

வழக்கத்துக்கு மாறாகத் தொடர்ந்து அதிகரித்துவரும் பருத்திப் பஞ்சு மற்றும் நூலின் விலை உயர்வு காரணமாகத் தமிழ்நாட்டின் நூற்பாலைகளும் பின்னலாடை நிறுவனங்களும் மூடப்படும் நிலையை நோக்கித் தள்ளப்பட்டிருப்பது துயரத்துக்குரியது. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் பின்னலாடைத் தொழிலைப் பின்னடைவிலிருந்து மீட்கவும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக இருக்கும் நெசவுத் தொழிலைப் பாதுகாக்கவும், பருத்தி மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்திட ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் பருத்தி விலை உயர்வைச் சமாளிக்க முடியாத நூற்பாலைகள், இந்தப் பிரச்சினை முடியும் வரை தங்களது உற்பத்தியை நிறுத்திக்கொள்வதாக முடிவெடுத்துள்ளன. ஜனவரியில் தொடங்கி ஐந்து மாதங்களில் மட்டும் பருத்திப் பஞ்சின் விலை 53%, பருத்தி நூலின் விலை 21% அதிகரித்துள்ளது. இப்படியொரு முன்னுதாரணமற்ற விலை உயர்வை நூற்பாலைகளும் நெசவாலைகளும் இதற்கு முன் சந்தித்ததில்லை.
உள்நாட்டில் பருத்தி உற்பத்தி குறைந்ததும் வெளிநாட்டுச் சந்தைகளில் பருத்திக்கான தேவை அதிகரித்திருப்பதும்தான் விலை உயர்வுக்கான காரணம். பெருவணிகர்களும் பன்னாட்டு நிறுவனங்களும் பெருமளவில் பருத்தியை வாங்கி இருப்பு வைத்துக்கொண்டுள்ள நிலையில், சிறு நிறுவனங்கள் தங்களது உற்பத்திக்குத் தேவையான பருத்தியையே வாங்க முடியாமல் திணறுகின்றன. மே 15, 16 ஆகிய நாட்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நூற்பாலைகள் அடையாள வேலைநிறுத்தம் நடத்திய நிலையில், பருத்தி கவுன்சில் ஒன்றை ஏற்படுத்தி, பருத்தி ஏற்றுமதியை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார். அந்த கவுன்சிலின் முதல் கூட்டம் மே 28 அன்று நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், பருத்தி விலையைக் குறைத்தாக வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். பருத்தி ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது முதல்வரின் முக்கியமான வேண்டுகோள். இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு செப்டம்பர் வரையில் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஒப்பந்தத்துக்கும் கப்பல்கள் துறைமுகங்களை வந்தடைவதற்கான கால இடைவெளியைக் கணக்கில்கொண்டு, செப்டம்பர் வரையிலான அனைத்து ஒப்பந்தங்களுக்கும் வரிவிலக்கு அளிக்குமாறும் நூற்பாலைகளுக்கான வங்கிக் கடன் வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யுமாறும் அவர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து, திமுகவின் நாடாளுமன்றக் குழு துணைத் தலைவர் கனிமொழி தலைமையில் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் மத்திய நிதியமைச்சரையும் ஜவுளித் துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து, நூல் விலை உயர்வைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர். பருத்தி விலை உயர்வு தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த பிரச்சினை மட்டுமல்ல, இதுவொரு தேசியப் பிரச்சினை. இந்தியா முழுவதும் 4.5 கோடி தொழிலாளர்கள் ஜவுளித் துறையைத் தங்களது வாழ்வாதாரமாக நம்பியிருக்கிறார்கள். எனவே, பருத்தி விலையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு விரைவுபடுத்த வேண்டும்.