

நிதீஷ் குமார் தலைமையிலான பிஹார் மாநில அரசு, சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தாமே மேற்கொள்வது என்று முடிவெடுத்து, அதற்காக ரூ.500 கோடியை ஒதுக்கீடு செய்திருப்பது, சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்திவரும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
பிஹாரில் தொடங்கப்படவுள்ள சாதிவாரிக் கணக்கெடுப்பு 2023 பிப்ரவரியில் நிறைவுபெறும் என்று என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு நடத்தும் தேசிய அளவிலான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2019 மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு, பெருந்தொற்று காரணமாக நிறுத்திவைக்கப்பட்டு, தற்போது அப்பணிகள் நடந்துவருகின்றன.
மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும் என்று சமூகநீதி அரசியல் பேசப்படும் பிஹார், மஹாராஷ்டிரம், தமிழ்நாடு, ஒடிஷா முதலான மாநிலங்களிடமிருந்து கோரிக்கைகள் எழுந்த நிலையில், மத்திய அரசு அதற்குச் செவிசாய்க்கவில்லை. மத்திய அரசு தற்போது நடத்திவரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பழங்குடியினரும் பட்டியல் இனத்தவரும் மட்டுமே சாதிவாரியாகக் கணக்கெடுக்கப்பட்டுவருகின்றனர். அதுவும்கூட, மக்களவையிலும் மாநிலச் சட்டமன்றங்களிலும் அவர்களது எண்ணிக்கைக்கேற்ப பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று அரசமைப்பின் கட்டாயத்தில்தான்.
2021 ஜூலையில் மக்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு வாய்ப்பில்லை என்று உறுதியாகத் தெரிவித்தார். அப்போதே மத்திய அரசு தன் முடிவை மனுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிஹார் முதல்வர் நிதீஷ் குமார் கோரிக்கை விடுத்தார். சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று நவம்பர் 2021-ல் ஆந்திரப் பிரதேசச் சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மத்திய அரசு தன் முடிவிலிருந்து பின்வாங்கவில்லை. டிசம்பர் 2021-ல் மாநிலங்களவையில் சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து எழுத்துபூர்வமாக அளித்த பதிலிலும், அமைச்சர் நித்யானந்த் ராய் தனது முந்தைய பதிலையே திரும்பவும் எடுத்துரைத்தார்.
மத்தியில் ஆளும் பாஜக, மாநிலங்களிலும் தனது செல்வாக்கை விரிவுபடுத்த பிற்பட்டோர் அரசியலைக் கையிலெடுத்துள்ளது. பிற்பட்ட வகுப்பினர்களுக்கான தேசிய ஆணையத்துக்கு அரசமைப்புத் தகுதியை அளித்ததை பாஜக தனது சாதனைகளில் ஒன்றாக முன்வைக்கிறது.
என்றாலும், சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்துவதில் பெருந்தயக்கம் காட்டவும் செய்கிறது. குறிப்பிட்ட சில பிரிவினர் ஒரு மாநிலத்தில் பிற்பட்டோராகவும் மற்ற மாநிலங்களில் முற்பட்ட வகுப்பினராகவும் இருந்துவரும் நிலையில், இந்தக் கணக்கெடுப்பை நடத்துவது பாஜகவுக்குத் தேசிய அளவில் சங்கடத்தை உருவாக்கும் என்று கருதி மாநிலங்களே இக்கணக்கெடுப்புகளை நடத்திக்கொள்ளலாம் என்று கூறி விலகிநிற்கிறது.
இந்நிலையில்தான், பாஜக கூட்டணியில் அங்கம்வகிக்கும் பிஹார் முதல்வர் நிதீஷ் குமார், சாதிவாரிக் கணக்கெடுப்பை மாநில அரசே மேற்கொள்ளும் முடிவை எடுத்திருக்கிறார். அதே நேரத்தில் பாஜக அல்லாத மற்ற கட்சிகளால் கர்நாடகத்திலும் தெலங்கானாவிலும் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்புகள் இதுவரை வெளியிடப்படவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.