

உலகின் மிக நீளமான இரண்டாவது நகர்ப்புறக் கடற்கரையான மெரினா, மெட்ரோ ரயில் திட்டத்தில் இணைந்திருப்பது சென்னையை விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பெரும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய ஒரு செய்தி. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் தொடங்கப்பட்டு மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. இத்திட்டத்துக்கான திட்டச் செலவு ரூ.61,843 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஒரு பகுதியாக, வழித்தடம் 4-ல் கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி வரையில் மெட்ரோ ரயில் சேவை அமையவுள்ளது. இத்திட்டம் முடிவடைந்தால், சென்னைவாசிகளும் சுற்றுலாப் பயணிகளும் மெரினா கடற்கரைக்குச் செல்வது இன்னும் எளிதாகும்.
மெரினா கடற்கரையையொட்டி அமையவுள்ளது என்பதால் கடற்சூழலுக்குப் பாதிப்பு இல்லாத வகையில், கலங்கரை விளக்கம் ரயில் நிலையப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதற்காக ஏற்கெனவே கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. மற்ற மெட்ரோ ரயில் நிலையங்கள் 20 மீ ஆழத்தில் கட்டப்பட்டுவரும் நிலையில், கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் அதிகபட்சம் 15 மீ ஆழத்திலேயே கட்டப்படவுள்ளது. அதற்கேற்ப இந்நிலையத்தில் மட்டும் ரயில் பாதை இரண்டாவது தளத்தில் இல்லாமல் முதல் தளத்திலேயே அமையவுள்ளது.
கட்டுமானப் பணிகளின்போது மண்சரிவு அபாயங்களைத் தவிர்க்க வேண்டி முன்கூட்டியே மண்சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன. மேலும், இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் நிலையமே மிக நீளமான நிலையமாகவும் இருக்கும். மொத்த நீளம் 300 மீட்டர்.
ரயில் நிலையத்திலிருந்து வெளியேற இரண்டு வாயில்கள் அமைக்கப்படவுள்ளன. அதில் ஒன்று கடற்கரையின் அழகை ரசிக்கும்வகையில் வடிவமைக்கப்படவுள்ளது. கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் நிலையப் பணிகளுக்காக மெரினாவின் அடையாளச் சின்னங்களில் ஒன்றான தேசத்தந்தை காந்தியடிகளின் சிலை இடம்மாற்றி வைக்கப்படலாம் என்றும் கட்டுமானப் பணிகள் முடிந்ததும் மீண்டும் காந்தியடிகளின் சிலை அதே இடத்தில் நிறுவப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் சில ஆண்டுகளில் சென்னைக் கடற்கரைக்குச் செல்வது என்றால், மெட்ரோ ரயில் வழியாகக் கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையத்தை அடைவது என்பது பயணத் திட்டத்தின் ஒரு பகுதியாகிவிடும். 2025-ல் திட்டப் பணிகள் முடிந்ததும், நாள் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் 5,000 பயணிகள் வரையில் இந்நிலையத்தைப் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து பட்டினப்பாக்கம் வரையில் ஏறக்குறைய 6 கிமீ தொலைவுக்குக் கடற்கரையையொட்டி நடைபாதைகள் அமைந்திருப்பதைப் போல, இனிவரும் காலத்தில் மெரினா கடற்கரையின் முழு அழகையும் மெட்ரோ ரயிலில் மித வேகத்தில் பயணித்தபடியே ரசிப்பதற்கு வசதியாக உயர்த்தப்பட்ட தனி ரயில் வழித்தடம் ஒன்றையும் உருவாக்கலாம். சுற்றுலாப் பயணிகளை அது வெகுவாகக் கவரக்கூடும்.