

கௌதம புத்தருடன் தொடர்புடையதாக நம்பப்படும் ‘கபிலவஸ்து புனித எச்சங்கள்’ நான்கும் இந்திய விமானப் படையின் சிறப்பு விமானத்தில் மிகப் பெரும் பாதுகாப்புடன் மங்கோலியாவைச் சென்றடைந்துள்ளன.
ஜூன் 14 தொடங்கி இரு வாரங்களுக்கு மங்கோலியாவில் நடைபெறும் புத்த சமய விழாவில் இந்தப் புனிதச் சின்னங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. 1898-ல் பிஹாரில் கண்டறியப்பட்ட இந்தப் புனிதச் சின்னங்கள், புது டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டுவருகின்றன. ‘ஏஏ’ என்ற பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ள இவை இந்தியாவின் பாரம்பரியச் சொத்துக்களாகும்.
விதிமுறைகளின்படி, இவ்வகைப்பாட்டில் உள்ள பாரம்பரியச் சின்னங்களை இந்தியாவுக்கு வெளியே எடுத்துச்செல்லக் கூடாது என்றாலும் விதிவிலக்காகக் கலாச்சார அமைச்சகத்தின் சார்பில் அவை அனுப்பப்பட்டுள்ளன. இதற்கு முன்பு, இந்தப் புனிதச் சின்னங்கள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தின்போது 2013-ல் இலங்கைக்கு அனுப்பப்பட்டன. தற்போது, மங்கோலியாவின் வெளியுறவுத் துறை விடுத்த வேண்டுகோளை ஏற்று அங்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தியக் கலாச்சாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையில், 25 பேர் அடங்கிய குழு இந்தப் பாரம்பரியச் சின்னத்துடன் மங்கோலியாவை அடைந்துள்ளது.
பௌத்தம், இந்தியாவுடன் மற்ற ஆசிய நாடுகளை இணைக்கும் பண்பாட்டுப் பாலம். அந்தப் பண்பாட்டுப் பிணைப்புகளை வலுப்படுத்துவதன் வாயிலாக, ஆசிய நாடுகளுக்கிடையே நட்புறவை மீட்டெடுக்கும் வாய்ப்புகளை இந்தியா கையில் எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.
கடந்த மே மாதம் புத்த பூர்ணிமையன்று நேபாளத்தின் லும்பினியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு புத்தரின் சிலைக்கு மலர் தூவி வணங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் உலகளவில் பெரும் கவனத்தைப் பெற்றது. புத்தர் பிறந்த தலமான லும்பினியில் இந்தியாவால் அமைக்கப்படவுள்ள சர்வதேச பௌத்த மையத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
‘புத்தரின் கொள்கைகளே இவ்வுலகம் அமைதி பெறுவதற்கான வழி’ என்று இந்தியப் பிரதமர் அங்கு விடுத்த செய்தி, இந்தியா ஒற்றைச் சமய அடையாளத்துக்குள் தன்னைக் குறுக்கிக்கொண்டுவிடவில்லை என்பதையும் சேர்த்தே உணர்த்தியது.
பௌத்த சமயத்தின் மையம் இந்தியாவே என்ற முன்னெடுப்புக்குப் பின்னால், ஆசிய நாடுகளிடையே சீனாவின் செல்வாக்கைக் குறைப்பதற்கான ஒரு ராஜதந்திரக் காய்நகர்த்தலும் உண்டு என்ற பார்வைகளும் நிலவுகின்றன. எனினும், இந்துத்துவ அரசியலைப் பிரதானமான கொள்கையாகக் கொண்டிருக்கும் பாஜக மத்தியில் ஆட்சியில் இருப்பதால் இந்தியாவின் மதச்சார்பின்மைக் கொள்கை கேள்விக்குரியதாகிவிட்டது என்ற அச்சத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பிவரும் நிலையில், ஆசிய நாடுகளைப் பௌத்தத்தின் அடிப்படையில் ஒருங்கிணைக்கும் இந்த முடிவு, இந்தியா அதன் பாரம்பரியமான சமயங்கள் அனைத்துக்கும் உரிய முக்கியத்துவத்தை வழங்கத் தவறவில்லை என்பதற்கான ஓர் உதாரணமாகியிருக்கிறது. தமக்குள் மாறுபட்ட பல்வேறு சமயத் தத்துவங்களின் பண்பாட்டுச் செழிப்பு, இந்தியாவின் பெருமிதங்களில் ஒன்று. அது தொடர வேண்டும்.