தமிழ்நாட்டின் உதவிகள் இலங்கையுடனான நட்புறவை வளர்த்தெடுக்கட்டும்!

தமிழ்நாட்டின் உதவிகள் இலங்கையுடனான நட்புறவை வளர்த்தெடுக்கட்டும்!
Updated on
1 min read

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் தமிழ்நாடு அரசு செய்ய முன்வந்திருக்கும் உதவிகள் இருநாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வளர்த்தெடுக்கும் வாய்ப்பினை உருவாக்கியுள்ளது. இலங்கை மக்களுக்கு ரூ.123 கோடி மதிப்பிலான பல்வேறு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏப்ரல் 29 அன்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,

இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவுப் பயணத்தில் ஒரு மைல்கல்லாக என்றென்றும் நினைவுகூரப்படும். 40,000 டன் அரிசி, 100-க்கும் மேற்பட்ட உயிர் காக்கும் மருந்துப் பொருட்கள், குழந்தைகளுக்கு 500 டன் பால் பவுடர் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த உதவிகள் அமையும். மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரங்கள் சார்ந்து அரசமைப்புரீதியில் கருத்து முரண்பாடுகள் நிலவிவரும் நிலையிலும், தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசும் வெளியுறவுத் துறை அமைச்சகமும் இந்த நிவாரண உதவிகளுக்கு அனுமதியளித்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. மத்திய அரசு, ஜனவரி தொடங்கி இதுவரையில் மொத்தம் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நல்லெண்ண அடிப்படையில் நிவாரண உதவிகளைச் செய்ய முன்வந்து சட்டமன்றத்தில் தனித் தீர்மானத்தை நிறைவேற்றிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளார். 2009-ல் நடந்த பெருந்துயரத்தின் நினைவு இன்னும் அகலாத நிலையில், தமிழ்நாட்டின் தரப்பிலிருந்து நேரடியாக இலங்கைக்குச் செய்யப்படவிருக்கும் இந்த உதவிகள் தமிழ் மக்களின் பெருந்தன்மைக்கு உதாரணம். தமிழ்நாட்டின் உதவிகள் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமின்றி அங்கு வாழும் அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழர்களின் அமைப்புகள் கேட்டுக்கொண்டிருப்பது மனதை நெகிழவைக்கக் கூடியது. இதுவே தமிழர்களின் பண்பாடு என்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘பகைவருக்கும் அருள்வாய் நன்னெஞ்சே’ என்று பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டியிருப்பது பொருத்தமானது.

இலங்கை நிவாரணத்துக்காக தனித் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், தனது குடும்பத்தின் சார்பில் ரூ.50 லட்சம் அளிப்பதாக அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக திமுகவும் கட்சியின் சார்பில் ரூ. 1 கோடியும் திமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியத்தையும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.

காங்கிரஸ், மதிமுக, விசிக கட்சிகளின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது ஒருமாத ஊதியத்தை வழங்க முன்வந்துள்ளனர். முதல்வரின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டின் வணிகப் பெருமக்களும் இந்த உதவியில் பங்கெடுத்துவருகிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து செல்லவிருக்கும் இந்த உதவிகள் நாடுகளுக்கிடையிலான நட்புறவை மட்டுமல்ல, இலங்கையில் வாழும் மக்களிடையேயும் இன, மொழி பேதங்களை விட்டொழித்து நிரந்தரமான நட்புறவு தொடர வழியமைக்கட்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in