

அண்மையில் நடந்த பட்டமளிப்பு விழாக்கள் இரண்டும் கல்வித் துறைக்கு வெளியே அரசியல் வெளியிலும் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. கோவை பாரதியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், ஆளுநரும் உயர் கல்வித் துறை அமைச்சரும் கலந்துகொண்ட நிலையில், அவர்கள் இருவரது உரைகளும் கருத்துமுரண்களை விவாதிக்கும் களமாக விழா மேடையை மாற்றிவிட்டன. தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து பின்பற்றப்படும் என்று தமது உரையில் குறிப்பிட்டார் உயர் கல்வித் துறை அமைச்சர்.
ஆனால், இந்தி படிப்பதால் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்ற வாதத்தை மறுப்பதற்கு, வடமாநிலங்களிலிருந்து வந்து தமிழ்நாட்டில் பானி பூரி விற்பவர்களை உதாரணம் காட்டியதைத் தவிர்த்திருக்கலாம். எனினும், மொழித் திணிப்பை எதிர்க்கிறோமேயன்றி எந்தவொரு மொழியையும் விருப்பத்துடன் படிப்பதை எதிர்க்கவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார். உயர் கல்வித் துறை அமைச்சரை அடுத்துப் பேசிய ஆளுநர், தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படுவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என்று பதிலளித்தார். பல்கலைக்கழக மேடைகள் அரசியலுக்கு அப்பாற்பட்டவையல்ல. அரசியல் தலைவர்கள் பலரின் பட்டமளிப்பு விழா உரைகளும் இன்றளவும் இலக்கிய மதிப்போடு நினைவுகூரப்படுகின்றன. ஆனால், அரசமைப்பின் முக்கியமான பொறுப்புகளை ஏற்றிருப்பவர்கள் தங்களுக்கு இடையேயான ஓர் அரசியல் விவாதத்துக்குப் பட்டமளிப்பு விழாவைப் பயன்படுத்தியதைத் தவிர்த்திருக்கலாம்.
கோவை விழாவில் அமைச்சரின் பேச்சும் அதற்கு ஆளுநர் அளித்த பதிலும் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையே நடந்துவரும் அதிகார யுத்தத்தின் தொடர்ச்சியாகக் கருதப்பட வாய்ப்பிருக்கும் நிலையில், சென்னைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா அதைச் சற்றே தணித்திருக்கிறது. ஆளுநர், முதல்வர், உயர் கல்வித் துறை அமைச்சர் ஆகியோர் கலந்துகொண்ட சென்னை விழாவில், 900-க்கும் மேற்பட்டவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு பட்டமளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்நிகழ்வில் ஆளுநர், முதல்வர், உயர் கல்வித் துறை அமைச்சர் என அனைவரும் ஒருசேரப் பங்கேற்றிருப்பது சென்னைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவைச் சிறப்புக்குரியதாக மாற்றியுள்ளது. இவ்விழாவிலும், உயர் கல்வித் துறை அமைச்சர் மத்திய அரசு நடைமுறைப்படுத்தும் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு முறையை விமர்சித்தார் என்றாலும் ஆளுநர், முதல்வர் ஆகியோரின் உரைகள் நல்லிணக்கத்துடன் அமைந்திருந்தன.
உயர் நீதிமன்றங்களின் வழக்குமொழியாக மாநில மொழிகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் உரையை மேற்கோள் காட்டிய ஆளுநர், பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை நிறுவப்பட்டிருப்பதை உதாரணம்காட்டி தமிழ்நாட்டுக்கு வெளியே மற்ற மாநிலங்களிலும் தமிழை வளர்த்தெடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கோவையில் எழுந்த கொதிப்பு, முதல்வர் பங்கேற்ற சென்னை நிகழ்வில் தணிந்திருக்கிறது. இது தொடரட்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநருக்கும் இடையிலான கருத்து மாறுபாடுகள் அவ்வப்போதைய அரசியல் சூழல்களையொட்டியே அமையும். எனினும், அதைக் கல்வி நிறுவன நிகழ்வுகளில் வெளிப்படையாகக் காட்டிக்கொள்வது மரபல்ல.