

பாரம்பரிய மருத்துவத் துறையின் வளர்ச்சியில் மத்திய அரசு காட்டிவரும் அக்கறை வரவேற்புக்குரியது. இது தொடர்பாக மத்திய அரசு சமீபத்தில் மேற்கொண்டுள்ள சில முயற்சிகள் பரவலான பாராட்டுகளைப் பெற்றுவருகின்றன. ஏப்ரல் 19 அன்று, குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் பாரம்பரிய மருத்துவத்துக்கான உலக மையம் தொடங்கப்பட்டுள்ளது.
மருத்துவச் சிகிச்சைகளில் பன்மைத்துவச் சூழலுக்கான உரையாடலை நிகழ்த்துவது இம்மையத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. அதையடுத்து, காந்திநகரில் நடந்த இந்தியப் பாரம்பரிய மருத்துவத் துறை கண்டுபிடிப்புகள் மற்றும் முதலீடுகள் தொடர்பான மாநாட்டிலும் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். பாரம்பரிய சிகிச்சை பெற வருகைதரும் அயல்நாட்டுப் பயணிகளுக்கான விசா நடைமுறைகள் எளிதாக்கப்படும், பாரம்பரிய முறையிலான மருந்துகளுக்கு தரக் குறியீடுகள் அறிமுகப்படுத்தப்படும் என்று பல்வேறு அறிவிப்புகளை இம்மாநாட்டில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.
அதற்கு முதல் நாள் ஜாம்நகரில் நடந்த மருத்துவ மையத் தொடக்க விழாவில் பேசிய அவர், நவீன வாழ்க்கைமுறையின் காரணமான நீரிழிவு, உடற்பருமன் போன்ற உடல்நலப் பாதிப்புகளுக்குப் பாரம்பரிய மருத்துவ முறைகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. பாரம்பரிய மருத்துவ முறைகளின் மரபார்ந்த அறிவும் நவீன மருத்துவ முறைகளின் அளவிட முடியாத சாத்தியங்களும் ஒன்றுகலக்கும்போது அவை தங்களுக்கிடையிலான இடைவெளிகளைச் சரிசெய்துகொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகியவற்றை உள்ளடக்கிய ‘ஆயுஷ்’ மருந்துப் பொருட்களின் விற்றுவரவு மதிப்பு, கடந்த எட்டாண்டுகளில் ஆறு மடங்கு உயர்ந்துள்ளது. இதையொட்டியே, இத்துறையில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு மத்திய அரசு தீவிர கவனம் செலுத்திவருகிறது. இந்தியாவில் ஏறக்குறைய 65 முதல் 75 சதவீதம் பேர் தங்கள் வாழ்வில் ஒருசில தடவைகளேனும் பாரம்பரிய மருத்துவ சிகிச்சைகளைப் பெறுவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகள் கூறுகின்றன. அதே நேரத்தில், பாரம்பரிய மருத்துவர்கள் சில சமயங்களில் அலோபதி மருந்துகளைப் பரிந்துரைப்பது குறித்தும் நீண்ட காலமாகக் குற்றச்சாட்டு நிலவிவருகிறது.
நவீன மருத்துவ முறைகள் லாப நோக்கிலானவை என்ற விமரிசனத்தையும் பாரம்பரிய மருத்துவ முறையின் ஆதரவாளர்கள் முன்வைப்பது வழக்கமாக இருக்கிறது. இத்தகு சூழலில், வெவ்வேறு மருத்துவ முறைகளைப் பின்பற்றும் மருத்துவர்களிடையே பரஸ்பர உரையாடல்களுக்கான தொடர்முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும். வேதக் கணிதம், பழங்காலத்திய அறிவியல் அறிவு போன்ற பாஜகவின் சமூக, பண்பாட்டுச் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாகவும் பாரம்பரிய மருத்துவம் தொடர்பான அதன் தற்போதைய முன்னெடுப்புகள் பார்க்கப்படுகின்றன.
வேதங்களின் அங்கங்களில் ஒன்றாக இருப்பதால், ஆயுர்வேதம் இயல்பாகவே முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது. ஆயுர்வேதத்தில் இல்லாத தனித்தன்மைகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும் சித்த மருத்துவத்துக்கும் அதற்கிணையான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியதும் அவசியம்.