

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மக்ரோன் மீண்டும் வெற்றிபெற்றிருப்பதன் மூலமாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் மையவாத அரசியல் போக்கு தனது செல்வாக்கைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. பிரான்ஸில் கடந்த இருபது ஆண்டுகளில் மீண்டும் அதிபராக வெற்றிபெற்றவர் என்ற பெருமையையும் இமானுவேல் மக்ரோன் பெற்றிருக்கிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தீவிர வலதுசாரி வேட்பாளரான மரீன் லு பென் மூன்றாவது முறையும் தோல்வியைத் தழுவியுள்ளார்.
ஆனால், கடந்த முறையைக் காட்டிலும் இம்முறை அவர் பெற்ற வாக்குகளின் சதவீதம் கூடியிருக்கிறது. கடந்த தேர்தலில் 33.9% வாக்குகளைப் பெற்றிருந்த மரீன், இம்முறை சுமார் 41.5% வாக்குகளைப் பெற்றுள்ளார். அதே நேரத்தில், கடந்த 2017 தேர்தலில் 66.1% வாக்குகளைப் பெற்ற மக்ரோன் தற்போது சுமார் 58.5% வாக்குகளைப் பெற்றிருப்பது மக்களுக்கு அவர்மீது சற்றே அதிருப்தி எழுந்துள்ளதையும் பிரதிபலித்துள்ளது. 1969-க்குப் பிறகு மிகவும் குறைவான வாக்குகள் பதிவான தேர்தல் இது என்று கூறப்படுகிறது. கூடவே, பிரான்ஸில் தீவிர வலதுசாரிகளுக்கான ஆதரவு பெருகியுள்ளதையும் இது காட்டுகிறது.
அதிபர் தேர்தலில் வெற்றியைத் தீர்மானித்திருக்கும் வாக்கு வித்தியாசம், கடந்த தேர்தலைக் காட்டிலும் குறைவாகவே இருப்பதால், ஜூனில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மையவாதிகளுக்கும் தீவிர வலதுசாரிகளுக்கும் இடையிலான போட்டி மேலும் கடுமையாக மாறக்கூடும். பெருந்தொற்றையும் அதன் பொருளாதாரப் பாதிப்புகளையும் மக்ரோன் விரைந்து எதிர்கொண்ட விதம், அவரது மறுவெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. மேலும், பிரான்ஸின் தீவிர வலதுசாரிகள் குடியேற்றங்களுக்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள்.
இதை பிரான்ஸ் மக்கள் விரும்பவில்லை. இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்று முன்மொழிந்த மரீன், அவ்வப்போது இஸ்லாமியர்களைப் பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தியும் பேசிவருகிறார். பிரான்ஸின் மேற்குப் பிராந்தியத்தில் வசிக்கும் பெரும் எண்ணிக்கையிலான இஸ்லாமியர்களுக்கு இது அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. அதனால்தான், வெற்றிவிழாக் கூட்டத்தில் பேசிய மக்ரோன், “நம் நாட்டில் விரும்பத்தகாத எத்தனையோ வேறுபாடுகள் இருந்தாலும் நாம் மிகவும் ஒற்றுமையாக இருந்துவருகிறோம். பாதையின் எந்தப் பக்கத்துக்கும் யாரும் இழுத்துச் சென்றுவிட முடியாது” என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.
தனக்கான ஆதரவு என்பதைக் காட்டிலும் தீவிர வலதுசாரிகளுக்கான எதிர்ப்பின் காரணமாகவே தான் வெற்றிபெற முடிந்துள்ளது என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். பிரான்ஸின் தீவிர வலதுசாரிகளைப் பொறுத்தவரையில், அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிரான பார்வை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். எனவே, மக்ரோனின் வெற்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் வெற்றியாகவும் கருதப்படுகிறது. உக்ரைன்மீது ரஷ்யா போர்த் தாக்குதலை நடத்திவரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின்மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை எடுத்துச்சொல்வதாக மக்ரோனின் வெற்றி புது விளக்கம் பெறுகிறது.