

யேல், கொலம்பியா பல்கலைக்கழகங்கள் இணைந்து அண்மையில் வெளியிட்ட சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டெண்-2022 அறிக்கையில், இந்தியா கடைசி நாடாக இடம்பெற்றிருப்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியாவுக்கு முன்னுள்ள எதிர்காலச் சவால்களை எடுத்துக்காட்டியுள்ளது.
சர்வதேச அளவில் நாடுகளிடையே சுற்றுச்சூழலின் நீடித்ததன்மையைத் தரவரிசைப்படுத்துவதில் இந்தக் குறியீட்டெண் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கடந்த 2002-ம் ஆண்டிலிருந்து உலகப் பொருளாதார மன்றத்தின் சார்பில் யேல், கொலம்பியா பல்கலைக்கழகங்கள் இணைந்து, இந்தக் குறியீட்டெண்களை வெளியிட்டுவருகின்றன.
நடப்பாண்டில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 180 நாடுகளின் வரிசையில் டென்மார்க், பிரிட்டன், பின்லாந்து ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன. இந்தியா கடைசி நாடாக இடம்பெற்றுள்ளது. சுற்றுச்சூழலைப் பராமரிப்பதில் பாகிஸ்தான், வங்கதேசம், வியட்நாம், மியான்மர் நாடுகளையடுத்து மிகவும் மோசமான நிலையிலிருக்கும் நாடாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறியீட்டெண்ணுக்கான மொத்தப் புள்ளிகள் 100 என்று கணக்கிடப்பட்டுள்ள நிலையில், இந்தியா பெற்றிருப்பது 18.6 மட்டுமே. காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதும், பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றம் தொடர்ந்து அதிகரித்துவருவதும் இந்தியா உடனடியாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான செயல்பாடுகள், மனித உடல்நலத்துக்கு ஏற்ற சுற்றுச்சூழலை உறுதிப்படுத்துவது, சூழலியல் அமைப்பைப் பாதுகாப்பது ஆகிய மூன்றும் இந்தக் குறியீட்டெண்ணின் முதன்மை நோக்கங்களாகும். சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளை 11 ஆக வகைபிரித்து, அவற்றின் கீழ் 40 செயல்திறன் குறியீடுகளை வகுத்து, அவற்றின் அடிப்படையிலேயே இவை வெளியிடப்பட்டுள்ளன.
எனினும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், இந்தக் குறியீட்டெண்களை ஏற்றுக்கொள்ளவில்லை. குறியீட்டெண்ணைத் தீர்மானிப்பதற்கான அளவீடுகள் ஆதாரமற்றவை, தொடர்பில்லாத வேறு பொருண்மைகளிலிருந்து பெறப்பட்ட வெறும் அனுமானங்கள் மட்டுமே என்றும் இது அறிவியல்பூர்வமான ஆய்வுமுறைமையல்ல என்றும் தன்னுடைய மறுப்பைத் தெரிவித்துள்ளது.
அளவீடுகள் தொடர்பாக இந்தியாவுக்கு மாற்றுக் கருத்துகள் இருந்தபோதும் குறியீட்டெண் அறிக்கையின் முடிவுகளையும் பரிந்துரைகளையும் இந்தியா அவசியம் பரிசீலித்தாக வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
சுற்றுச்சூழல் கொள்கையின் சிறப்பான விளைவு என்பது அதற்காகச் செலவிடும் நிதியாதாரங்களுடன் தொடர்புடையது என்பதையும் இந்தக் குறியீட்டெண் அறிக்கை ஏற்றுக்கொண்டுள்ளது.
குடிமக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வசதிகளையே இன்னும் உறுதிப்படுத்த முடியாத நிலையில், கார்பன் வெளியேற்றத்தின் அளவைப் பூஜ்ஜியமாகக் குறைப்பது என்ற வளர்ந்த நாடுகளின் இலக்கை இந்தியாவுக்குத் திணிக்க முடியுமா என்ற நோக்கிலும் சில பார்வைகள் முன்வைக்கப்படுகின்றன.
வளர்ந்த நாடுகளைப் போல இந்தியாவால், சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டங்களுக்காகத் தற்போது பெருமளவு நிதியை ஒதுக்க முடியாமலிருக்கலாம். ஆனால், அடுத்துவரும் பத்தாண்டுகளில் உலகளவில் அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடாக இந்தியா மாறவிருக்கும் நிலையில், குடிமக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான ஓர் வாழ்விடச் சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு தவிர்க்க முடியாதது.