இலங்கை நெருக்கடிகளுக்கு வன்முறை தீர்வல்ல!

இலங்கை நெருக்கடிகளுக்கு வன்முறை தீர்வல்ல!
Updated on
1 min read

இலங்கைப் பிரதமரைப் பதவியிலிருந்து விலகச்செய்த மக்களின் எழுச்சிப் போராட்டம், தற்போது வன்முறையின் போக்கில் திசைமாறியிருக்கிறது. விலைவாசி உயர்வு, நாணய மதிப்பின் வீழ்ச்சி, அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு என்று கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கித் தவிப்பதற்கு, ராஜபக்ச சகோதரர்களின் தவறான நிர்வாகமே காரணம் என்ற கொதிப்பு மக்களிடம் எழுந்தது. அதன் விளைவாக, கடந்த சில வாரங்களாக நடந்துவந்த பெருந்திரளான மக்கள் போராட்டத்தில் இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து, எல்லோரும் ஒன்றிணைந்து நின்றனர்.

இந்தப் போராட்டத்துக்குக் கிடைத்த முக்கியமான வெற்றி, பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பதவிவிலகல். ஆனால், அதைத் தொடர்ந்து அங்கு நடந்துவரும் வன்முறைகளும் அதன் காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்திருப்பதும் 200-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருப்பதும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்கள் தீயிடப்பட்டிருப்பதும் இலங்கை முழுவதும் கட்டுப்பாடில்லாத ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே, கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை, அதிலிருந்து மீண்டெழ வேண்டுமெனில், நல்லெண்ண அடிப்படையில் அதற்கு உதவ முன்வரும் நாடுகளுடன் அயலுறவுப் பேச்சுவார்த்தைகளை நடத்த நிலையான ஓர் அரசும் அமைதியான சூழலும் அவசியம்.

அதிபர் மாளிகையின் முன்பும் பிரதமர் மாளிகையின் முன்பும் அமைதியாகப் போராடிவந்தவர்களின்மீது ராஜபக்ச சகோதரர்களின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதுதான் வன்முறைகள் வெடிக்கக் காரணம் என்று ஒரு தரப்பில் கூறப்படுகிறது. ராஜபக்ச ஆதரவாளர்கள் தாக்குதல்களை நடத்தியபோது, அதைக் காவல் துறையினர் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாகவும் குற்றச்சாட்டு நீள்கிறது. இந்தத் தாக்குதல்கள் ஏற்கெனவே ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கொதிநிலையிலிருந்த போராட்டக்காரர்களை எதிர்த் தாக்குதல்களை நடத்தத் தூண்டியதாகக் கூறுபவர்கள் தாங்கள் வன்முறையை ஆதரிக்கவில்லை என்பதையும் தெரிவிக்கின்றனர்.

அரசுக்கு எதிராகவும் ஆட்சிக்கு எதிராகவும் வெடிக்கும் மக்கள் எழுச்சி, கடைசியில் கட்டுப்பாடற்ற வன்முறையில் முடிந்து, உயிர்ச் சேதங்களையும் பொருட்சேதங்களையும் விளைவிக்கும் என்ற காரணத்தைச் சொல்லித்தான் காலங்காலமாக அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆரம்ப நிலையிலேயே அனுமதி மறுக்கப்பட்டுவருகிறது. இந்தப் பொதுவிதிக்கு இலங்கையும் விதிவிலக்காக இல்லை. அமைதியுடன் நடத்தப்பட்டு, தனது நோக்கத்தையும் எட்டிய நிலையில், இலங்கையின் மக்கள் போராட்டம் வன்முறையில் முடிந்துள்ளது.

தமிழர்கள்மீது நடத்தப்பட்ட இனப் படுகொலைகளுக்காக ராஜபக்ச குடும்பத்தினரைப் பழிவாங்கும் படலமாக இந்தப் போராட்டத்தைக் கருதும் மனப்போக்கு ஒன்று தமிழ்நாட்டில் வளர்த்தெடுக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது. இந்தப் போராட்டத்தை இலங்கையில் எல்லா மக்களும் இணைந்துதான் நடத்தினார்கள் என்பதும் இன்னமும் அவர்கள் ஓரணியில்தான் நிற்கிறார்கள் என்பதும் மிக முக்கியமானது. ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை, ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் செல்வது நல்லதல்ல. அந்நாட்டின் அரசமைப்பின்படி, நாடாளுமன்றம் கூடி அமைதியுடன் ஆட்சி மாற்றங்கள் நடக்கட்டும். விரைவில், பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளியே வரட்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in