நீட்டிக்கப்படுமா ஜிஎஸ்டி இழப்பீடு?

நீட்டிக்கப்படுமா ஜிஎஸ்டி இழப்பீடு?
Updated on
1 min read

மே மாதத்தில் நடக்கவிருக்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 47-வது கூட்டம் பல்வேறு காரணங்களுக்காக நாடு முழுவதும் பலத்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஜிஎஸ்டி சட்டத்தின்படி, மாநிலங்களுக்கான ஐந்தாண்டு கால இழப்பீடு அடுத்துவரும் ஜூன் மாதத்துடன் முடியவுள்ளது. பெருந்தொற்றின் காரணமான கடுமையான பொருளாதாரச் சவாலை எதிர்கொண்டுள்ள மாநில அரசுகள், இந்த இழப்பீட்டை மேலும் சில ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கோரிவருகின்றன. நடக்கவிருக்கும் கவுன்சில் கூட்டத்திலேயே நீட்டிப்பு குறித்து முடிவெடுக்கப்பட்டால்தான், அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தேவையான சட்டத்திருத்தங்களைச் செய்ய முடியும். ஜிஎஸ்டி இழப்பீட்டைத் தொடர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வலியுறுத்திவருகையில், ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தீர்வை நீக்கப்பட வேண்டும் என்ற விருப்பமும் தொழில் துறையில் நிலவுகிறது.

இதற்கிடையில், வரி விகித அடுக்குகளில் ஒருசிலவற்றை ஒன்றாக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டுவருகிறது. தற்போது 0%, 5%, 12%, 18%, 28% ஆகிய ஐந்து அடுக்குகளில் ஜிஎஸ்டி வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 12%, 18% ஆகிய இரண்டையும் ஒன்றாக்கி 15% என்ற புதிய அடுக்கை உருவாக்க ஆலோசிக்கப்பட்டுவருகிறது. வரி விகித அடுக்குகளில் மாற்றங்களைச் செய்வது மட்டுமின்றி, 143 பொருட்களுக்குத் தற்போது விதிக்கப்படும் வரியைக் காட்டிலும் கூடுதலாக வரி விதிக்கவும் ஏற்பாடாகிவருகிறது. இவற்றில் 92% பொருட்களுக்கு 18%-லிருந்து 28% வரி நிர்ணயம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. 18% வரி விகித அடுக்கில் தற்போது 480 பொருட்கள் உள்ளன. ஜிஎஸ்டியின் மொத்த வருமானத்தில் ஏறக்குறைய 70% இந்தப் பொருட்களிலிருந்தே பெறப்படுகிறது.

தற்போது 28% வரியை எதிர்நோக்கியுள்ள பொருட்களின் பட்டியலில் கைக்கடிகாரங்கள், மூக்குக் கண்ணாடிகள் மற்றும் அதற்கான பிரேம்கள், செல்பேசிகளுக்கான ‘பவர் பேங்க்’, கலர் டி.வி., அறைகலன் மற்றும் மின்சாதனப் பொருட்கள் போன்ற அன்றாடப் பயன்பாட்டிலுள்ள பல பொருட்களும் உள்ளன. 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் வரி விகிதம் குறைக்கப்பட்ட இந்தப் பொருட்கள் பலவும், இப்போது மீண்டும் வரி உயர்வைச் சந்திக்கவுள்ளன. எனவே, 2019 மக்களவைத் தேர்தலைக் கணக்கில்கொண்டு வரி விகிதம் குறைக்கப்பட்டு, தற்போது மீண்டும் வரி உயர்த்தப்படவிருக்கிறது என்ற விமர்சனங்களையும் மத்திய அரசு எதிர்கொண்டுள்ளது.

143 பொருட்களுக்கு வரி விகிதத்தை உயர்த்துவதைக் குறித்து மாநிலங்களிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு முன்பே இக்கருத்துகள் பெறப்பட்டுவிடும் என்று தெரிகிறது. தவிர, ஜிஎஸ்டியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள பொருட்களின் மீது குறைந்தபட்ச வரி விதிப்பதற்கும் வாய்ப்புள்ளது. வருவாய்ப் பற்றாக்குறையைச் சமாளிக்க இத்தகைய வரி விகித உயர்வுகள் அடுத்த சில ஆண்டுகளுக்குத் தவிர்க்க முடியாததாக இருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. ஆனால், மறைமுக வரியமைப்பில் ஒட்டுமொத்தச் சுமையும் கடைசியில் நுகர்வோரின் மீதே சுமத்தப்படுகிறது என்பதையும் பொருளாதார நெருக்கடியில் அரசு மட்டுமல்ல மக்களும் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in