

மதிப்புக் கூட்டுவரிகளை (வாட்) குறைத்து பெட்ரோல், டீசலின் விலை குறைவதற்கு உதவுமாறு மாநில அரசுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருப்பது தேசிய அளவில் ஒரு பெரும் விவாதத்தைத் தொடங்கிவைத்திருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பரில், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான தீர்வைகளைக் குறைத்ததைச் சுட்டிக்காட்டி, மாநில அரசுகளும் தங்களது வரிகளைக் குறைக்க வேண்டும் என்று அவர் கோரியிருக்கிறார். பாஜக ஆளும் கர்நாடகம், குஜராத், உத்தர பிரதேசம், அசாம், மணிப்பூர், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் இவ்வாறு வாட் வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. மஹாராஷ்டிரம், மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் இந்த வேண்டுகோளைத் தொடர்ந்து நிராகரித்துவருகின்றன.
ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக மத்திய அரசு கடும் விமர்சனங்களைச் சந்தித்துவருகிறது. அவ்விமர்சனங்களை மாநிலங்களை நோக்கித் திசைதிருப்பிவிடும் முயற்சியாகவே பிரதமரின் கோரிக்கையை எதிர்க்கட்சிகள் சித்தரிக்கின்றன. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என்று கூறியிருக்கும் சத்தீஸ்கர் முதல்வர் புபேஷ் பாகல், மாநில அரசின் வரிகள் எதுவும் விதிக்கப்படாத நிலையில், சமையல் சிலிண்டர்களின் விலை உயர்ந்திருப்பதற்கு என்ன காரணம் என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
பெட்ரோல் மீது விதிக்கப்படும் மத்திய அரசின் தீர்வைகள் மாநில அரசுகளுடன் பகிரப்படுவதில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இதே கருத்தைத் தமிழ்நாடு முதல்வரும் நிதியமைச்சரும் வலியுறுத்தியுள்ளனர். சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோது ஈட்டப்பட்ட உபரி வருமானத்தை மத்திய அரசு பகிர்ந்துகொள்ளவில்லை என்று குற்றம்சாட்டியிருக்கும் தமிழ்நாடு முதல்வர், மாநில அரசுகளுடன் வருமானத்தைப் பகிர்ந்துகொள்ளக் கூடாது என்பதற்காகவே வழக்கமான தீர்வைகளுக்குப் பதிலாக சிறப்புத் தீர்வைகள், மேல்வரிகள் ஆகியவற்றை விதிப்பதாகவும் கூறியுள்ளார். மத்திய அரசு மேற்கு வங்கத்துக்கு வழங்க வேண்டிய வரிவருமானப் பகிர்வு நிலுவைகளில் பாதியை வழங்கினாலே, பாஜக ஆளும் மாநிலங்களைக் காட்டிலும் கூடுதலாகத் தாம் வரியைக் குறைக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் மம்தா பானர்ஜி.
வரிவருமானப் பகிர்வில் மத்திய - மாநில அரசுகளுக்கிடையே நடந்துவரும் நீண்ட நெடிய யுத்தத்தின் தொடர்ச்சியாகவே பெட்ரோல் மீதான வரிகளைக் குறித்த விவாதமும் அமைந்துள்ளது. விமான எரிபொருளுக்கு மாநில அரசு விதிக்கும் வாட் வரிகளைத் தவிர்க்கும் நோக்கத்தில் அதை ஜிஎஸ்டி வரியமைப்புக்குள் கொண்டுவர மத்திய அரசு பரிசீலித்துவருவதாகத் தெரிகிறது. பெட்ரோல், டீசலையும் அவ்வாறு பொது வரியமைப்புக்குள் கொண்டுவர வேண்டிய தேவையுள்ளது. பெருந்தொற்றுக்குப் பிறகான பொருளாதார நெருக்கடியுடன் ரஷ்ய-உக்ரைன் போரின் பாதிப்பும் ஒன்றுசேர்ந்துள்ள நிலையில், அன்றாடப் பயன்பாட்டுக்கான எரிபொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பது மத்திய, மாநில அரசுகளின் கூட்டுப் பொறுப்பாகவே அணுகப்பட வேண்டும்.