அலைக்கற்றை ஒதுக்கீடு: விலைக் குறைப்பும் விவாதங்களும்

அலைக்கற்றை ஒதுக்கீடு: விலைக் குறைப்பும் விவாதங்களும்
Updated on
1 min read

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்), 5ஜி சேவை உள்ளிட்ட அலைக்கற்றைகள் ஒதுக்கீடு தொடர்பாக அண்மையில் வெளியிட்ட பரிந்துரைகள் முக்கிய விவாதமாக மாறியிருக்கின்றன. ட்ராய் ஏற்கெனவே முன்மொழிந்த அடிப்படை விலையிலிருந்து 35% முதல் 40% வரையிலும் தற்போது குறைத்துக்கொள்ள முன்வந்திருக்கிறது என்றபோதும் இது குறித்து தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு அதிருப்தியையே தெரிவித்திருக்கிறது.

பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா ஆகிய முன்னணித் தொலைத்தொடர்பு நிறுவனங்களை உள்ளடக்கியது இக்கூட்டமைப்பு. தொலைத்தொடர்புத் துறையின் தற்போதைய தேவை 90% விலைக் குறைப்பே என்று இவ்வமைப்பு கோரியுள்ளது.

ஏற்கெனவே உள்ள அலைக்கற்றையின் பகுதிகள், புதிய அலைக்கற்றைகள் என அனைத்தையும் சேர்த்து 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மெஹாஹெர்ட்ஸ் மின்னலைகளை ஏலம் விடுவதற்கு ட்ராய் பரிந்துரைத்துள்ளது. அடுத்து வரும் 20 ஆண்டுகளுக்கான ஒதுக்கீட்டின் குறைந்தபட்ச ஏல விலைமதிப்பு ரூ. 5 லட்சம் கோடி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றில், 5ஜி சேவைகளுக்கான 3300-3670 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றைக்கான விலை இந்தியா முழுவதற்கும் மெகாஹெர்ட்ஸ் ஒன்றுக்கு ரூ.492 கோடி என்று முன்பு குறைந்தபட்ச ஏல விலை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 35.5% குறைக்கப்பட்டு, மெகாஹெர்ட்ஸ் ஒன்றுக்கு ரூ.317 கோடி என்று திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், நிர்ணயிக்கப்பட்ட விலையின் 1.5 மடங்கில் 30 ஆண்டுகள் அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெறவும் வகைசெய்யப்பட்டுள்ளது. தவிர, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அல்லது தொலைத்தொடர்புத் துறையிடமிருந்து நேரடியாகவே அலைக்கற்றைகளைக் குத்தகைக்குப் பெற்று, தொழில் துறையினர் புதிய சேவைகளைத் தொடங்குவதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு விலைக் குறைப்பு, சலுகைகளுக்குப் பிறகும் தொலைத்தொடர்புச் சேவை நிறுவனங்கள் அதிருப்தி அடைவதற்குக் காரணம், அந்நிறுவனங்கள் கடுமையான நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன என்பதே.

2011 மார்ச் மாதத்தில் நடந்த அலைக்கற்றை ஏலத்தில், 31.7% மட்டுமே விற்பனையாகின. இந்நிலையில், இந்த ஆண்டு 5ஜி அலைக்கற்றை ஏலத்துக்கான அறிவிப்பைத் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு கடுமையான வார்த்தைகளில் விமர்சிக்கத் தொடங்கியுள்ளது; டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவதற்குப் பதிலாகப் பின்னடைவை ஏற்படுத்தும் அறிவிப்பு இது என்று அது கூறியுள்ளது. தொழில் துறையினர் புதிய தொலைத்தொடர்பு சேவைகளைத் தொடங்குவதற்கான திட்டத்தையும் அது விரும்பவில்லை; தொலைத்தொடர்புத் துறையின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்குப் பதிலாக அதை மோசமடையச் செய்வதற்கான முயற்சி இது என்று குறைகூறியுள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பொருளாதார நிலையைக் கருத்தில்கொண்டு அலைக்கற்றை ஒதுக்கீட்டுக் காலத்தை 30 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக உறுதியளித்துவிட்டு, அதற்கான விலையை 1.5 மடங்காக உயர்த்தியுள்ளது ஏமாற்றமளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. தொலைத்தொடர்பில் புதிய தொழில்நுட்பமான 5ஜி சேவைக்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், அச்சேவையை அளிக்க வேண்டிய நிறுவனங்கள் பொருளாதாரச் சுமையைக் காரணம்காட்டி, அரசின் தயவையே எதிர்பார்த்து நிற்கின்றன. இவ்விஷயத்தில் மத்திய அரசு நெகிழ்வான கொள்கை ஒன்றை வகுத்து அலைக்கற்றை ஒதுக்கீட்டை விரைந்து முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in