

மதுரை சித்திரைத் திருவிழாவில் நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்திருப்பதும், தஞ்சை களிமேடு தேர்த் திருவிழாவில் 11 பேர் உயிரிழந்திருப்பதும் வருத்தத்துக்குரியது. இவ்விரு துயரச் சம்பவங்களிலும் உயிரிழந்தவர்களுக்குத் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், களிமேடு தேர்த் திருவிழா விபத்தில் உயிரிழந்தவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். தேர்த் திருவிழாவில் படுகாயமடைந்தவர்களுக்கு உயர்தரமான சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளதோடு, ஒரு நபர் விசாரணைக் குழுவையும் நியமித்துள்ளார். இந்த ஆண்டின் துயரத்துக்குரிய இவ்விரு சம்பவங்களும் இனிவரும் காலத்துக்கான சில படிப்பினைகளை நமக்கு அளித்துள்ளன.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவில் நெரிசல் ஏற்பட்டதற்குக் குறிப்பிட்ட அந்நாளில் விழா நடக்கும் பகுதியில் வழக்கத்துக்கும் அதிகமான வாகனங்களை அனுமதித்ததும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது. கரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த இரண்டாண்டுகள் திருவிழாவில் கலந்துகொள்ள முடியாதவர்கள் அதிகளவில் இவ்விழாவில் கலந்துகொள்ள வந்தனர் என்ற காரணம் ஒருபுறமிருக்க, இது போன்ற முக்கியத் திருவிழாக்களின்போது எத்தனை ஆயிரம் பேர் அங்கு கூடுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்ற அறிவியல்பூர்வமான முன்கணிப்புகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பல்லாயிரக்கணக்கானவர்கள் ஒரே இடத்தில் கூடுவதற்கு வாய்ப்புள்ள திருவிழாக்களில் தொடர்ந்து அவர்கள் ஒரே இடத்தில் நிற்காமல் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் அங்கிருந்து நகர்வதற்கான ஏற்பாடுகளும் முறையாகச் செய்யப்படவில்லை.
காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தின்போது இதைவிடவும் அதிகப்படியான மக்களை வரிசைப்படுத்தி நெரிசலைத் தவிர்க்க முடிந்தது. அவ்வாறு அனைத்து திருவிழாக்களுக்கும் அறநிலையத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை, மின்சாரத் துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு மிகவும் அவசியமானதாகிறது. மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவைப் பொறுத்தவரை, வைகை ஆற்றுக்கும் பிரதான சாலைக்கும் இடையில் முன்பு வெட்டவெளியாக இருந்த நிலை மாறி, தற்போது ஆற்றையொட்டி பல புதிய கட்டுமானங்கள் அமைக்கப்பட்டிருப்பதும் முன்கூட்டியே கவனத்தில் கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
தஞ்சை களிமேடு தேர்த் திருவிழாவில் உயிரிழப்புக்கு முக்கியமான காரணம், மின்சாரம் தாக்கியதே ஆகும். அறநிலையத் துறை நிர்வாகத்தில் இயங்கும் கோயில்களின் தேர்களின் உச்சியில் இரும்புப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறை பின்பற்றப்படுகிறது. ஆனால், அறநிலையத் துறையின் நிர்வாகத்தில் இல்லாத கோயில்களின் திருவிழா ஏற்பாடுகள் உள்ளூர் அளவிலேயே திட்டமிடப்படுகின்றன என்பதால், அங்கு வழிகாட்டும் நெறிமுறைகள் எதுவும் பின்பற்றப்படாத நிலை நிலவுகிறது. எனவே, அறநிலையத் துறையின் நிர்வாகத்தில் இல்லாத கோயில்களையும் உட்படுத்தி திருவிழாக்களுக்கு என பொதுவான வழிகாட்டுதல்களை வழங்குவதோடு, அவற்றில் உள்ளாட்சி மற்றும் வருவாய்த் துறையின் பங்கேற்பையும் உறுதிப்படுத்த வேண்டும். தேரோடும் வீதிகளில் சாலைகளின் உயரம் தொடர்ந்து அதிகரித்துவருவதையும் முறைப்படுத்த வேண்டும். இத்தகைய துயரங்கள் மீண்டும் ஒருமுறை நிகழாமல் தவிர்க்க, அனைத்து துறைகளுக்கிடையிலான ஒருங்கிணைந்த செயல்பாடே தீர்வு.