மத்திய - மாநில உறவு: நிதியமைச்சரின் பேச்சும் திமுக பதிலும்

மத்திய - மாநில உறவு: நிதியமைச்சரின் பேச்சும் திமுக பதிலும்
Updated on
1 min read

மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு அளிக்க வேண்டிய வரிவருவாய்ப் பகிர்வுகளைத் தாமதப்படுத்திவருவதாகத் தொடர்ந்து திமுக குற்றம்சாட்டிவரும் நிலையில், அண்மையில் சென்னையில் விழா ஒன்றில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கும் கருத்துகள் அதற்கு மாறான சில பார்வைகளை முன்வைத்துள்ளன. அந்தப் பேச்சுக்கு அடுத்த நாளே திமுக நாளேட்டின் தலையங்கத்தில் மறுப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு போதிய நிதியுதவி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை; சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக தமிழ்நாடு அரசு அளிக்கும் தகவல்கள் தவறானவை; மத்திய-மாநில அரசுகளுக்கு இடையில் சுமுகமான உறவு இல்லை என்பது பொய்ப் பிரச்சாரம் என்று மத்திய நிதியமைச்சர் தெரிவித்த சில கருத்துகள், திமுகவின் நாளேட்டில் மறுக்கப்பட்டுள்ளன. அதற்கு உதாரணமாக, கடந்த ஏப்ரல் 1 அன்று புது டெல்லியில் மத்திய நிதியமைச்சரைச் சந்தித்து தமிழ்நாடு முதல்வர் அளித்த கோரிக்கை மனு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தவில்லை என்பதைக் காரணம்காட்டி, மத்திய அரசால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மானியங்களை விடுவிக்க வேண்டும் என்று அம்மனுவில் கோரியிருந்தார் தமிழ்நாடு முதலமைச்சர். மேலும் அந்தச் சந்திப்பில், தமிழ்நாட்டுக்கு அளிக்கப்பட வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி நிலுவை ரூ.13,504.74 கோடியை விடுவிக்கவும் அவர் கோரினார். மத்தியில் ஆளும் கட்சியும் மாநிலத்தில் ஆளும் கட்சியும் அரசியலில் எதிரெதிர் நிலையில் நிற்கும் நிலையில், அவர்களுடைய கருத்துகள் எதிரும் புதிருமாக இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால், அவற்றில் எது உண்மையானது என்ற கேள்வி மக்களிடம் எழுவதும் இயல்பான ஒன்று.

தமிழ்நாட்டில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வளர்ச்சித் திட்டங்களைப் பட்டியலிட்டு, மத்திய நிதியமைச்சர் சொன்னதுபோல, தமிழ்நாடு பாரபட்சத்துடன் நடத்தப்படவில்லை என்றால் அது மகிழ்ச்சிக்குரியது. அதேபோல, தமிழ்நாட்டுக்கு அளிக்கப்பட வேண்டிய மானியங்கள் மற்றும் வரிப் பகிர்வுகளை மேலும் தாமதிக்காமல் வழங்க வேண்டிய பொறுப்பும் மத்திய அரசுக்கு உண்டு. மத்திய நிதியமைச்சரின் கேள்விகளில் விடையளிக்கப்படாதவையும் உண்டு. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரத் தமிழ்நாடு அரசு ஒப்புக்கொண்டால், அது குறித்து விவாதிக்கத் தயாராக இருக்கிறோம் என்று மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசின் மதிப்புக் கூட்டு வரிகளே முக்கியமான காரணம் என்று மத்திய அரசு தொடர்ந்து குற்றம்சாட்டிவரும் நிலையில், இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கும் உண்டு. அதே நேரத்தில், ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியே இன்னும் மாநிலங்களுக்குப் பகிரப்படாமல் நிலுவையில் இருக்கும்போது பெட்ரோல், டீசலையும் அந்த வரிவரம்புக்குள் உள்ளடக்குவது சரியாகுமா என்ற கேள்வியும் எழுகிறது. மொத்தத்தில், மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான நிதியுறவுகள் குறித்து ஒரு வெளிப்படையான பொது விவாதத்தை மத்திய நிதியமைச்சரின் சமீபத்திய பேச்சு தொடங்கிவைத்திருக்கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in