

மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கிறார் ஜெயலலிதா. அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். பதவியேற்பு விழாவுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டதும் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் விழாவில் பங்கேற்றதும் நல்ல தொடக்கம். முதல் வரிசையில் அவர்களுக்கு உரிய இடங்களை ஒதுக்காதது சர்ச்சையாகி இருக்கிறது. இப்படியான சர்ச்சைகளைத் தவிர்ப்பதும் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் சேர்ந்து கைகோத்துப் பயணிப்பதுமே மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவும். மக்களும் அதையே எதிர்பார்க்கிறார்கள்.
முதல்வர் பொறுப்பேற்ற உடனேயே தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் கடமைகளைத் தொடங்கியிருக்கிறார் ஜெயலலிதா. விவசாயிகளின் துயர் போக்கும் வகையில், கூட்டுறவு வங்கிகளுக்குச் சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடிசெய்யும் உத்தரவில் கையெழுத்திட்டிருக்கிறார். இதன் மூலம் கூட்டுறவு வங்கிகளுக்கு ஏற்படும் ரூ.5,780 கோடி இழப்பை அரசு ஏற்கும். வீடுகளில் 100 யூனிட்டுகள் வரையிலான மின்பயனீட்டாளர்களுக்கான மின்கட்டணத்தை ரத்துசெய்திருக்கிறார். இதன் காரணமாக ஆண்டுதோறும் மின்வாரியத்துக்கு ஏற்படும் ரூ.1,607 கோடி இழப்பை அரசு ஏற்கும். இதேபோல, கைத்தறி நெசவாளர்களுக்கான கட்டணமில்லா மின்சாரம் 200 யூனிட்களாகவும் விசைத்தறிக்கான கட்டணமில்லா மின்சாரம் 750 யூனிட்டுகளாகவும் உயர்த்தப்பட்டுள்ளன. படித்த இளம்பெண்களின் திருமணத்துக்காக அரசு வழங்கும் தங்கத்தின் உதவி நான்கு கிராமிலிருந்து எட்டு கிராமாக உயர்த்தப்பட்டுள்ளது. எல்லாவற்றையும்விட முக்கியமானது, படிப்படியாக மதுக் கடைகளை மூடும் முடிவு. இனி, மதுக் கடைகள் காலை 10 மணிக்குப் பதிலாக நண்பகல் 12 மணிக்குத் திறக்கப்படும். மேலும், 500 டாஸ்மாக் சில்லறை மதுக் கடைகள் மூடப்படும்.
பெரும்பாலானவை வரவேற்புக்குரிய முடிவுகள். பொதுவாக, மக்களுக்கான நலத் திட்டங்களை இப்படி அரசு அறிவிக்கும்போதெல்லாம் அதைப் பொருளாதார இழப்பாகக் கணக்கிட்டுக் காட்டி, வாதம் செய்வது இயல்பு. அது ஒரு மேட்டிமைத்தனமான பார்வைதான். இந்த விஷயத்தில் தமிழகம் எப்போதுமே விமர்சனங்களைப் பொருட்படுத்தாத, இன்னும் சொல்லப்போனால் ஏனைய மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக, நாட்டுக்கே முன்னோடி மாநிலமாக இருந்துவருகிறது. ஒரே விஷயம் அரசு நினைவில் கொள்ள வேண்டியது, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அளிப்பது பிரச்சினை அல்ல; அதற்கான நிதியாதாரத்தை உருவாக்குவதும் மேம்படுத்துவதும் தக்கவைப்பதுமே சவால்கள்.
தமிழகத்தைப் பொறுத்த அளவில் நிதியாதாரத்தைப் பெருக்குவதற்கான ஆதாரங்களுக்கு குறைவு இல்லை. தொடர்ந்து வருவாய்ப் பெருக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். அவ்வளவே. இதுவரை தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளுக்கான நிதியாதாரங்களில் ஒன்றாக டாஸ்மாக் வருமானம் இருந்திருக்கிறது. இப்போது படிப்படியாக மதுவிலக்கைக் கொண்டுவரவுள்ள சூழலில், புதிய நிதியாதாரங்களை அரசு கண்டறிந்து, அவற்றிலிருந்து வருவாயைப் பெருக்க வேண்டும். ஆட்சிப் பொறுப்பேற்ற சூட்டோடு சூடாக இதே வேகத்தில் தொழில் துறையை அரசு முடுக்கிவிட வேண்டும்.
தமிழக முதல்வரும் அமைச்சர்களும் அணுக முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்பது தேர்தல் சமயத்தில் நாடெங்கும் எதிரொலித்த விமர்சனங்களில் ஒன்று. மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான உறவு, முக்கியமாக ஊடகங்களுடனான உறவு நெருக்கமானதாக அமைய வேண்டும்.
சமூக நலத் திட்டங்களுடன் ஒரு அரசு தன் பயணத்தைத் தொடங்குவது எப்போதுமே விளிம்புநிலை மக்களின் வாழ்வில் புதிய நம்பிக்கைகளையும் புத்தெழுச்சியையும் உருவாக்கக் கூடியது. ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி அவர்களின் மகிழ்ச்சியைக் கொண்டே அளவிடப்படும். நல்ல தொடக்கம். மக்கள் வாழ்க்கை சிறக்கட்டும்!