

கடலூர் மாவட்டம் அருங்குணம் குச்சிப்பாளையத்தில் கெடிலம் ஆற்றில் மூழ்கிச் சிறுமிகள் உட்பட ஏழு பெண்கள் உயிரிழந்திருப்பது பரிதாபத்துக்குரியது. தடுப்பணைக்காக மணல் எடுக்கப்பட்ட பள்ளத்தில் சிக்கி அவர்கள் இறந்துள்ளனர். தடுப்பணைக் கட்டுமானம், ஆற்றில் மணல் எடுத்தல் ஆகியவற்றில் காட்டப்பட்டுவரும் அலட்சியம் எத்தனை உயிர்களைப் பறிக்கக் காரணமாக இருக்கிறது என்பதற்கு மேலும் ஓர் உதாரணமாகியிருக்கிறது இந்தத் துயரச் சம்பவம்.
நீர்நிலைகளில் நேரும் இத்தகைய உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும். பாதுகாப்பற்ற நீர்நிலைகளில், அதைக் குறித்த எச்சரிக்கைப் பலகைகள் நிறுவப்பட வேண்டும். அதுபோல, பள்ளிக் குழந்தைகளுக்கு உடற்பயிற்சி வகுப்புகளின் ஒரு பகுதியாக, நீச்சல் பயிற்சி வழங்குவது குறித்தும் ஆலோசிக்க வேண்டும்.
ஏழு பெண்களின் உயிரிழப்பு தேசிய அளவில் கவனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார். நீரில் மூழ்கி இறந்த அனைவருமே பட்டியல் வகுப்பினர் என்பதும் வீடுகளில் கழிப்பறை வசதியில்லாத காரணத்தாலேயே அவர்கள் காலையில் நீர்நிலைக்கு வந்திருக்கிறார்கள் என்பதும் மேலும் துயரத்துக்குரிய செய்திகள்.
பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்காகப் பல்வேறு திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்திவருகிற மத்திய - மாநில அரசுகள், ஊரகங்களில் வாழும் பெண்களின் கண்ணியமான வாழ்க்கைக்குக்கூட இன்னும் உறுதியளிக்கவில்லை என்பதற்காக வெட்கித் தலைகுனிய வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள் சரிபாதிப் பிரதிநிதித்துவம் வகிக்கும் இன்றைய காலகட்டத்தில், ஊரகப் பெண்களின் கண்ணியத்தைக் காப்பதற்குப் பெண் பிரதிநிதிகள் முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம்.
மாநில உரிமைகளுக்காக மத்திய அரசோடு தொடர்ந்து மோதிக்கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசு, எளிய மக்களுக்குப் பெரும்பயன் அளிக்கும் ‘தூய்மை இந்தியா’ போன்ற மத்திய அரசின் திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வதில் எந்தத் தயக்கத்தையும் காட்டக்கூடாது. உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு, ‘தூய்மை இந்தியா’ திட்டமும் ஒரு காரணமாக இருந்ததை அரசியல் விமர்சகர்கள் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
மத்திய-மாநில உறவுச் சிக்கல்கள், மதச்சார்பின்மை அரசியல் என்ற முக்கிய விவாதங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, எளிய மக்களின் கண்ணியமான வாழ்க்கைக்கான ஒரு முயற்சி பெரும் அரசியல் வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கிறது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் குறைகளும் போதாமைகளும்கூட அதே அளவுக்குச் சுட்டிக்காட்டப்படுகின்றன என்றாலும் அத்திட்டத்தால் பயனடைவதற்காக இன்னமும் நாடு முழுவதும் பல்லாயிரம் பேர் காத்திருக்கிறார்கள் என்பதைப் புறந்தள்ளிவிட முடியாது.
ஒட்டுமொத்த நாடும் தலைகுனிய வேண்டியிருக்கும் இந்த அவலத்தைக் கடலூர் மாவட்ட நிர்வாகம் எதிர்கொண்டிருக்கும் விதம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. ஆறு, குளம், ஏரி மற்றும் தடுப்பணை உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிப்பதற்கு ஏற்கெனவே தடைவிதிக்கப்பட்டுள்ளது என்ற தமது முந்தைய அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் நினைவூட்டியுள்ளது. அதைவிடவும், ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை இன்னும் தீவிரமாகச் செயல்படுத்துவதே மாவட்ட நிர்வாகத்தின் முன்னுள்ள பொறுப்பு.