

இந்தியாவில் பணவீக்கம் முன்னெப்போதைக் காட்டிலும் படுமோசமான நிலையை எட்டியுள்ளது. ஏற்கெனவே, சில்லறை விலை பணவீக்கம் கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், கடந்த ஏப்ரலில் மொத்த விலை பணவீக்கம் ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் 14.55% ஆக இருந்த மொத்த விலை பணவீக்கம் ஏப்ரலில் 15.08% ஆக அதிகரித்துள்ளது. மொத்த விலை பணவீக்கம் தொடர்ந்து 13 மாதங்களாக இரட்டை எண்களில் தொடர்கிறது. இந்தப் பணவீக்கத்துக்கு விற்பனைப் பண்டங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துவருவதே காரணம். மொத்த விலை பணவீக்கம் அதிகரித்தால் அதன் தொடர்ச்சியாக சில்லறை விலை பணவீக்கமும் அதிகரிக்கக்கூடும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பெருந்தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக நடைமுறைப்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால், சந்தைக்குத் தேவையான உற்பத்திப் பொருட்கள் அளிப்பதில் தேக்கநிலை நிலவிவந்தது. பிப்ரவரி இறுதியில் உக்ரைன் மீது ரஷ்யா போர்த் தாக்குதலைத் தொடங்கிய பிறகு, இந்நிலை இன்னும் சிக்கலாகியுள்ளது. உக்ரைன் போருக்குப் பிறகு சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 38.86% வரையிலும் உயர்ந்துள்ளது. இதையொட்டி, மேலும் சில மாதங்களுக்கு விற்பனைப் பண்டங்களின் விலை உயர்வு இரட்டை இலக்க சதவீதத்தில் தொடரும். எனவே, வருகின்ற ஜூன் மாதம் கூடவிருக்கும் ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கைக் குழு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்த்தலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், ரிசர்வ் வங்கி அவ்வாறு முயற்சி எடுத்தாலும்கூடப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையை எதிர்கொண்டிருக்கிறோம்.
பெருந்தொற்றுக்குப் பிறகு உலகம் முழுவதுமே விலைவாசி உயர்ந்துள்ளது. ஆனால், மார்ச் மாதத்துக்குப் பிறகு விமான எரிபொருள், பெட்ரோல், டீசல், தொழிற்சாலைகளுக்குத் தேவையான வேதிப்பொருட்கள், உலோகங்கள் என்று அடிப்படைப் பொருட்களுக்கான விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் தொழிற்சாலைகளின் இயக்கத்துக்குத் தேவையான அடிப்படை கச்சாப் பொருட்களுக்கும் எரிபொருட்களுக்கும் மிகப் பெரிய அளவில் பற்றாக்குறை நிலவுகிறது. நிலவிவரும் நிலக்கரித் தட்டுப்பாடு காரணமாக அனல் மின் நிலையங்களும் நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் தொழிற்சாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவிலிருந்து நிலக்கரி இறக்குமதியாவதும் தடைபட்டுள்ளது.
எஃகுத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான கச்சாப் பொருட்களின் விலை உயர்வால், அவையும் தங்களது உற்பத்திப் பொருட்களுக்கான விலையைத் தொடர்ந்து உயர்த்திவருகின்றன. சிமென்ட் விலை 10%-க்கு மேல் உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வும் சந்தைத் தேவைகளை முழுமையாகப் பூர்த்திசெய்ய முடியாத நிலையும் குறுகிய கால அளவில் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என்பது உறுதி. சந்தை நிலவரங்களால் ஏற்படும் பணவீக்கத்தை வட்டிவிகித உயர்வால் கட்டுப்படுத்தலாம். கச்சாப் பொருட்கள், எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்படும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் மட்டும் போதுமானதாக இருக்காது. உலகப் பொருளாதாரச் சூழல் சீரடையும் வரைக்கும், இந்தியாவும் காத்திருக்கத்தான் வேண்டும்.