மின்வாகனங்களின் பாதுகாப்பை உறுதிசெய்க!

மின்வாகனங்களின் பாதுகாப்பை உறுதிசெய்க!
Updated on
1 min read

பெட்ரோலிய எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்துவருவதும் பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய சூழலியல் பொறுப்புகளும், மின்சக்தியால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டைத் தவிர்க்கவியலாததாக மாற்றியிருக்கின்றன. மின்வாகன உற்பத்தியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தொடர்முயற்சிகளை எடுத்துவருகின்றன. பயண வழியில், வாகனங்களின் மின்கலன்களை (பேட்டரி) நிரப்பிக்கொள்வதற்கான வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் மின்வாகனங்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவங்கள் இவ்வாகனங்களைப் பயன்படுத்துவோரிடமும் பயன்படுத்த விரும்பியிருந்தோரிடமும் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்கலன் தொழில்நுட்பத்தில் அரசும் தொழில் துறையினரும் தீவிர கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை இது.

வாகனங்களுக்கான மின்கலன் பாஸ்பேட் அல்லது என்எம்சி என்ற வேதிப்பொருட்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகின்றன. என்எம்சி என்பது லித்தியம்-நிக்கல்-மாங்கனீஸ்-கோபால்ட் ஆக்ஸைடு என்பதன் சுருக்கக் குறியீடாகும். இவை இரண்டுமே தீப்பற்றுவதற்கு வாய்ப்புள்ளவை என்றாலும் ஒப்பீட்டளவில் பாஸ்பேட் தீயை எளிதாகக் கடத்துவதில்லை. ஆனால், என்எம்சி தீயைக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் பரவச்செய்யக்கூடியது. எனவே, வெப்பநிலை அதிகமாகக் காணப்படும் இந்தியாவுக்கு பாஸ்பேட் மின்கலன்களே பாதுகாப்பானவை என்று பரிந்துரைக்கப்படுகிறது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களுக்கான மின்கலன்கள் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. தயாரிப்புச் செலவைக் குறைப்பதற்காக விலையும் தரமும் குறைவான கலன்களைப் பயன்படுத்தும்போது அவை வெடிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கின்றன. அவ்வாறு பாதுகாப்பு குறைவான மின்சேமிப்புக் கலனுடன் இயங்கும் வாகனங்களை உற்பத்தியாளர்கள் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

மின்வாகனங்களின் பாதுகாப்பு குறித்து மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் குறித்து, வாகனத் தயாரிப்பாளர்களும் மத்திய அரசின் பல்வேறு துறைகளும் இணைந்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தவும் ஏற்பாடாகிவருகிறது. மின்கலன் எரிவதற்கான வாய்ப்பு இருக்கும் எனில், அதைக் குறித்து எச்சரிக்கும் தொழில்நுட்பமே உடனடித் தேவை. மின்சேமிப்புக் கலனின் மீது அதன் வெப்பநிலையை அறிவதற்கான கருவிகளைப் பொருத்துவதன் மூலமாக, வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலாக வெப்பமடையும்போது, எச்சரிக்கை மணி ஒலித்து வாகனத்தையும் அதை ஓட்டுபவரின் உயிரையும் காப்பாற்ற வாய்ப்புள்ளது.

மின்சேமிப்புக் கலனின் அனுமதிக்கப்பட்ட வெப்ப அளவை மத்திய அரசு தீர்மானிக்கும், அதற்கிணங்க உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை அமைப்புகளைத் தங்களது வாகனங்களில் பொருத்த வேண்டியது கட்டாயமாகும். இந்த விதிமுறைகளை மீறுவோர்மீது கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று நிதின் கட்கரி எச்சரித்துள்ளார். மின்வாகன உற்பத்தியில் முதலீடு செய்ய விரும்பும் பன்னாட்டு நிறுவனங்கள் விலையும் தரமும் குறைவான மின்கலன்களைப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்பதிலும் அவர் உறுதியாகவே இருக்கிறார். காலத்தின் கட்டாயமான மின்வாகனங்களின் பயன்பாட்டுக்குப் பெருமளவினர் மாற வேண்டும் எனில், அவற்றின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியதே முதல் தேவை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in