

ஏப்ரல் 19-ல் சென்னையில் காவல் நிலைய விசாரணையின்போது இளைஞர் விக்னேஷ் இறந்தது தொடர்பாக, எதிர்க்கட்சியான அதிமுகவும் மனித உரிமை ஆர்வலர்களும் அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவந்த நிலையில், நம்பிக்கைக்குரிய சில நகர்வுகள் தென்படத் தொடங்கியுள்ளன. விக்னேஷின் இறப்பு சந்தேகத்துக்குரியதாக வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்த நிலையில், உடற்கூறாய்வு அறிக்கையின் அடிப்படையில், தற்போது அது கொலைவழக்காக மாற்றப்பட்டு, சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 6 காவலர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கைகள், காவல் துறையைத் தனது பொறுப்பில் வைத்திருக்கும் முதல்வர் விருப்புவெறுப்பின்றிச் செயல்படுகிறார் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. இதுபோலவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தங்கமணி உடல்நலம் குன்றி இறந்ததும் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
சட்டமன்றத்துக்கு உள்ளும் வெளியிலும் இது குறித்த விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு இட்டுள்ள உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது. கைதானவர்களை மாலைக்குள் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் இரவு நேரத்தில் விசாரணை நடத்தக் கூடாது என்றும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் தென்னிந்திய அளவில், தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான காவல்நிலைய மரணங்கள் பதிவாகிவரும் நிலையில், டிஜிபியின் இந்த உத்தரவு, விசாரணையின்போதான சித்ரவதைகளைக் கட்டுப்படுத்துவதற்குக் காரணமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். இரண்டாண்டுகளுக்கு முன்பு, தூத்துக்குடியில் காவல் நிலைய விசாரணையின்போது தந்தை, மகன் இருவரும் இறந்தது மக்களிடத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக அதைக் கண்டித்து தீவிரமான பிரச்சாரத்தைக் கையிலெடுத்தது. எனவே, இன்று திமுக ஆட்சியில் நடந்துள்ள காவல்நிலைய மற்றும் சிறை மரணங்கள் நியாயமான முறையில் விசாரிக்கப்படும் என்பது மனித உரிமை ஆர்வலர்களின் இயல்பான எதிர்பார்ப்பாக இருக்கிறது.
2016-17க்கும் 2021-22க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 11,419 காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. எனினும், வெறும் 0.2% வழக்குகளில் மட்டுமே தொடர்புடைய காவலர்களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்கும் தேசிய மனித உரிமை ஆணையமும்கூட இந்தக் காலகட்டத்தில் ஒரு வழக்கில்கூட குற்ற விசாரணைக்குப் பரிந்துரைக்கவில்லை என்பது இன்னும் அதிர்ச்சிக்குரியது.
இதே காலகட்டத்தில், தமிழ்நாட்டில் நடந்த காவல்நிலைய மரணங்கள் மட்டும் 46. தவிர, நீதித் துறைக் காவல் என்று அழைக்கப்படும் சிறைகளில் அடைக்கப்பட்ட விசாரணைக் கைதிகள் 432 பேரும் இறந்துள்ளனர். காவல் துறையால் கைதுசெய்யப்பட்ட ஒருவர் 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும். கைதான அன்றே அவரை மாலை நேரத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறைக்கு அனுப்பினாலே காவல்நிலைய சித்ரவதைகளுக்கான வாய்ப்புகளைத் தவிர்க்க முடியும். இவ்வகையில், தமிழ்நாடு காவல் துறை பிறப்பித்திருக்கும் உத்தரவு, மனித உரிமைக்கான நெடும்பயணத்தில் முற்போக்கான ஒரு முடிவு.