பேரறிவாளன் வழக்கு: அதிகாரப் பிரிவினையும் நீதித் துறை இடையீடும்

பேரறிவாளன் வழக்கு: அதிகாரப் பிரிவினையும் நீதித் துறை இடையீடும்
Updated on
1 min read

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 35 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனின் தண்டனைக் குறைப்புக்கான கருணை மனுவையொட்டி நடந்துவந்த மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்கள் குறித்த விவாதம் தற்போது நிர்வாகத் துறைக்கும் நீதித் துறைக்கும் இடையிலான விவாதமாக மாறியிருக்கிறது. பேரறிவாளனின் கருணை மனுமீது குடியரசுத் தலைவர் முடிவெடுக்கும்வரை காத்திருக்குமாறு மத்திய அரசின் தரப்பில் அளிக்கப்பட்ட பதிலை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இவ்வழக்கில் மத்திய அரசு வாதாடத் தயாராக இல்லாதபட்சத்தில், தாமே பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்கப்போவதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவ்வாறு ஒரு முடிவெடுக்கப்பட்டால், அது நிர்வாகத் துறையின் தலைமை என்ற அடிப்படையில் குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் அரசமைப்பின் வாயிலாக வழங்கப்பட்டுள்ள நீதித் துறை அதிகாரத்தை விஞ்சி, உச்ச நீதிமன்றமே அதில் தலையிடும் ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கக்கூடும். அவ்வாறு உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கவும் அரசமைப்பு அனுமதிக்கிறது.

சட்டமியற்றும் அவைகள், நிர்வாகத் துறை, நீதித் துறை ஆகியவற்றுக்கு இடையே அதிகாரங்கள் தெளிவாகப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன என்றாலும், விதிவிலக்காக ஒவ்வொரு துறைக்கும் பிற துறைகளின் அதிகாரங்களும் அளிக்கப்பட்டு இத்துறைகளுக்கு இடையிலான அதிகாரப் பிரிவினையில் சமநிலை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில்தான் சட்டமியற்றும் அவை, நீதித் துறை இரண்டையும் தாண்டி மாநில நிர்வாகத்தின் தலைவர் என்ற அடிப்படையில் ஆளுநருக்குத் தண்டனைக் குறைப்பு அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவர் அதைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் என்ற காரணத்தைச் சொல்லி மத்திய அரசிடம் ஒப்படைப்பார் எனில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு அதை ஆட்சேபிப்பது இயல்பானதே ஆகும்.

கருணை மனுவின் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநில அமைச்சரவை கூடி ஒரு தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பிய நிலையில், அமைச்சரவை கருத்தின்படி அவர் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனைக் குறைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தாமல், அதைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்புவது சரியாகுமா என்பதே இவ்விவாதத்தின் மையப் புள்ளி. ஆளுநருக்கு அரசமைப்பின் கூறு 161-ன்படி அளிக்கப்பட்டுள்ள தண்டனைக் குறைப்பு அதிகாரத்தில் தலையிடுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்பது இவ்வழக்கில் மத்திய அரசின் வாதமாக இருந்துவருகிறது. குடியரசுத் தலைவரோ ஆளுநரோ முறையே மத்திய, மாநில அரசுகளின் கருத்துகளின்படி முடிவெடுக்க வேண்டும் என்பதே மக்களாட்சியின் அடிப்படை.

கருணை மனு மீது முடிவெடுப்பதற்கான கால வரையறை குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் அரசமைப்பின்படி வரையறுக்கப்படவில்லை. இத்தகைய தன்விருப்ப அதிகாரங்களைப் பயன்படுத்தும்போது, அரசமைப்பை வார்த்தைக்கு வார்த்தை பொருள் கொண்டு, அந்த அதிகாரங்களின் அதிகபட்ச சாத்தியங்களைக் கையிலெடுப்பது சரியான அணுகுமுறையாக இருக்க முடியாது. கருணை மனு மட்டுமல்ல, மாநில அரசுகள் நிறைவேற்றும் சட்டமுன்வடிவுகளும்கூட இவ்வாறு ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காலவரையின்றி காத்திருப்பது அரசமைப்புரீதியில் மேலும் தீவிரமான விவாதங்களை இனிவரும் காலத்தில் உருவாக்கிவிடக்கூடும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in