

சென்னை மாநகரின் சாலைகள் மற்றும் தெருக்களின் பெயர்களில் உள்ள சாதி அடையாளங்கள் விரைவில் களையப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 13வது மண்டலம், 171 வார்டில் உள்ள ஒரு தெருவின் பெயர்ப் பலகையில் சாதிப் பெயரை நீக்கியிருப்பதை அடுத்து எழுந்துள்ள இந்த எதிர்பார்ப்பு சமூக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில் வெளியிடப்படும் பள்ளி மாணவர்களுக்கான அனைத்துப் பாடநூல்களிலும் அறிஞர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரின் பெயர்களுக்குப் பின்னால் குறிப்பிடப்பட்டுவரும் சாதிப் பெயர்கள் தவிர்க்கப்பட்டன.
ஏற்கெனவே, இந்த முயற்சிக்குப் பெரும் பாராட்டுகள் குவிந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக தெருக்களின் பெயர்களிலும் சாதிய ஒட்டுகளைத் தவிர்க்கும் முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். செங்கல்பட்டில் 1929-ல் நடந்த முதலாவது சுயமரியாதை மாநாட்டில், தமிழ்நாட்டு மக்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயர்கள் போட்டுக்கொள்ளும் வழக்கத்தைத் தவிர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஒரு நூற்றாண்டில் இந்தத் தீர்மானம் கட்சி, கொள்கை வேறுபாடுகளைக் கடந்து பரவலாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி சாதாரண மக்களும்கூட பரவலாகத் தங்கள் பெயரோடு சாதிகளைக் குறிப்பிடும் பெயர்களை இணைத்துக்கொள்வதைத் தவிர்த்துவருகின்றனர். எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில், பெரியாரின் நூற்றாண்டு விழாவையொட்டி தெருப் பெயர்களில் உள்ள சாதி ஒட்டுகளை நீக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. என்றாலும், அது இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அந்த அரசாணைக்குப் புத்துயிர் கொடுக்கும் என்று நம்பலாம்.
பெரியாரின் அரசியல் வழித்தோன்றல்களான திமுக, அதிமுக என்ற இரு பெரும் திராவிடக் கட்சிகளும் சாதிப் பெயர்களை வெளிப்படையாகத் தவிர்க்கும் அதே நேரத்தில், அவர்களது தேர்தல் அரசியல் சாதியக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது என்ற விமர்சனங்களும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் தொடங்கி அமைச்சரவையில் பங்கேற்கும் வாய்ப்புகள் வரைக்கும் அனைத்திலும் சாதிக் கணக்குகள் இயங்குகின்றன.
பிற்பட்ட நிலையிலிருந்து மேலெழும் சமூகங்கள் தங்களது எண்ணிக்கைக்குத் தக்கவகையில் அரசியல் அதிகாரத்தில் பிரதிநிதித்துவம் பெற விரும்புகின்றன. எனினும், எண்ணிக்கை மட்டுமே அந்த வாய்ப்புகளைத் தீர்மானிப்பதாக அமைந்துவிடக் கூடாது. தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை, அனைத்து சமூகங்களின் ஆதரவோடுதான் எந்தவொரு கட்சியும் ஆட்சிப்பொறுப்புக்கு வர முடியும் என்பது ஒரு நற்பேறு.
எனவே, மக்களிடம் செல்வாக்கு பெற்ற கட்சிகள் தமக்கு வாய்ப்புள்ள சூழல்களிலாவது, அரசியலிலிருந்து சாதியை விலக்கம் செய்யத் தவறக் கூடாது. இல்லையென்றால், சாதிப் பெயர் நீக்கம் போன்ற முற்போக்கான முன்னெடுப்புகளும் அடையாள நிமித்தமாகவே முடிந்துவிடக்கூடும். தெருக்களின் பெயர்களில் மட்டுமல்ல, மக்களின் உள்ளத்திலிருந்தும் சாதிய ஒட்டுகள் படிப்படியாக, தன்னியல்பாக, நிரந்தரமாக நீங்கட்டும்.