

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புயலை எழுப்பி யிருக்கிறது அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் கொள்முதல் பேர விவகாரம். இதுதொடர் பாக நாடாளுமன்றத்தில் நடந்துவரும் விவாதங்களில், விஷயங் களுக்குப் பதில் இரைச்சல்தான் அதிகமாக இருக்கிறது. காங்கிரஸ் உறுப்பினர்களும் பாஜகவினரும் சுயநல நோக்கில் கோபமாகவும், உள்ளர்த்தத்துடனும் வார்த்தைகளைப் பரிமாறிக்கொண்டாலும் சர்ச்சைக்கிடமான இந்த பேரத்தில், உண்மையான பிரச்சினை எது என்று வெளிப்படையாகவே தெரிகிறது.
ஃபின்மெக்கானிகா அதன் துணை நிறுவனம் வெஸ்ட்லேண்ட் ஆகியவற்றின் முன்னாள் நிர்வாகிகள் இருவரை மிலன் நகர மேல்முறையீட்டு நீதிமன்றம் தண்டித்திருக்கிறது. ஊழலுக்காகவும் விலையை அதிகரித்து போலியாக பில் தயாரித்ததற்காகவும் இந்தத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் முக்கியப் பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான இந்த பேரம், பாதியிலேயே ரத்து செய்யப்பட்டுவிட்டதாலேயே இனி இதைப் பற்றிப் பேச வேண்டியதில்லை என்று சொல்லிவிட முடியாது.
அதேசமயம், இத்தாலி நீதிமன்றத்துக்கு அளித்த ஆவணங் களுடனான குறிப்பில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடைய பெயர்கள் இருந்தன என்பதாலேயே இதை அசைக்க முடியாத ஆவணம் என்றோ, ஊழலில் அவர்களுக்குப் பங்கு இருந்தது என்றோ கூறிவிட முடியாது. ஆனால், இந்த பேரத்தில் ஈடுபட்டவர்கள், சோனியா காந்திக்கும் மன்மோகன் சிங்குக்கும் தெரிந்த நபர்களைத் தொடர்புகொண்டார்கள் என்று செய்தி வெளியாகியிருப்பதால், இது குறித்து மேலும் விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.
இந்த பேரம் தொடர்பாகப் பணம் கைமாறியிருக்கிறது என்ற தகவல் கிடைத்ததும் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது என்பது உண்மைதான். ஆனால், அந்த விசாரணை முழுமையாகவோ, குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையிலோ தீவிரமாக நடக்கவில்லை என்பதுதான் உறுத்தலாக இருக்கிறது. அடுத்து ஆட்சிக்கு வந்துள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் இந்த விவகாரத்தில் சிறப்பாகச் செயல்படவில்லை. இத்தாலியின் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை மிலன் மேல் முறையீட்டு நீதிமன்றம் ரத்து செய்துவிட்டு, இரண்டு பேருக்குத் தண்டனை விதித்தது என்ற தகவலுக்குப் பிறகே சோம்பலை விட்டுச் சற்றே அசைந்து கொடுக்கத் தொடங்கியிருக்கிறது இந்திய அரசு. மிலன் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காகக் காத்திருந்தோம் என்று இந்திய அரசு காரணம் சொல்ல முடியாது. ஏனென்றால், இவ்வழக்கில் தண்டனை பெற்றவர்கள் இந்தத் தீர்ப்பை எதிர்த்து இத்தாலி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பிருக்கிறது.
இந்தச் சூழலில் மத்திய அரசு செய்யக்கூடியதெல்லாம் இந்த பேரம் தொடர்பாக யாரெல்லாம் என்னென்ன தகவல்களைக் கூற முன்வருகிறார்களோ அதையெல்லாம் கவனமாகக் கேட்பதுதான். இந்த பேரத்தில் இடைத்தரகராகச் செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் இந்திய அரசிடம் தகவல் தெரிவிக்க விரும்புவதாகத் தெரிவித்ததை பாஜக அரசு விமர்சித்திருப்பது சரியல்ல. அவரது முயற்சிக்கு உள்ளர்த்தம் கற்பிப்பதுபோல் நிதியமைச்சரும் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சருமான அருண் ஜேட்லி மாநிலங்களவையில் பேசியிருப்பது துரதிர்ஷ்டவசமானது. இந்த பேரம் தொடர்பான உண்மைகளைத் தெரிவித்தால், இந்தியக் கடல்பரப்பில் கைது செய்யப்பட்ட இரண்டு இத்தாலியர்களை விடுதலை செய்ய பிரதமர் மோடி இத்தாலியப் பிரதமருடன் பேரம் பேசினார் என்று கிறிஸ்டியன் மைக்கேல் அளித்த பேட்டி தொடர்பாகவும் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும்.
வெஸ்ட்லேண்ட் பேரம் தொடர்பான தகவல்களைப் பெற வேண்டும் என்ற உண்மையான அக்கறை மத்திய அரசுக்கு இருக்குமென்றால், மத்தியப் புலனாய்வுக் கழகத்துக்கும் (சி.பி.ஐ.), அமல்பிரிவு இயக்குநரகத்துக்கும் (இ.டி.), இப்பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்த வேண்டும். காலம் தாழ்த்தாமல் கிறிஸ்டியன் மைக்கேலுடன் இது தொடர்பாகப் பேச வேண்டும். பாதுகாப்புத் துறையில் லஞ்சமும் ஊழலும் இல்லாமல் பார்த்துக்கொள்வது, வரி செலுத்துவோரின் பணத்தை விரயமாக்காமல் காப்பதற்காக மட்டுமல்ல, ராணுவத்துக்குக் கிடைப்பது தரமுள்ள சாதனமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும்தான்.
ராணுவக் கொள்முதல் என்றாலே தரகர்கள்தான் முதலில் போய் நிற்கிறார்கள். இதைத் தவிர்க்க முடியாது. ஆனால், இந்தத் தரகர்களும் முறையாகத் தங்களைப் பதிவுசெய்துகொள்ள வேண்டும். தரகுத் தொகையைப் பகிரங்கமாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். எந்த பேரத்துக்கு எவ்வளவு தரகு என்று வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட வேண்டும். இதனால் தீவிரவாதிகளுக்கும் சமூக விரோதிகளுக்கும் ஆயுதங்கள் செல்வதைத் தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும் ஓரளவு கட்டுப்படுத்த முடியும். இந்திய அரசியல் கட்சிகள் தங்களுக்குள் இது குறித்து ஆலோசனை நடத்தி புதிய சட்டத்தை இயற்ற உதவ வேண்டும்.
லஞ்சம் தருகிறார்கள் என்பதற்காக திறன் குறைவான சாதனங்களை வாங்குவது நம்முடைய ராணுவத் தயார் நிலையை மட்டுமல்ல.. தலைவர்களின் பாதுகாப்பையும் பாதித்துவிடும். அதனால் மோசமான விளைவுகள் ஏற்பட்டு, தேசத்தின் பாதுகாப்பே கேள்விக்குறியாகிவிடும். ஊழல் பேர்வழிகளான தரகர்கள் உலவும் இடம் இந்தியா என்ற நிலை மாற வேண்டும் என்றால், பாரபட்சமில்லாத கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர வழக்கு அதற்கு முதல்படியாக இருக்கட்டும்!