

பெருந்தொற்றுக்குப் பிறகு கடும் நிதிச் சுமையை எதிர்கொண்டுள்ள மாநிலங்கள் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த சரக்கு மற்றும் சேவை வரிக்கான (ஜிஎஸ்டி) இழப்பீட்டை மத்திய அரசிடமிருந்து எதிர்பார்த்திருந்த நிலையில் மே 31, 2022 வரையிலான நிலுவைத் தொகையை மொத்தமாக மத்திய அரசு வழங்கியிருப்பது இப்பிரச்சினைக்கு ஒரு தற்காலிகத் தீர்வை அளித்துள்ளது. இழப்பீடாக வழங்கப்பட்டிருக்கும் மொத்தத் தொகை ரூ.86,912 கோடி.
இவற்றில் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டிருப்பது ரூ.9,602 கோடியாகும். ஜிஎஸ்டி இழப்பீடு நிதியில் ரூ.25,000 கோடி மட்டுமே இருந்ததாகவும் எஞ்சிய தொகையனைத்தும் மத்திய அரசு தனது மற்ற நிதியாதாரங்களிலிருந்தும் இழப்பீட்டுக்கான சிறப்புத் தீர்வைகளிலிருந்தும் வழங்கியிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஜிஎஸ்டி இழப்பீடு உடனுக்குடன் வழங்கப்படவில்லை என்பது மத்திய அரசின் மீது வைக்கப்பட்ட தொடர் குற்றச்சாட்டுகளில் ஒன்றாக இருந்தது.
இப்போது அந்தக் குற்றச்சாட்டு முடிவுக்கு வந்திருக்கிறது. அதே நேரத்தில், பெருந்தொற்றின் காரணமான பொருளாதாரப் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, ஜிஎஸ்டி இழப்பீட்டை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கோருகின்றன.
ஆனால், தற்போது மத்திய அரசு அளித்துள்ள விளக்கங்களின்படி, ஜூன் மாதத்துடன் ஜிஎஸ்டி இழப்பீடு முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்றே தெரிகிறது. ஜூலை 1, 2017-ல் நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி சட்டத்தின்படி, வருவாய் இழப்பைச் சந்திக்கும் மாநிலங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே இழப்பீடு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய - மாநில அரசுகளின் பிரதிநிதிகளையும் வரிகள் தொடர்பான வல்லுநர்கள், சட்ட நிபுணர்கள் ஆகியோரையும் உள்ளடக்கி ஜிஎஸ்டி குறைதீர்ப்பு அமைப்பு ஒன்றை உருவாக்கும் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுக்க உள்ளதாகத் தெரிகிறது.
அடுத்து நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களின் கருத்தேற்புக்குப் பிறகு இது நடைமுறைக்குக் கொண்டுவரப்படலாம். ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய - மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது என்று அண்மையில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகே இப்படியொரு குறைதீர்ப்பு அமைப்பின் தேவை உணரப்பட்டுள்ளது. குறைதீர்ப்பு நடைமுறைகளில் வாக்கெடுப்பும் ஒன்றாகச் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது.
மத்திய அரசுக்கு மூன்றிலொரு பங்கு வாக்குகளும் மாநில அரசுகளுக்கு மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளும் அளிக்கப்படும்; மொத்த வாக்குகளில் நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மையுடனேயே எந்தவொரு குறைதீர்ப்பும் முடிவுசெய்யப்படும் என்பதாக இது குறித்து வெளிவந்திருக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜிஎஸ்டி குறித்த அதிகாரம் பெரிதும் மத்திய அரசின் கைகளிலேயே இருக்கும் நிலையில், மத்தியில் மட்டுமின்றி பெரும்பான்மையான மாநிலங்களிலும் ஒரே கட்சியே ஆட்சியில் இருக்கும் நிலையில் மாநிலங்கள் முன்வைக்கும் குறைதீர்ப்புக் கோரிக்கைகளுக்கு இப்படியொரு வாக்கெடுப்பு நடைமுறை எவ்விதம் தீர்வாக அமையக்கூடும் என்ற கேள்வியும் எழுகிறது. எது எப்படியிருப்பினும், மத்திய - மாநில அரசுகளுக்கிடையில் வரி வருவாய்ப் பகிர்வு குறித்த கருத்தொருமிப்பு மிகவும் அவசியமானது.