புதமான வழி. ஆனால், ஆட்சியாளர்களின் குறுகிய அரசியல் நோக்கங்கள் அந்த வழியை எவ்வளவு நாசப்படுத்திவிட்டன என்பதற்கு உதாரணம் தெலங்கானா. ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது அதன் தலைநகரத்திலும் குறிப்பிட்ட பிராந்தியத்திலும் மட்டுமே இல்லை; தலைநகரவாசிகளின் வசதிகள் மாநிலத்தின் கடைக் கோடி எல்லையையும் சென்றடைய வேண்டும் என்பதே தமிழகம் உள்ளிட்ட ஏனைய மாநிலங்களுக்கு தெலங்கானா உணர்த்தும் பாடம்.
தெலங்கானா பிரிவினை வரைபடத்துக்குள் முடிந்துவிட்டது. ஆனால், உண்மையான பாகப் பிரிவினை இனிதான் நடக்க வேண்டும். தெலங்கானா எதிர்கொள்ளும் பெரிய சவால் இது. நில அமைப்பில், 45% வனப்பகுதிகள், நிலக்கரி, சுண்ணாம்புக்கல் உள்ளிட்ட தாதுப் பொருட்கள் கிடைக்கும் பகுதிகள் தெலங்கானா பகுதிக்குள் வருகின்றன என்றால், ஆந்திரத்துக்கு 970 கிலோ மீட்டர் நீள கடற்கரை, 17,500 கிலோ மீட்டர் வனப் பகுதிகள் கைவசம் உள்ளன. இந்தப் பங்கீட்டின்போது சமம் என்கிற அளவுகோல் உண்மையில் சமமான பங்கீட்டைத் தராது என்பதை மத்திய அரசும், சீமாந்திர அரசும் மக்களும் புரிந்துகொள்ள வேண்டும். வளர்ச்சியின் நிழல் படாத பகுதி என வர்ணிக்கப்படும் தெலங்கானா, இன்றைய சீமாந்திரத்தின் வளர்ச்சியை அடையவே இன்னும் சில தசாப்தங்கள் ஆகும் என்பதே கள யதார்த்தம். அந்தப் பள்ளம் நிரப்பப்பட வேண்டும் என்றால், ஏற்கெனவே உள்ள மேட்டைவிடவும் நான்கு சட்டி மணல் கூடுதலாக அதற்கு ஒதுக்கப்படுவதே நியாயமாக இருக்கும்.
மத்திய ஆட்சியில் தெலுங்கு தேசம் கட்சி பங்கேற்றிருக்கும் சூழலில், இந்த விஷயத்தில் சீமாந்திரத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்த முற்படலாம். மத்திய அரசு அதற்கு இடம் கொடுக்காமல், மத்திய அரசாகச் செயல்பட வேண்டும்!