வேளாண் துறை மானியங்கள்: நிரந்தரத் தீர்வு உருவாகட்டும்!

வேளாண் துறை மானியங்கள்: நிரந்தரத் தீர்வு உருவாகட்டும்!
Updated on
1 min read

ஜூன் 12 அன்று ஜெனிவா நகரில் தொடங்கவுள்ள உலக வர்த்தக நிறுவனத்தின் (டபிள்யூடிஓ) 12-வது உயர்மட்டக் குழு மாநாட்டில், உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவுப் பொருட்கள் கொள்முதல் தொடர்பாக நீடித்துவரும் சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு இந்தியா முயற்சியெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நடைமுறையிலுள்ள உலக வர்த்தக நிறுவன விதிமுறைகளின்படி, உறுப்பினர் நாடுகள் விவசாயத் துறைக்கு வழங்கும் மானியங்கள் 1986-88 ஆண்டுகளின் விலை நிலவரங்களை அடிப்படையாகக்கொண்டு நிர்ணயிக்கப்பட்ட உற்பத்தி மதிப்பில் 10%-க்கு மேல் தாண்டிச் செல்லக் கூடாது. இந்த உச்ச வரம்பு மீறப்பட்டால், மற்ற உறுப்பினர் நாடுகள் இது குறித்து உலக வர்த்தக நிறுவனத்திடம் முறையிடலாம். இந்தியாவில் 2020-21-ல் நெல் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட மானியங்களின் மொத்த மதிப்பு 15.14% ஆக அதிகரித்துள்ளது. 2019-20-ல் இது சுமார் 13.7% ஆக இருந்தது. இவற்றின் அடிப்படையில், மானியங்களுக்கான வரம்பை மீறிவிட்டதாக இந்தியா தொடர்ந்து குற்றச்சாட்டை எதிர்கொண்டுவருகிறது.

2013-ல் பாலியில் நடைபெற்ற உலக வர்த்தக நிறுவனத்தின் உயர்மட்டக் குழு மாநாட்டில், உள்நாட்டு உணவு உற்பத்திக்கு மானியங்கள் அளித்திட அனுமதியளிக்கப்பட்டது. இந்தச் சிறப்பு விதிவிலக்கைச் சுட்டிக்காட்டும் இந்தியா, மானிய வரம்புகளை மீறிவிட்டதாகக் குற்றம்சாட்ட முடியாது என்று தனது விளக்கத்தை அளித்துள்ளது. உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்து இருப்புவைப்பது உள்நாட்டில் ஏழ்மை நிலையிலுள்ள மக்களைக் கருத்தில் கொண்டு அவர்களின் உணவுத் தேவையை நிறைவேற்றுவதற்காகத்தான்.

இதையும்கூட உலக வர்த்தக நிறுவனத்தில் அங்கம் வகிக்கும் சில வளர்ந்த நாடுகள் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளன. இந்தியா அந்த அழுத்தத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. பாலி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் 2013-க்கு முன் நடைமுறையில் இருந்த அரசின் திட்டங்களுக்கே பொருந்தும் என்ற நிலையில், அதற்குப் பின் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கும் அதை நீட்டிக்க வேண்டும் என்பது இந்தியாவின் பார்வையாக இருக்கிறது.

இந்தியா மட்டுமின்றி சீனாவும் ஜி33 அமைப்பில் அங்கம் வகிக்கும் சில ஆப்பிரிக்க நாடுகளும் வேளாண் துறை மானியங்களுக்கு உச்ச வரம்பு கூடாது என்ற கோரிக்கையை ஜூனில் நடக்கவிருக்கும் ஜெனிவா மாநாட்டில் எழுப்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், உலக உணவுத் திட்டத்துக்கு (டபிள்யூஎஃப்பி) இந்தியா அளித்துவரும் பங்களிப்பு குறித்தும் கேள்விகள் எழக்கூடும். உணவுத் தேவைக்காகக் கோதுமையை வெளிநாடுகளுக்கு அனுப்புவதும் கோதுமை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையும் வெவ்வேறானவை என்பது இந்தியாவின் நிலைப்பாடு.

ஐரோப்பிய ஒன்றியத்திலும் அமெரிக்காவிலும் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் மானியத்துடன் ஒப்பிடுகையில், இந்திய விவசாயிகள் பெறுகின்ற மானியங்களின் அளவு மிகவும் குறைவானது. ஆனால், உற்பத்தி, விநியோகம் என்று இரண்டு நிலைகளிலும் உணவு மானியங்கள் அளிக்கப்பட்டுவருவதை அந்நாடுகள் விரும்பவில்லை. நீண்ட காலமாகத் தொடர்ந்துவரும் இந்த விவாதத்துக்கு ஜெனிவா மாநாட்டிலாவது நிரந்தரத் தீர்வு கிடைக்கட்டும்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in