

கேரளத்தின் போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோணி ராஜு அண்மையில் வெளியிட்ட ஓர் அறிவிப்பு பெருங்கவனத்தை ஈர்த்துள்ளது. பெருந்தொற்றுக் காலத்தின்போது இயக்கப்படாதிருந்த கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (கேஎஸ்ஆர்டிசி) 800-க்கும் மேற்பட்ட பேருந்துகள், மீண்டும் சாலைகளில் இயக்க முடியாத நிலையில் உள்ளன. இந்தப் பேருந்துகளை உலோகத் துண்டுகளாக மாற்றலாம் என்று முன்பு முடிவெடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், அதற்கு மாறாக, இயக்க முடியாத நிலையிலிருக்கும் அந்தப் பேருந்துகளைப் பள்ளிக்கூட வகுப்பறைகளாக மாற்றலாம் என்ற புதிய முடிவை அறிவித்துள்ளார் அந்தோணி ராஜு. பழைய பேருந்துகளை வெறும் உலோகத் துண்டுகளாக விற்பதைக் காட்டிலும், அவற்றை இம்மாதிரி திறம்பட வெவ்வேறு வகைகளில் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது தாழ்தளப் பேருந்துகள்தான் பள்ளி வகுப்பறைகளாக மாற்றப்படவிருக்கின்றன. இந்தப் பேருந்து வகுப்பறை பள்ளி மாணவர்களுக்கு உற்சாகமான புது அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக, திருவனந்தபுரத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் பேருந்து வகுப்பறைகள் இரண்டினை அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் பேருந்துகளை வகுப்பறைகளாக மாற்றுவது குறித்த திட்ட முன்வடிவுகளை விருப்பத்துடன் முன்வைத்துள்ளபோதிலும், கேரளத்தின் பள்ளிக் கல்வித் துறை இது குறித்த தமது கருத்தைத் தெரிவிக்கவில்லை.
கல்வித் துறை ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், ஓடாத நிலையிலுள்ள அனைத்துப் பேருந்துகளும் வகுப்பறைகளாக மாற்றப்படும் என்றும் இத்திட்டம் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். புதிய வகுப்பறைகளைக் கட்டி முடிக்கத் தாமதமாவதால், இது போன்ற பேருந்து வகுப்பறைகளைத் தற்காலிகமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற யோசனையை அவர் முன்வைத்துள்ளார்.
கேரளத்தில் இப்படிப் பழைய பேருந்தை வகுப்பறையாக மாற்றிப் பயன்படுத்துவதற்கு ஏற்கெனவே வெற்றிகரமான முன்னுதாரணம் ஒன்றும் உண்டு. கேரளப் பல்கலைக்கழகத்தின் கார்யவட்டம் வளாகத்தில், கணினி-உயிரியல் துறையில் ஒரு பழைய பேருந்தை இப்படி வகுப்பறையாகப் பயன்படுத்திவருகிறார்கள். பள்ளி வளாகங்களில் பேருந்து வகுப்பறை என்பது குழந்தைகளுக்கு உற்சாகம் ஊட்டுவதாகவும் அமையும். கேரளத்தில் இத்திட்டத்துக்குக் கல்வித் துறையினரிடம் வரவேற்பு எழும்பட்சத்தில், மற்ற மாநிலங்களும்கூட இதைப் பின்பற்றலாம்.
பயன்படுத்தப்பட்ட கனரக வாகனங்களைத் தங்களது வசதிக்கேற்ப ஒரு சில அறைகளுடன் கூடிய சிறு வீடுகளாக மாற்றிப் பயன்படுத்துவதும் அவற்றைத் தம் விருப்பப்படி இடம் மாற்றிக்கொள்வதும் மேலை நாடுகளில் வழக்கத்தில் உள்ளது. இயக்க முடியாத நிலையிலிருக்கும் அரசுப் பேருந்துகளை வீணாகப் பணிமனைகளில் நிறுத்திவைப்பதற்கும் அவற்றை மீண்டும் உலோகத் துண்டுகளாக மாற்றி குறைவான விலையில் விற்பதற்கும் இடையே மற்றொரு வகையாகவும் அப்பேருந்துகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் எனில், அதுவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதுதான்.