

இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளாகப் பணி உயர்வு பெறுவதற்கு அனைத்துத் துறை அலுவலர்களையும் பரிசீலிக்கும்வகையில், தமிழ்நாடு ஆட்சிப் பணிகள் துறை ஒன்றை நிறுவ சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, ஆட்சிப் பணித் துறை வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கொள்ளத்தக்கது. ஊரக மேம்பாடு மற்றும் உள்ளாட்சித் துறையில் பணியாற்றும் 98 அதிகாரிகள் 2012-ல் தொடுத்த வழக்கில் அளிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவை ஆறு மாதங்களுக்குள் நிறைவேற்ற வேண்டுமென உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
இதுவரையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று, துணை ஆட்சியராகப் பணியில் சேர்பவர்களுக்கு மட்டுமே குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு ஐஏஎஸ் பணி உயர்வு வழங்கப்பட்டுவருகிறது. அதேபோல, அத்தேர்வில் வெற்றிபெற்றுக் காவல் துறைத் துணை கண்காணிப்பாளராகப் பணியில் சேர்பவர்கள், இந்தியக் காவல் பணி அதிகாரிகளாகப் பணி உயர்வைப் பெறுகிறார்கள். ஆனால், குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று வணிக வரித் துறை உதவி ஆணையராக, கூட்டுறவுச் சங்கங்களின் உதவிப் பதிவாளராக, ஊரக மேம்பாட்டுத் துறை உதவி இயக்குநராக, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையில் மாவட்ட அலுவலர்களாகப் பணியாற்றுபவர்கள், தம் பணிக் காலத்தில் தம் துறைசார்ந்து பதவி உயர்வுகளைப் பெற முடியுமேயொழிய, ஐஏஎஸ் பணி உயர்வைப் பெறுவதென்பது அரிதினும் அரிதாகவே இருந்துவருகிறது.
ஒரே பாடத்திட்டத்தின் அடிப்படையில், இளநிலை பட்டப்படிப்பை கல்வித் தகுதியாகக் கொண்டு நடத்தப்படும் குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்றவர்கள், ஒருசில மதிப்பெண்கள் வித்தியாசத்திலும் இடஒதுக்கீட்டின் அடிப்படையிலும் வெவ்வேறு பணிகளுக்குத் தேர்வாகிறார்கள். அவர்களுக்குள் வருவாய்த் துறையில் பணியாற்றுபவர்கள் மட்டுமே ஐஏஎஸ் நிலையை எட்ட முடியும் என்பது குறித்து போட்டித் தேர்வர்களிடம் நீண்ட காலமாகவே கடும் அதிருப்தி நிலவிவருகிறது. இந்தப் பணிகள் தவிர, குரூப் 1 நிலையில் நடத்தப்படும் மற்ற தேர்வுகளில் வெற்றிபெற்று மாவட்டக் கல்வி அலுவலராக, தொழிலாளர் நல அலுவலராக, இந்து சமய அறநிலையத் துறையில் உதவி ஆணையராகப் பதவியேற்பவர்கள், கடைசி வரை துறைசார்ந்த பதவி உயர்வுகளோடு தம் பணிக் காலத்தை முடித்துக்கொள்ளும் நிலையே நிலவுகிறது.
குரூப் 1 பணிகளுக்கு இணையாகக் கருதப்படும் இந்தப் பணிகளுக்கான தேர்வுகளை எழுத கல்வி, சட்டம் போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருப்பதோடு பணி அனுபவமும்கூட கோரப்படுகிறது. அவர்களும் தத்தம் துறைகளில் உயரதிகாரிகளாக வந்தாலும் ஐஏஎஸ் வாய்ப்பு மறுக்கப்பட்டே வருகிறது. அதே நேரத்தில், ஐஏஎஸ் அதிகாரிகள் இத்துறைகளின் உயரதிகாரிகளாகப் பொறுப்பேற்கிறார்கள். சட்டமன்றச் செயலகம், சட்டம், காவல் போன்று ஒருசில துறைகளைத் தவிர்த்து, அனைத்துத் துறைகளிலும் ஐஏஎஸ் அதிகாரிகள் உயரதிகாரியாகப் பதவி வகிக்க முடியுமெனில், அத்துறைகளில் நீண்ட பணி அனுபவம் கொண்டவர்கள் பதவி உயர்வுகளின் வழி ஐஏஎஸ் அந்தஸ்தைப் பெறவும் வாய்ப்பு வழங்குவதே ஆட்சிப் பணித் துறைக்கு வலுசேர்க்கும்.