

இந்தியாவின் நில எல்லைகளையும் மாநிலங்களையும் ‘கூகுள்’ போன்ற நிறுவனங்கள் சரியாகக் காட்ட வேண்டும் என்பதற்கான சட்ட மசோதாவை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பல்வேறு வகையான தணிக்கைகளையும் கட்டுப் பாடுகளையும் அந்த மசோதா விதிப்பதால் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது.
இணையதள வசதி காரணமாக இன்றைய உலகமே விரல் நுனியில் வந்துவிட்டது. அதனால், உலக அளவிலான தரவுகளும் தகவல்களும் மக்களுக்குத் தடையில்லாமல் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. உலகின் பல்வேறு நாடுகள் இதைத் தணிக்கை செய்யவும் கட்டுப்படுத்தவும் பல வகைகளில் முயல்கின்றன. இந்திய அரசின் வரைவு மசோதாவும் இதைத்தான் நமக்கு உணர்த்துகிறது.
இந்தியாவைப் பற்றிய வரைபடம், புகைப்படம், உள்ளிட்ட தகவல்களைத் தயாரிப்பதாக இருந்தால், இந்திய அரசிடம் முறையான உரிமம் பெற்று அதன் பிறகே அதைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று அது கட்டாயப்படுத்துகிறது. முறையான அனுமதி, உரிமம் இல்லாமல் வரைபடங்களையோ புகைப்படங்களையோ தயாரித்து பொதுவெளியில் வெளியிடுவோருக்கு அதிகபட்சம் ரூ.100 கோடி அபராதமும் 7 ஆண்டுகள் வரையில் சிறைவாசமும் விதிக்கப்படும் என்கிறது அந்த வரைவு மசோதா.
இந்தியாவைச் சேர்ந்த ஜம்மு-காஷ்மீரத்தையும் அருணாசலப் பிரதேசத்தையும் இந்திய மாநிலங்களாகக் கருதாமல், வரைபடத்தில் வேறுபடுத்திக்காட்டும் விஷமத்தனங்கள் இணையத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அத்தகைய செயல்களை இப்போதுள்ள சட்டத்தின்படியே தண்டிக்க வழியிருக்கிறது. அப்படியிருக்க, மக்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு முரட்டுத்தனமாகக் கடிவாளம் போடுகிறது புதிய மசோதா. தேச வரைபடம் மட்டுமல்ல, செயற்கைக்கோள்கள், விமானங்கள், கப்பல்களிலிருந்து எடுக்கும் புகைப்படங்களைக்கூட இந்த மசோதா கட்டுப்படுத்த நினைக்கிறது. தாஜ்மகாலைப் புகைப்படம் எடுக்கக்கூட உரிமம் அவசியம் என்றுதான் இந்த வரைவு மசோதா கூறுகிறது.
இன்றைய மின்னணு யுகத்தில் ஒரு நொடிக்குள் லட்சக்கணக் கானவர்களிடையே தகவல்கள் பரிமாறப்படுகின்றன. இந்தச் சூழலில், இப்படியொரு சட்டத்தைக் கொண்டுவந்தாலும் அதை எப்படி அமல் செய்வது, லட்சக்கணக்கானவர்களை எப்படிக் கண்காணிப்பது, தவறு செய்தால் எப்படித் தண்டிப்பது என்பதை அரசு நினைத்துப் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் இந்தியா, பொலிவுறு நகரங்கள் என்ற கொள்கைகளைப் பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். இவை இரண்டும் வெற்றிகரமாக நிறைவேற வரைபடங்கள், புகைப்படங்களை மக்கள் தங்களுடைய பணி தொடர்பாகத் தயாரித்துக்கொள்ள சுதந்திரம் அவசியம். இதில் ஈடுபடும் நிறுவனங்களும் தனி நபர்களும் உரிமம் பெற்றுத்தான் இவற்றை மேற்கொள்ள வேண்டும் என்றால், திட்டங்களை நிறைவேற்றவே நீண்ட காலதாமதம் ஏற்பட்டும். சிவப்பு நாடா முறையை அது வலுப்படுத்திவிடும்.
இந்தியாவின் நில எல்லைகளைச் சரியாகக் குறிப்பிட வேண்டும், இந்தியாவின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை யாரும் படம் எடுத்தோ, வரைந்தோ பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவித்துவிடக் கூடாது என்ற நோக்கங்கள் அவசியமானவைதான். ஆனால், அதற்கான மசோதா தயாரிக்கும் பணியை அறிவியல், தொழில்நுட்பத் துறை போன்றவற்றிடம் விட்டுவிடுவதுதான் சரியாக இருக்கும். எதற்கெடுத்தாலும் கட்டுப்பாடு, தடை என்றே சிந்திக்கும் உள்துறை அதில் ஈடுபடுவது சரியல்ல.
அதனால், இந்த மசோதாவை வரைவுநகல் நிலையிலேயே அரசு மாற்றும் என்று தெரிகிறது. உள்துறை அமைச்சகத்துக்குப் பதிலாக அறிவியல், தொழில்நுட்பத் துறை இதைத் தயாரிக்கும் என்றும் தெரிகிறது. காலம் கடந்தாவது இந்தக் கருத்தை மத்திய அரசு ஏற்றிருப்பது வரவேற்கத் தக்கது. தேவையற்ற சர்ச்சைகளையும், வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைகளையும் ஏற்படுத்தும் மசோதாக்களைக் கொண்டுவராமல் இருப்பதே நல்லது!