சொத்துவரி உயர்வு: உள்ளாட்சிப் பொறுப்புகளும் உயரட்டும் ஆண்டுதோறும்!

சொத்துவரி உயர்வு: உள்ளாட்சிப் பொறுப்புகளும் உயரட்டும் ஆண்டுதோறும்!
Updated on
1 min read

நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஆண்டுதோறும் சொத்துவரியை உயர்த்த வகைசெய்யும் சட்டத் திருத்தங்கள் நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டிருப்பது, பொதுமக்களிடம் அது குறித்த அச்சத்தையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. அவ்வப்போது மாநில அரசு அளிக்கும் அறிவுறுத்தல்களுக்கேற்ப நகர்ப்புற உள்ளாட்சிகள் வரிவிகித உயர்வு குறித்துத் தீர்மானங்களை நிறைவேற்றிக்கொள்ள இத்திருத்தங்கள் வகைசெய்கின்றன.

கடந்த ஏப்ரலில், நகர்ப்புற உள்ளாட்சிகளின் வருவாயை அதிகப்படுத்துவதற்காக சென்னையின் முக்கியப் பகுதிகளில் 50 முதல் 150% வரையிலும் மற்ற நகராட்சிகளில் 100% வரையிலும் சொத்துவரிகள் உயர்த்தப்பட்டன. ஏற்கெனவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வு காரணமாக, மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் நிலையில், சொத்துவரியைப் படிப்படியாக உயர்த்தியிருக்கலாமே என்ற குரலைப் பொதுமக்களிடமிருந்து கேட்க முடிகிறது.

மேலும், தொழிற்சாலைகளுக்கு 75% உயர்வை நிர்ணயிக்கையில், குடியிருப்புகளுக்கு 150% வரையிலும் அதை நீட்டிப்பது பொருத்தமாகுமா என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. ஆனாலும், 15-வது நிதிக் குழுவின் வழிகாட்டு நெறிமுறைகளைக் காரணம்காட்டி, சொத்துவரிகளுக்கான வரிவிகிதத்தை உயர்த்துவது தவிர்க்கவியலாதது என்று மாநில அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

நிதிக் குழுவின் பரிந்துரைகளைக் காரணம்காட்டியே தற்போது நகர்ப்புற உள்ளாட்சிகளில் சொத்துவரியை ஆண்டுதோறும் உயர்த்துவதற்கான சட்டத் திருத்த முன்வடிவுகளும் நிறைவேறியுள்ளன. ஆண்டுதோறும் சொத்துவரி உயர்த்தும் அறிவிப்பு, மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2021-22 முதல் 2025-26 வரையிலும் மானியமாகக் கிடைக்கும் ரூ.15,419 கோடியுடன் தொடர்புடையது என்று நிதியமைச்சரும் விளக்கம் அளித்துள்ளார். அதே நேரத்தில், ஏழை எளியவர்கள் பாதிக்கப்படாத வகையில், இந்த வரிவிகிதங்கள் நிர்ணயிக்கப்படும் என்று முதல்வர் அளித்துள்ள உறுதிமொழி ஒன்றே மக்களின் தற்போதைய ஒரே ஆறுதல். முதல்வரின் நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளும் உள்ளூர் நிலவரங்களை அனுசரித்து வரிவிகிதங்களை நிர்ணயிக்க வேண்டும் என்ற அவரது அறிவுறுத்தல்களும் உள்ளாட்சி அலுவலர்களால் உண்மையாகட்டும்.

சொத்துவரிகளே நகர்ப்புற உள்ளாட்சிகளின் முதன்மையான வருவாய் ஆதாரம். கடந்த 2008-க்குப் பிறகு, சொத்து வரிவிகிதங்கள் சீராய்வு செய்யப்படாத நிலையில், தற்போதைய அரசின் முடிவுகள் தவிர்க்கவியலாதவை. சொத்து வரிவிகித சீராய்வைப் போலவே உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான கட்டிடங்கள், கடைகளின் வாடகைகளும் ஆண்டுதோறும் உயர்த்தப்பட வேண்டும்.

தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம், 1920-ன்படி வசூலிக்கப்படும் சொத்துவரிகள், கட்டிடங்களின் வருடாந்திர மதிப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதுபோலவே, அவ்வாறு வசூலிக்கப்படும் வரி, பொதுவான காரணங்களுக்காக மட்டுமின்றி கட்டிடங்களின் கழிவுநீரகற்றும் அமைப்புகளை நிர்வகித்தல், தெருவிளக்கு வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகிய சேவைகளையும் உள்ளடக்கியதாக அமையலாம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இனிவரும் ஆண்டுகளில் தொடர்ந்து சொத்துவரி உயரும் என்றால், அது எந்தெந்த நோக்கங்களுக்காக வசூலிக்கப்படுகிறதோ அந்தச் சேவைகளை மென்மேலும் மேம்படுத்தவும் நகர்ப்புற உள்ளாட்சிகள் களமிறங்கட்டும்!

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in