

உலகத் தொழிலாளர் நல அமைப்பின் (ஐஎல்ஓ) சமீபத்திய அறிக்கை, நடப்பாண்டின் முதல் காலாண்டில் 11.2 கோடி வேலையிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிட்டுள்ளது. வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கிடையில் மட்டுமின்றி, நாடுகளுக்குள்ளும் வேலை கிடைக்கப்பெறுவதில் உள்ள சமத்துவமின்மையை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 2020 இறுதிக் காலாண்டில் வேலைவாய்ப்புகள் கிடைக்கப்பெறுவதில் நம்பிக்கையளிக்கும் சில அறிகுறிகள் தென்பட்டன என்றாலும் நடப்பாண்டில் உலகளவிலான மொத்தப் பணி நேரம் என்பது 3.8% குறைந்துள்ளது.
பணவீக்கம், உணவு மற்றும் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு, பொருளாதார நெருக்கடி நிலை, கடன்சுமை அதிகரிப்பு, ரஷ்ய - உக்ரைன் போருக்குப் பிறகு உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை என்று ஒன்றுதொட்டு ஒன்றாகப் பெருகிய சிக்கல்கள் அனைத்தும் கடைசியில் மோசமான அளவில் வேலையிழப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
வளரும் மற்றும் வருமானம் குறைந்த நாடுகளில் பெருந்தொற்றுக்கு முன்பு வேலைவாய்ப்புகளில் நிலவிவந்த பாலின இடைவெளி சற்றே குறைந்துவந்த நிலையில், தற்போது அது மீண்டும் விரிவடைய ஆரம்பித்திருப்பது இதுவரையிலும் முன்னெடுக்கப்பட்ட பாலினச் சமத்துவத்துக்கான முயற்சிகளையும்கூடக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. வளர்ந்த நாடுகளில் இருபாலருக்குமே அவர்கள் பணியாற்றும் வேலை நேரம் மீண்டும் கிடைக்கப்பெறத் தொடங்கியுள்ளது என்றபோதும் அங்கு ஏற்பட்டுள்ள பாலின இடைவெளியை முழுமையாகச் சரிசெய்ய இன்னும் 30 ஆண்டுகளேனும் தேவைப்படும் என்பது இச்சிக்கலின் தீவிரத்தை உணர்த்தும். தோராயமான கணக்கீட்டின்படி, பெருந்தொற்றுக்கு முன்பு பணிபுரிந்துவந்த 100 ஆண்களில் 7.5 பேர் வேலையிழப்பைச் சந்தித்துள்ளனர் என்றால், பெண்களிடம் அது 12.3 ஆக உள்ளது. அமைப்புசாரா வேலைவாய்ப்புகளில் இன்னும் அது அதிகமாக இருப்பதற்கே சாத்தியம் அதிகம்.
பெருந்தொற்றால் ஏற்கெனவே உலகப் பொருளாதாரம் நிலைகுலைந்து நிற்கையில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர், பொருளாதார மீட்சிக்கான வாய்ப்புகளையும் பறித்திருக்கிறது. பெருந்தொற்றுப் பரவல்கள் முன்கூட்டி ஊகிக்கக்கூடியவையும் உடனடியாகக் கட்டுப்படுத்தக்கூடியவையும் அல்ல. ஆனால், போர்களைத் தவிர்க்க முடியும். உலகமயமான சந்தைப் பொருளாதாரத்தில் எந்தவொரு நாட்டின்மீது போர்த் தாக்குதல் நடத்தப்பட்டாலும், உலக நாடுகள் அனைத்துமே பொருளியல் தாக்குதலுக்கு உள்ளாகின்றன என்பதே ரஷ்ய - உக்ரைன் போர் உணர்த்தும் செய்தி.
போரின் பாதிப்புகளால் அதிகரித்துவரும் வேலையின்மைச் சிக்கலிலிருந்து விரைவில் மீள்வதற்கு உலகத் தொழிலாளர் நல அமைப்பு, உலகு தழுவிய ஓர் அழைப்பை விடுத்துள்ளது. தொழிலாளர்களின் வாங்கும் சக்தியும் அவர்களுடைய குடும்பத்தாரின் வாழ்க்கைத்தரமும் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது அவற்றில் பிரதானமானது. முத்தரப்புப் பேச்சுவார்த்தைகள், நியாயமான கூலியை உறுதிப்படுத்துதல், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை வலுப்படுத்துதல், தேவைப்பட்டால் உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என்று தொழிலாளர் நல அமைப்பின் பரிந்துரைகள் நீள்கின்றன. வேலையின்மைச் சிக்கலுக்கு உலகத் தொழிலாளர் நல அமைப்பு தீர்வுகளை முன்மொழிந்துள்ள அதே நேரத்தில், அதற்குக் காரணமான போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளை மற்ற பன்னாட்டு அமைப்புகளும் முன்னெடுக்க வேண்டும்.