

உலகளவில் மனிதர்களின் சராசரி வயது 72.6 ஆக இருக்கும் நிலையில், இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் அதற்கும் கீழாகத்தான் இருக்கிறது. எனினும், தொடர்ந்து அது அதிகரித்துக்கொண்டிருப்பது சமீபத்தியக் கணக்கெடுப்புகளிலிருந்து தெரியவருகிறது.
2014-18 ஆண்டுகளில் 69.4 ஆக இருந்த இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம், 2015-19 ஆண்டுகளில் 69.7 ஆக உயர்ந்துள்ளது. சராசரி ஆயுட்காலம் நீடிக்கும்தோறும் ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் பயன்கள் மூத்த குடிமக்களுக்குத் தடையின்றிக் கிடைப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
இத்திட்டங்களில் நிலவும் குறைபாடுகளைக் களைந்து இன்னும் வலுப்படுத்த வேண்டும். ஆயுட்கால நீட்டிப்பு என்பது வாழ்க்கைத் தரத்தின் மேம்பாட்டையும் உள்ளடக்கியதாக இருந்தால் மட்டுமே அதன் நோக்கம் நிறைவேறும்.
முதியவர்களைப் பராமரிப்பது என்பது உலகளவில் மிக முக்கியமான சமூகப் பிரச்சினைகளில் ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக, பொருளாதார வளர்ச்சி பெற்ற மேலை நாடுகளிலும் அதிக ஆயுட்காலம் பெற்ற மக்களைக் கொண்ட ஜப்பான் போன்ற நாடுகளிலும் அரசின் கொள்கை முடிவுகளைக் கோரும் தீவிரமான பிரச்சினைகளில் ஒன்றாக உள்ளது. குடும்பம் மட்டுமின்றி சமூகம், அரசு ஆகியவற்றுக்கும் முதியோர்களைப் பராமரிப்பதில் பெரும் பொறுப்பு உண்டு.
தங்களது உழைப்பின் வாயிலாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பங்காற்றிய குடிமக்களுக்கு, அவர்களது ஓய்வுக் காலத்தில் பாதுகாப்பான வாழ்வை உறுதிப்படுத்த வேண்டியது, மக்கள் நல அரசின் தவிர்க்கவியலாத பொறுப்புகளில் ஒன்றாகும்.
முதியவர்களைப் பராமரிப்பது குடும்பங்களின் முதன்மையான கடமைகளில் ஒன்றாக இருந்த நிலை மாறிவிட்டது. பணிசார் புலம்பெயர்வுகள் அதிகரித்துள்ள இன்றைய காலகட்டம், முதியவர்களையும் அவர்களைப் பராமரிக்க வேண்டிய அடுத்த தலைமுறையையும் தனித்தனித் தீவாக ஆக்கியுள்ளது.
இந்நிலையில், மற்றொருவர் உதவியுடன் வாழ வேண்டியிருக்கும் முதியவர்களைப் பராமரிப்பதற்குப் பிரத்யேகமான ஓய்வு இல்லங்கள் பெரும் எண்ணிக்கையில் உருவாக்கப்பட வேண்டும். முதுமையில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் உடல்நலக் குறைபாடுகளுக்குச் சிகிச்சைபெறும் வாய்ப்புகளும் எளிதாக்கப்பட வேண்டும்.
இதற்கான முயற்சிகளை மத்திய - மாநில அரசுகள் எடுத்துவருகின்றன என்றபோதும், நாட்டின் மொத்த மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது, அவற்றின் விகிதாச்சாரம் மிகவும் குறைவு.
இந்தியாவின் 75-வது சுதந்திர நாளையொட்டி, நாடு முழுவதும் முதியவர்களுக்கு 75 புதிய ஓய்வு இல்லங்கள் தொடங்கப்படவிருக்கின்றன. ஏற்கெனவே, மத்திய அரசு நடத்திவரும் ஓய்வு இல்லங்கள் 650. ஆனால், 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 60 வயதைக் கடந்தவர்களின் தொகையானது சுமார் 10.38 கோடி.
உலகளவில் 60 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கையில் இது 8.6%. மூத்த குடிமக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருவதும் கவனத்துக்குரியது. 2015-ல் 8% ஆக இருந்த முதியவர்களின் எண்ணிக்கை 2050-ல் 19% ஆக உயரவிருக்கிறது.
அடுத்த 20 ஆண்டுகளில், ஏறக்குறைய ஐந்தில் ஒருவர் 60 வயதைக் கடந்தவராக இருப்பார் என்கிறபோது, மூத்த குடிமக்களைப் பராமரிப்பதற்கான திட்டங்களை வகுத்துச் செயல்பட வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கும் இருக்கிறது.