ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி: அரசின் பெரும் பொறுப்பு!

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி: அரசின் பெரும் பொறுப்பு!
Updated on
1 min read

கடந்த நிதியாண்டு சமர்ப்பிக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதலாவது வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டவாறு, கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. வேளாண் விளைநிலப் பரப்பையும் பாசனப் பரப்பையும் வேளாண் உற்பத்தியையும் பெருக்கும் தமிழக அரசின் செயல்திட்டத்தை எட்டுவதற்கு இத்திட்டம் பேருதவியாக அமையும். வேளாண் துறைக்கென்று தனி நிதிநிலை அறிக்கையும், வேளாண் துறை தொடர்பிலான பல்வேறு திட்டங்களுக்கான தொடர் அறிவிப்புகளும் தற்போதைய திமுக அரசு வேளாண் துறையின் மீதும் விவசாயிகளின் மீதும் கொண்டுள்ள அக்கறையை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளன.

மாநிலம் முழுவதும் உள்ள 1,997 ஊராட்சிகளில், மொத்தம் ரூ.227 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தால் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் பலன்பெறவுள்ளன. அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் இத்திட்டம் தமிழ்நாட்டிலுள்ள 12,525 ஊராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படவிருக்கிறது. வேளாண் துறையால் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டம், ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைந்து செயல்படுத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயத்துடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய அனைத்துத் துறைகளின் பங்கேற்போடு இன்னும் விரிவான வகையில் இத்திட்டம் நாட்டின் முன்னுதாரணத் திட்டங்களில் ஒன்றாக வளர்த்தெடுக்கப்பட வேண்டிய அவசியமுள்ளது.

தற்போது இத்திட்டத்தின் கீழ் தென்னை மரக்கன்று, வீட்டுத் தோட்டங்களுக்கான விதைகள், தோட்டக்கலைப் பயிர்களுக்கான விதைகள், உரங்கள், கைத்தெளிப்பான்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன. வறண்ட நிலப்பகுதியில் ஆழ்குழாய்க் கிணறு, சொட்டுநீர்ப் பாசனம், பண்ணைக் குட்டைகளை அமைக்கும் பட்டியலின விவசாயிகளுக்கு 100% மானியம் என்பது இத்திட்டத்தின் குறிப்பிட்டத்தக்க சிறப்பம்சம்.

தோட்டக்கலைத் துறையின் வளர்ச்சியில் திமுக அரசு எடுத்துக்கொள்ளும் சிறப்புக் கவனம் வரவேற்கத்தக்கது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அண்மையில்தான் தோட்டக்கலைத் துறைக்குப் பெரும் எண்ணிக்கையில் பல்வேறு நிலைகளில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தோட்டக்கலை அலுவலர்களுக்குத் துறைசார்ந்த வல்லுநர்களைக் கொண்டு பயிலரங்குகளை நடத்தியிருப்பது பாராட்டுக்குரியது. வேளாண் துறை சார்ந்த அனைத்து அலுவலர்களுக்கும் இத்தகைய பயிற்சிகள் உரிய கால இடைவெளியில் தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும்.

ஊரக வளர்ச்சித் துறையுடன் வேளாண் துறை இணைந்து இத்திட்டத்தை மேற்கொள்ளும் நிலையில் பாசனம், நெல் கொள்முதல், விளைபொருட்களைச் சந்தைப்படுத்துதலுக்கான வாய்ப்புகள், இயற்கைப் பேரிடர் பாதிப்புகளுக்கான பயிர்க் காப்பீடு ஆகியவற்றிலும் தமிழ்நாடு அரசின் மீது பெரும் நம்பிக்கையோடும் எதிர்பார்ப்புகளோடும் விவசாயிகள் உள்ளனர்.

வழக்கத்துக்கு மாறாக, நடப்பாண்டில் முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டிருப்பது குறுவை சாகுபடிக்குப் பேருதவியாக அமையும் என்று விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், பாசன வாய்க்கால்களைச் சீரமைக்கும் பணி நிறைவடையாததால் கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்ட மறுநாளே மூடப்பட்டுவிட்டதையே ஒரு உதாரணமாகக் கொள்ளலாம். திட்டங்களின் உயர்ந்த இலக்குகளுக்கும் நடைமுறையில் எழுகின்ற சவால்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் பெரும் பொறுப்பு பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து நடத்திச்செல்லும் அரசின் கைகளில்தான் உள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in