

நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது பதிலளித்துப் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, அரசுக் கல்லூரிகளில் பெண்களுக்குக் காலை வேளையிலும் ஆண்களுக்கு மாலை வேளையிலும் வகுப்புகள் நடத்துவது குறித்து ஆலோசித்துவருவதாகத் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. திராவிட இயக்கத்தின் மாணவர் தலைவராகப் பொதுவாழ்வில் நுழைந்தவர் உயர் கல்வித் துறை அமைச்சர். அவரும் சாதியக் கட்சி நிறுவனர்களின் குரலை எதிரொலிப்பதுபோல, ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவித்திருப்பது, அவர் சார்ந்திருக்கும் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைக்கே முரணாக அமைந்துள்ளது.
பள்ளி, கல்லூரி நாட்களிலிருந்தே பாலின சமத்துவம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து பேசிவருகிறது திராவிட இயக்கம். அதற்கு மாறாக, இருபாலருக்கும் தனித்தனியாக வகுப்புகளை நடத்துவது ஆண்களும் பெண்களும் இயல்பாகப் பழகக்கூடிய, இணைந்து பணியாற்றக்கூடிய சூழலை மறுத்து, அவர்களுக்குள் நிரந்தர சமத்துவமின்மையை உருவாக்கிவிடக் கூடும். பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காகவே அவர்களுக்கு மட்டும் காலை வேளையில் தனியாக வகுப்புகள் நடத்தவிருப்பதாகக் காரணம் கூறப்படுகிறது.
கல்வியைப் பாடநூல்களோடும் தேர்வுகளோடும் மட்டும் குறுக்கிப் பார்ப்பது சரியானதாக இருக்க முடியாது. கல்லூரிகளில் பயின்று பட்டம் பெற்ற பெண்கள் நாளை வேலைவாய்ப்புகளை நோக்கி நகரும்போது, பாலினச் சமத்துவம் குறித்த புரிதலும் சமூகம் குறித்த புரிதலும் அவர்களுக்கு மிகவும் அவசியமானதாகிறது. அதற்கான பயிற்சிக் களங்களாகக் கல்லூரிப் படிப்புகளைத் திட்டமிட வேண்டும்.
பாலின சமத்துவம் குறித்து பெரியார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலைப் பள்ளி மாணவர்களிடம் விநியோகிக்கும் இயக்கமும்கூடத் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகிறது. பள்ளி அளவிலேயே இருபாலருக்கும் ஒன்றாக வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று விவாதிக்கப்பட்டுவரும் இன்றைய காலகட்டத்தில், கல்லூரியிலும்கூட ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக வகுப்புகள் நடத்துவதற்குத் திட்டமிடுவது, மாணவர்களைப் பின்னோக்கி இழுத்துச் செல்வதுபோல் ஆகிவிடும். இருபாலரும் படிக்கும் கல்வி நிறுவனங்களில் எழக்கூடிய சில இயல்பான சிக்கல்கள் கருத்தில் கொள்ளப்படத்தான் வேண்டும். அந்தந்தக் கல்லூரி அளவிலான ஆசிரியர், மாணவர்களை உள்ளடக்கிய நன்னடத்தைக் குழுக்களின் மூலமாகவே அவற்றைச் சரிசெய்துகொண்டுவிட முடியும். விதிவிலக்கான ஒருசில சம்பவங்களை உதாரணம்காட்டி அதையே பொதுமைப்படுத்தக் கூடாது.
அதுபோலவே, இருபாலர் கல்வி குறித்துப் பெற்றோர்களின் மனோபாவத்திலும் மாற்றங்கள் வேண்டியிருக்கிறது. தங்கள் பெண் குழந்தைகள், பெண்கள் கல்லூரிகளில் படிப்பதுதான் பாதுகாப்பானது என்ற எண்ணம் அவர்களிடம் வலுவாக வேரோடியிருக்கிறது. இவ்வாறு மிகுந்த பாதுகாப்பு உணர்வோடு வளர்க்கப்படும் பெண்களால் நாளை இந்தச் சமூகத்தை எப்படி எதிர்கொள்ள முடியும்? முன்கூட்டியே அவர்களுக்குச் சமூக உறவுகள் குறித்த புரிதலை உருவாக்கத் தவறினால், அவர்கள் பின்னாளில் முக்கியமான தருணங்களில் சரியான முடிவுகளை எடுக்கத் தடுமாற நேரலாம் என்ற விழிப்புணர்வும் பெற்றோர்களிடம் உருவாக வேண்டும்.