

குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் நடைபெற்ற கல்வியமைச்சர்களின் இரண்டு நாட்கள் மாநாடு, புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதைத் திட்டவட்டமாகத் தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
புதிய கல்விக் கொள்கையின்படி முன்மாதிரிப் பள்ளிகளாக ‘பிஎம் ஸ்ரீ’ என்ற பெயரில் புதிய பள்ளிகள் தொடங்கப்படும் என்று அம்மாநாட்டில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். தற்போது பின்பற்றப்பட்டுவரும் 10 2 முறைக்கு மாறாக, மழலையர் பள்ளியில் தொடங்கி மேனிலைப் பள்ளி வரைக்கும் 5 3 3 4 முறையைப் பின்பற்றவும் அதற்கேற்ப ஆசிரியர் பயிற்சிப் படிப்புகளை வடிவமைக்கவும் பள்ளிக் கல்வியுடன் தொழிற்திறன் கல்வியை அளிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதே நேரத்தில், பள்ளிக் கல்வியில் தாய்மொழிக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தொடர்ந்து உறுதியளித்துவருகிறது. இம்மாநாட்டில் உரையாற்றிய மத்திய கல்வித் துறை அமைச்சர் எந்தவொரு மொழியும் இந்தி அல்லது ஆங்கிலத்துக்கு எவ்வகையிலும் குறைந்தது அல்ல என்று குறிப்பிட்டிருப்பதோடு குஜராத்தி, தமிழ், பஞ்சாபி, அஸ்ஸாமி, வங்காளி, மராத்தி என அனைத்து மொழிகளும் தேசிய மொழிகளே என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்திய அரசமைப்பின்படி, தேசிய மொழிகள் என்று எந்த மொழியும் வரையறுக்கப்படவில்லை. அலுவல் மொழி என்றே இந்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அரசமைப்பின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகள் தேசிய மொழிகள் என்றோ அலுவல் மொழிகள் என்றோ குறிப்பிடப்படவில்லை. எனவே, தேசிய மொழிகள் என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் குறிப்பிடுவது அரசமைப்புடன் தொடர்பில்லாத பொதுவான ஒரு கருத்தாகத்தான் கொள்ளப்பட வேண்டும்.
எதிர்காலத்துக்கான முன்மாதிரிப் பள்ளிகளாக ‘பிஎம் ஸ்ரீ’ பள்ளிகளை உருவாக்க அனைத்து மாநிலங்களிடமிருந்தும் கல்வியாளர்களிடமிருந்தும் மத்திய கல்வித் துறை அமைச்சர் ஆலோசனைகளையும் கேட்டிருக்கிறார். ஏற்கெனவே மத்திய அரசால் கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகள் நடத்தப்பட்டுவரும் நிலையில் மேலும் புதிதாக ஒரு பள்ளி அமைப்புமுறையைத் தொடங்க வேண்டியதன் அவசியம் விவாதிக்கப்பட வேண்டியது.
இம்மாநாட்டில் தமிழ்நாடு சார்பாகக் கல்வித் துறை அமைச்சர் கலந்துகொள்ளாத நிலையில், மாநில கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்காக 13 பேர் கொண்ட குழு ஒன்றைத் தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. இக்குழுவுக்குத் தலைவராக கல்வியாளரை நியமிக்காமல், ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கல்வித் துறை மத்திய, மாநில அரசுகளுக்குப் பொதுவான ஒத்திசைவுப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதால் எழுவதற்கு வாய்ப்புள்ள சட்டரீதியான சிக்கல்களை முன்கூட்டியே களைவதற்கான ஏற்பாடாக இதைக் கருதலாம்.
10 2 முறை தொடர வேண்டும்; 3,5,8 வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வுகள் நடத்தக் கூடாது; இரு மொழித் திட்டமே தொடர வேண்டும்; கலை, அறிவியல் கல்லூரிகளுக்குப் பொது நுழைவுத் தேர்வு கூடாது என்பது உள்ளிட்ட பல விஷயங்களில் புதிய கல்விக் கொள்கையோடு தமிழ்நாடு மாறுபட்டு நிற்கிறது. நியமிக்கப்பட்டிருக்கும் கல்விக் கொள்கைக் குழு இச்சிக்கல்களுக்கு ஒத்திசைவான தீர்வுகளை எங்ஙனம் முன்வைக்கப்போகிறது என்பதே தமிழ்நாட்டின் எதிர்பார்ப்பு.