

அனல் மின்நிலையங்களின் நிலக்கரிக் கையிருப்பு குறைந்ததன் காரணமாக உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, மஹாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் அண்மையில் ஏற்பட்ட எதிர்பாராத மின்வெட்டுகள், மேலும் இந்நிலை தொடரக்கூடுமோ என்ற அச்சத்தை மக்களிடமும் தொழில் துறையினரிடமும் ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் மொத்தமுள்ள 173 அனல் மின்நிலையங்களில் 100-க்கும் மேற்பட்டவற்றில் தேவையான நிலக்கரிக் கையிருப்பு 25%-க்கும் குறைவாகவே உள்ளது. 50-க்கும் மேற்பட்ட மின்நிலையங்களில் இந்த அளவு 10%-க்கும் குறைவாக உள்ளது. இதையடுத்து, மாநிலங்கள் தங்களது மின்னுற்பத்திக்காக ‘கோல் இந்தியா’ நிறுவனத்திடம் கூடுதல் நிலக்கரியை ஒதுக்குமாறு கோரிவருகின்றன.
இந்தியாவில் நிலக்கரி உற்பத்தியின் பெரும்பகுதி ‘கோல் இந்தியா’ நிறுவனத்தின் வசமே உள்ளது. மேலும், நாட்டின் மின்னுற்பத்தியில் ஏறக்குறைய 70%, அனல் மின்நிலையங்களிலிருந்தே பெறப்படுகிறது. எனவே, அனல் மின்நிலையங்களுக்குக் கிடைக்க வேண்டிய நிலக்கரியில் ஏற்படும் தட்டுப்பாடு மின்னுற்பத்தியிலும் பயன்பாட்டிலும் அதன் தொடர்ச்சியாகப் பொருளாதாரத்திலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். தடையின்றிக் கிடைக்கப்பெறும் மின்சக்தியைத்தான் தொழில் துறையின் இயக்கமே நம்பியிருக்கிறது என்பதால், உடனடியாக இச்சிக்கல் சரிசெய்யப்பட்டாக வேண்டும்.
நிலக்கரிப் பற்றாக்குறைக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, ஆண்டுதோறும் அதிகரித்துவரும் மின் தேவை. வெளிநாட்டு நிலக்கரிப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவெடுத்திருக்கும் நிலையில், தொடர் மழையின் காரணமாக உள்நாட்டு உற்பத்தியிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. நிலக்கரிக் கையிருப்பு குறைந்ததற்கான காரணம் பற்றாக்குறை அல்ல, அவற்றை அனல் மின்நிலையங்களுக்குக் கொண்டுசேர்ப்பதற்குப் போதுமான அளவில் ரயில் பெட்டிகள் கிடைக்காததுதான் என்று மத்திய அரசின் நிலக்கரி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. நிலக்கரித் துறை, மின்சாரத் துறை மற்றும் ரயில்வே துறை இணைந்துதான் இந்தச் சிக்கலுக்குத் தீர்வை அளிக்க முடியும். இத்துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு இன்னும் வலுப்பட வேண்டும்.
நிலக்கரிக் கையிருப்புச் சிக்கலை எதிர்கொள்ள அனல் மின்நிலையங்கள் 10% அளவுக்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்துகொள்ளவும் மத்திய அரசு அனுமதித்துள்ளது. எனினும், நிலக்கரி விலை உயர்வால் இறக்குமதியும் சவாலாக மாறியுள்ளது. கடந்த இரண்டாண்டுகளில் இறக்குமதியாகும் நிலக்கரியின் விலை ஆறு மடங்கு உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வின் காரணமாகவே உள்நாட்டு நிலக்கரி உற்பத்திக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தது.
இப்போது, நிலக்கரியை ஏற்றிச் செல்லும் ரயில் பெட்டிகள் சேவையில் அனல் மின்நிலையங்களுக்கு முன்னுரிமைகொடுக்க ஆரம்பித்திருப்பதால், நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டு இயங்கிவரும் அலுமினியம் உள்ளிட்ட தொழிற்சாலைகளின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. புவி வெப்பமாதலைக் குறைக்க அனல் மின்நிலையங்களின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்று சூழலியல் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர் என்பதையும் இந்நேரத்தில் நினைவில்கொள்ள வேண்டும். நிலக்கரியைப் பயன்படுத்தி மின்னுற்பத்தி செய்வதில் உள்ள தடைகளைச் சரிசெய்வதோடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கிய பயணத்தையும் இன்னும் விரைவுபடுத்த வேண்டும்.