

இந்து சமய அறநிலையத் துறை தொடர்பில் கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த வழக்குகளில் அளிக்கப்பட்ட தீர்ப்பும், நீதிபதிகள் தெரிவித்த கருத்துகளும் தமிழ்நாடு அரசால் கவனத்துடன் பரிசீலிக்கப்பட வேண்டியவை. முதலாவது, சென்னை அயோத்தியா மண்டபம் வழக்கு. மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீராம் சமாஜ் அமைப்பின் சார்பில் கட்டப்பட்டுள்ள அயோத்தியா மண்டபத்தின் நிர்வாகத்தை இந்து சமய அறநிலையத் துறை கையிலெடுத்துக்கொண்ட வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கில், பக்தர்களிடம் காணிக்கை பெறுவதை நிரூபிக்கவில்லை என்ற அடிப்படையில், அறநிலையத் துறை உத்தரவைச் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு அறிவித்துள்ளது.
மற்றொரு வழக்கு, அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டதாகத் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்குகளை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இது குறித்த அறநிலையத் துறையின் பதில் மனுவுக்குக் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. மூன்றாவது நபர் ஒருவர் வழக்கு தொடுத்த பிறகுதான், இது குறித்த தகவலே அறநிலையத் துறைக்குத் தெரியவந்துள்ளது என்று வருத்தம் தெரிவித்துள்ள நீதிபதிகள், கோயில் நிலங்களில் கட்டிடங்கள் கட்டி முடிக்கும் வரை அதை அனுமதித்த, அது குறித்த ஆணையர்களுக்கு முறைப்படி தெரிவிக்காத அலுவலர்களின் ஓர் ஆண்டு ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக் கூடாது என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.
கோயில் உள்ளிட்ட வழிபாட்டிடங்களை மட்டுமல்ல, முறையாக நிர்வகிக்கப்படாத அறக்கட்டளைகளையும் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் அளவுகடந்த அதிகாரத்தை தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையக் கொடைகள் சட்டம் 1959, அத்துறைக்கு வழங்கியுள்ளது. இந்து சமயம் மட்டுமின்றி, தமிழ்நாட்டில் உள்ள சமண சமய வழிபாட்டிடங்களையும்கூடக் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள இச்சட்டம் அதிகாரம் அளித்துள்ளது. முறையற்ற நிர்வாகம் என்ற குற்றச்சாட்டின் பெயரில் விசாரிக்கவும் ஆணையரின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகவும் இச்சட்டம் அனுமதிக்கிறது என்றபோதிலும், அதற்கான நடைமுறைச் சாத்தியங்கள் குறைவு என்பதே உண்மை.
அயோத்தியா மண்டபம் வழக்கில், ஸ்ரீராம் சமாஜ் நீதிமன்றத்தை நாடியதன் காரணமாக அறநிலையத் துறை நடவடிக்கையிலிருந்து தற்காலிகமாகத் தப்பியிருக்கிறது. ஆனால், கிராமப்புறங்களில் உள்ள நாட்டார் தெய்வக் கோயில்கள் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் எப்போது வேண்டுமானாலும் இணைக்கப்பட்டுவிடக் கூடிய அச்சம் மக்களிடையே நிலவுகிறது. நிர்வாகச் சீர்கேடுகளைக் காரணம்காட்டி, புதிய கோயில்களையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முனையும் அறநிலையத் துறை, ஏற்கெனவே தம் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் சொத்துகள் ஆக்ரமிப்புகளுக்கு உள்ளாவதையும் அனுமதிப்பது முரணானது. இது குறித்து நீதிமன்றம் காட்டியுள்ள கோபம் நியாயமானது. திமுக ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பிறகு, ஆக்ரமிக்கப்பட்ட கோயில் சொத்துக்களை மீட்டெடுப்பதில் தீவிரம்காட்டி வருகிறது. ஆக்ரமிப்புகளை அகற்றுவதைப் போலவே, ஆரம்ப நிலையிலேயே அவற்றை அனுமதிக்காமல் தடுக்கவும் இனிவரும் காலத்திலாவது உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.