பெட்ரோல், டீசல்: மாநில அரசின் வரியும் குறைக்கப்படுமா?

பெட்ரோல், டீசல்: மாநில அரசின் வரியும் குறைக்கப்படுமா?
Updated on
1 min read

தொடர்ந்து அதிகரித்துவரும் விலைவாசி உயர்வின் காரணமாக நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் ஏழை, எளிய மக்களுக்குச் சற்றே ஆறுதல் அளிக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பெட்ரோல் மீதான தீர்வை லிட்டருக்கு ரூ.8, டீசல் மீதான தீர்வை லிட்டருக்கு ரூ.6 குறைக்கப்படும் என்ற அவரது அறிவிப்பு, எரிபொருட்களின் விலை உயர்வு காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்துவருவதைக் கட்டுப்படுத்த உதவக்கூடும்.

தவிர, சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.200 வீதம் 12 சிலிண்டர்களுக்கான மானியங்கள் 9 கோடி பேருக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, கடந்த ஆண்டு நவம்பரில் பெட்ரோல் மீதான தீர்வையில் லிட்டருக்கு ரூ.5, டீசல் மீதான தீர்வையில் லிட்டருக்கு ரூ.10 என மத்திய அரசு குறைத்தது. நவம்பரில், மதிப்புக் கூட்டுவரியை (வாட்) குறைத்துக்கொள்ளாத மாநில அரசுகள் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தாமே முன்வந்து அவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்தகைய எதிர்பார்ப்பு மக்களிடமும் தீவிரமாக எழுந்துள்ளது.

கடந்த ஏப்ரலில் மாநில முதல்வர்களுடனான காணொளிக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் இதே வேண்டுகோளை விடுத்திருந்தார். குஜராத், கர்நாடகா போன்ற மாநிலங்கள் தங்களது வாட் வரிகளைக் குறைத்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் தமது வேண்டுகோளை ஏற்க மறுப்பதால், எரிபொருட்களின் விலை உயர்வு காரணமான பொருளாதாரச் சுமையைப் பொதுமக்கள் தொடர்ந்து அனுபவித்துவருவதாகக் குறைகூறினார். அப்போது, பிரதமரின் வேண்டுகோளை மறுத்த தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 2014-க்குப் பிறகு மத்திய அரசு விதித்துள்ள புதிய தீர்வைகள் மற்றும் சிறப்புத் தீர்வைகளை விலக்கிக்கொள்வதே அனைவருக்கும் உகந்த எளிமையான தீர்வு என்ற கருத்தை முன்வைத்தார்.

இப்போதும்கூட, தமிழ்நாடு நிதியமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்து, மத்திய அரசின் வேண்டுகோளுக்குச் செவிசாய்ப்பதாக இல்லை. மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமலே பெட்ரோல், டீசல் மீதான தீர்வைகளை உயர்த்திவந்த மத்திய அரசு, தற்போது மதிப்புக் கூட்டுவரிகளைக் குறைக்க வேண்டும் என்று மாநில அரசுகளை எப்படி வற்புறுத்த முடியும் என்ற கேள்வியை அவர் எழுப்பியுள்ளார். மத்திய அரசு தீர்வைகளைக் குறைத்துக்கொள்ளும் முன்னரே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைத்துக்கொண்டதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பெட்ரோல், டீசல் விலை உயரும்போது வாட் வரியைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர். பெருந்தொற்றின் காரணமான பொருளாதாரப் பாதிப்புகளோடு ரஷ்ய-உக்ரைன் போரின் விளைவுகளும் சேர்ந்து எரிபொருட்களின் தொடர் விலையேற்றத்துக்குக் காரணமாகியுள்ள நிலையில், முதல்வரை நோக்கியும் அதே எதிர்பார்ப்பு எழுவது இயற்கையானது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in