பிரதமரின் ஜப்பான் பயணம்: பொருளாதாரத்தில் புதிய பாதை!

பிரதமரின் ஜப்பான் பயணம்: பொருளாதாரத்தில் புதிய பாதை!
Updated on
1 min read

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பான் பயணமும் அங்கு நடந்த இந்தோ-பசிபிக் பொருளாதார வளர்ச்சிக் கூட்டமைப்பின் (ஐபிஇஎஃப்) தொடக்க விழாவில் அவர் பங்கெடுத்திருப்பதும் பொருளாதாரரீதியில் முக்கியத்துவம் கொண்டது. அமெரிக்காவால் முன்மொழியப்பட்டுள்ள இந்தப் பொருளாதாரத் திட்டத்தில் பங்கெடுக்க இந்தியா தயாராக இருப்பதை இப்பயணம் உணர்த்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடோ, ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனேசே ஆகியோருடன் இந்தியப் பிரதமர் மோடியும் கலந்துகொண்ட இவ்வமைப்பின் தொடக்க விழாவில் மேலும் 10 நாடுகளின் தலைவர்கள் காணொளி வாயிலாகக் கலந்துகொண்டுள்ளனர். வர்த்தகம், சந்தையின் எதிர்பாராத இடர்ப்பாடுகளிலிருந்து தாக்குப்பிடிக்கும் உறுதிநிலை, இயற்கையை மாசுபடுத்தாத ஆற்றல்வளங்கள், கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துதல் ஆகிய நான்கும் இந்தப் பொருளாதாரத் திட்டத்தின் முக்கியக் கூறுகளாக அமைந்துள்ளன.

ஐபிஇஎஃப் என்ற இந்தப் புதிய பொருளாதார அமைப்பு தடையற்ற வணிகத்துக்கான உடன்படிக்கையாக இருக்காது என்றும் உறுப்பினர் நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும்வகையில் அமையும் என்று தெரிகிறது. குவாட் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. மேலும், தென்கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பைப் (ஏஎஸ்இஏஎன்) பொறுத்தவரையில், அதன் மொத்த உறுப்பினர்களான பத்து நாடுகளில் ஏழு, இவ்வமைப்பில் சேர்ந்துள்ளன. தவிர, நியூஸிலாந்தும் இந்த அமைப்பில் சேர்ந்துள்ளது. மொத்தத்தில், உலகின் மொத்த உற்பத்தியில் ஏறக்குறைய 40% வகிக்கும் நாடுகளின் பெருங்கூட்டணியாக ஐபிஇஎஃப் அமைந்துள்ளது.

இவ்வமைப்பில் அங்கம் வகிக்கும் மற்ற நாடுகளுடன் இணைந்து அனைவரையும் உள்ளடக்கிய நெகிழ்வானதொரு பொருளாதார அமைப்பைக் கட்டமைக்க இந்தியா பாடுபடும் என்ற உறுதியை ஜப்பானில் நடைபெற்ற இந்தப் புதிய அமைப்பின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி அளித்துள்ளார். சந்தையின் எதிர்பாராத இடர்களுக்குத் தாக்குப்பிடித்து நிற்கும் உறுதிநிலை என்பது நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை, உரிய கால அளவு என்ற மூன்று ஆதாரத் தூண்களின் அடிப்படையில் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியும் வளமையும் தொடர்வதற்கு இவை உதவும் என்றும் கூறியுள்ளார்.

தென்கிழக்காசிய நாடுகளில் அங்கம் வகிக்கும் சீன ஆதரவு நாடுகளான மியான்மர், கம்போடியா, லாவோஸ் ஆகிய மூன்று நாடுகளும் புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பில் பங்கேற்கவில்லை. ஜப்பானில் நடைபெற்ற குவாட் தலைவர்கள் சந்திப்பில், பிராந்திய பாதுகாப்பில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைப்பது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

உக்ரைன் மீது நடத்தப்பட்டுவரும் போரின் காரணமாக ரஷ்யா மீது மேற்குலக நாடுகள் அதிருப்தியில் இருக்கும் சூழலில், ரஷ்யாவுடன் சீனா நெருக்கம்காட்டத் தொடங்கியுள்ளது. மேலும், ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லை தொடர்பான கருத்து முரண்பாடுகள் நீடித்துவரும் நிலையில், பாதுகாப்பு ரீதியிலும்கூட குவாட் தலைவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் கொண்டதாக மாறியுள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in