

பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு மீண்டும் நடைமுறைப்படுத்த இயலாமைக்கு நிதியமைச்சர் அளித்துள்ள விளக்கங்கள் அரசு ஊழியர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. திமுக தனது 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் அளித்திருந்த முக்கியமான உறுதிமொழிகளில் அதுவும் ஒன்று. பழைய ஓய்வூதியத் திட்டம் என்ற தனித் தலைப்பின் கீழ், வரிசை எண் 309-ல் இடம்பெற்றிருந்த இந்த வாக்குறுதி, தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக முன்வைக்கப்பட்டது. 2019 மக்களவைத் தேர்தலின்போதும் திமுக இந்த வாக்குறுதியை அளித்திருந்தது. அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் என்ற தலைப்பில், 16-வது அத்தியாயத்தில் இடம்பெற்றிருந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவரவும் ஓய்வூதிய நிதி மற்றும் வருங்கால வைப்புநிதிகளைப் பங்குச் சந்தையிலும் தனியார் நிதி நிறுவனங்களிலும் முதலீடு செய்யக் கூடாது எனவும் திமுக பரிந்துரை செய்யும் எனத் தெரிவித்திருந்தது.
திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால், பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவினாலும், பெருந்தொற்றுக்குப் பிறகான நிதிநிலையைக் கருத்தில் கொண்டு, அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காலதாமதமாகலாம் என்ற கருத்தே நிலவியது. ஆனால், நிதியமைச்சரின் தற்போதைய அறிவிப்பு அத்திட்டத்துக்கு வாய்ப்பே இல்லை என்ற எண்ணத்தைத் தோற்றுவித்துள்ளது.
ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தப் போவதாக நடப்பு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருந்தது. ஆனால், அதற்கு அம்மாநிலத்துக்கு உரிமை கிடையாது எனவும் நிதியைத் திருப்பிக்கொடுக்க முடியாது எனவும் ஓய்வூதிய நிதி ஒழுங்காண்மை மற்றும் மேம்பாட்டு ஆணையம் மறுத்திருக்கிறது என்ற செய்தியை உதாரணம்காட்டி, தமிழ்நாடு நிதியமைச்சர் தமது விளக்கத்தைச் சட்டமன்றத்தில் அளித்துள்ளார். 2003-க்கு முன்பு நடைமுறையிலிருந்த ஓய்வூதியத் திட்டத்தின்படி, ஓய்வூதியத்துக்கான நிதி அரசின் கணக்கிலேயே பராமரித்துவரப்பட்டது. ஆனால், 2004-ம் ஆண்டிலிருந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு, அது தனிநபர் நிதியாகவே கணக்கில் கொள்ளப்படுகிறது என்பது நிதியமைச்சரின் விளக்கம்.
வரிவருவாய்ப் பகிர்வு சார்ந்து மத்திய அரசோடு தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் திமுக, பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து மத்திய அரசின் பதிலையே தானும் எதிரொலிப்பது முரணாக இருக்கிறது. ஓய்வூதிய ஆணையம், அரசமைப்பின்படி தனியதிகாரம் பெற்ற அமைப்பு அல்ல, மத்திய அரசு இயற்றிய சட்டத்தின் கீழ் இயங்கிவரும் அமைப்புதான்.
பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் கூட்டணியில் முக்கிய அங்கத்தினராக விளங்கும் திமுக, தாம் மத்திய அமைச்சரவையில் இடம்பெறும்போது, பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கான முயற்சிகளை முன்னெடுப்போம் என்றாவது அறிவித்திருக்கலாம். ஆனால், ஓய்வூதிய ஆணையத்தின் பதிலை மேற்கோள்காட்டி, தனது வாக்குறுதியிலிருந்து பின்வாங்க முயல்கிறது. அதே நேரத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு விதிமுறைகளில் உள்ள சிக்கல்கள் ஏற்கெனவே தெரிந்திருந்த நிலையிலும் தேர்தல் நேரத்தில் அப்படியொரு வாக்குறுதி ஏன் வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுவதும் இயல்பானது.