

பெருந்தொற்றுக்குப் பிறகான உலகு தழுவியப் பொருளாதாரப் பாதிப்புகள், ரஷ்ய - உக்ரைன் போர்ச்சூழல் இவற்றுக்கு நடுவே சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்து முடிந்துள்ள உலகப் பொருளாதார மன்றத்தின் (டபிள்யூஇஎஃப்) வருடாந்திர மாநாடு புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது. கட்டற்ற வணிகத்தைக் காட்டிலும் சுதந்திரம் முதன்மையானது, தொழில் லாபங்களைக் காட்டிலும் விழுமியங்கள் முக்கியமானவை என்று இம்மாநாடு வலியுறுத்தியுள்ளது. போரினால் உருக்குலைந்து கிடக்கும் உக்ரைனை மறுநிர்மாணம் செய்யச் சிறப்புத் திட்டம் ஒன்றை உருவாக்கவும் இம்மாநாடு முடிவெடுத்துள்ளது. 5 நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் உலகெங்குமிருந்து தலைவர்கள், அரசப் பிரதிநிதிகள், பொருளாதார வல்லுநர்கள் என்று 3,000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். ஏறத்தாழ 450 அமர்வுகளாக உலகப் பொருளாதார நிலை குறித்து வெவ்வேறு கோணங்களில் விவாதங்கள் நடந்து முடிந்துள்ளன.
உக்ரைன் தொடர்பாக நடந்த சிறப்பு அமர்வில் 70 பன்னாட்டு நிறுவனங்களின் முதன்மைச் செயல்அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர், உக்ரைனின் வெளியுறவுத் துறை அமைச்சர், துணைப் பிரதமர் ஆகியோர் பங்கேற்ற இந்த அமர்வில், உக்ரைன் பிரதமர் காணொளி வாயிலாகக் கலந்துகொண்டார். மறுநிர்மாணத்துக்குத் தாங்கள் எந்தெந்த வகைகளில் உதவ முடியும் என்று பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். போர் முடிவுக்கு வருவதற்கு முன்பே, மறுநிர்மாணத் திட்டங்களை முன்னெடுத்திருப்பது டாவோஸ் மாநாட்டின் மீது சிறப்புக் கவனத்தை ஈர்த்துள்ளது.
உலகளாவிய உணவுத் தட்டுப்பாடும் சுற்றுச்சூழல் நெருக்கடியும் இம்மாநாட்டின் முக்கிய விவாதப் பொருட்களாக அமைந்திருந்தன. போர்ச்சூழலின் காரணமாக சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை, வேதியுரங்களின் விலை உயர்வு, உணவு தானியங்கள் ஏற்றுமதிக்கு நிலவும் தடைகள் ஆகியவை விரைவில் சரிசெய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்கா முன்னெடுத்துள்ள, கார்பன் வெளியேற்றத்தை பூஜ்ஜியமாகக் குறைக்கும் வாகனங்கள் உற்பத்திக்கான 8.5 ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான பெருந்திட்டத்தில் இந்தியாவும் ஒரு நாடாக இணைந்துள்ளது. 2030-க்குள் 7,000 கோடி மரக்கன்றுகளை நட்டுப் பராமரிக்கவிருப்பதாகச் சீனாவின் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. மாசில்லாத எரிபொருட்கள், நீர்நிலைகள் பாதுகாப்பு தொடர்பில் இந்தியத் தொழில் நிறுவனங்களும் உறுதியளித்துள்ளன.
தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகமும் ஆந்திர பிரதேசமும் இம்மாநாட்டில் கலந்துகொண்டு, பெருமளவிலான முதலீடுகளை ஈர்த்துள்ளன என்பதும் பெரும் கவனத்துக்குரியதாகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான ‘ரிநியூ’ கர்நாடகத்தில் அடுத்த ஏழாண்டுகளில் ரூ.50,000 கோடி முதலீடுகள் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னிலையில் கையெழுத்திட்டுள்ளது. லூலு நிறுவனத்துடனான ரூ.2,000 கோடி முதலீடுகளுக்கான மற்றொரு ஒப்பந்தமும் அவரது முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. லூலு குழுமம், ‘கெமோ பார்மா’ உள்ளிட்ட சில முன்னணி நிறுவனங்கள், ஆந்திர பிரதேசத்தில் முதலீடுகள் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. பன்னாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் நமது பக்கத்து மாநிலங்கள் முன்னெடுக்கும் தீவிர முயற்சிகளைத் தமிழ்நாடு அரசும் கவனத்தில் கொள்ள வேண்டும்.