

எதிர்க்கருத்து உரிமையும் சட்டமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடர், மாநில அரசுக்கும் ஆளுநர் அலுவலகத்துக்கும் இடையிலான அதிகாரச் சிக்கல்கள் அனைத்தையும் தாண்டி, கடந்த சில நாட்களாகத் தமிழ்நாட்டின் விவாதப் பொருளாக இசையமைப்பாளர் இளையராஜா மாறியிருக்கிறார்.
பி.ஆர்.அம்பேத்கரையும் நரேந்திர மோடியையும் ஒப்பிட்டு எழுதப்பட்ட ஆங்கிலப் புத்தகம் ஒன்றுக்கு அவர் எழுதிய முன்னுரையில், மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு எழுதிய பாராட்டுரைகளே இந்த விவாதங்களுக்குக் காரணம். பிரதமர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள், அவரது ஆதரவாளர்களால் பாராட்டப்படுவதும் எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்படுவதும் ஜனநாயகத்தின் ஒரு அங்கமாகவே கருதப்பட்டுவருகிறது. மோடியைக் குறித்த பாராட்டுகள், விமர்சனங்கள் ஆகியவற்றுக்கும் இது பொருந்தும். ஆனால், தற்போது அரசியல் வட்டத்துக்கு வெளியிலிருந்து அவரைக் குறித்து வந்திருக்கும் ஒரு பாராட்டை எதிர்க்கட்சிகளும் எதிர்க் கருத்தாளர்களும் விரும்பவில்லை என்று தெரிகிறது. இந்த விருப்பமின்மையும்கூட இயல்பானதுதான். ஆனால், அதை வெளிப்படுத்துகின்ற விதத்தில் கண்ணியம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டுத் தலைவர்களைச் சர்வதேச ஆளுமைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவது ஓர் அரசியல் மரபாகவே கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. சாக்ரட்டீஸ், பெர்னாட்ஷா, முஜீபர் ரஹ்மான், சே குவேரா என்று அந்தப் பட்டியல் இன்றும் நீள்கிறது. இத்தகைய ஒப்பீடுகளை மதிப்புறு நிலையாகப் பார்க்கிறோமேயன்றி ஆய்வுநோக்கில் கருத்தில் கொள்வதில்லை. இப்படியொரு ‘அரசியல் பண்பாடு’ நிலவும் தமிழ்நாட்டில், சமூகநீதி அரசியலின் முன்னோடிகளில் ஒருவரான அம்பேத்கருடன் தற்போதைய பிரதமர் ஒப்பிடப்பட்டிருப்பதை வாழ்த்தாகவோ அல்லது ஒப்பீட்டு நோக்கில் எழுதப்பட்ட புத்தகத்தின் சம்பிரதாயமான முன்னுரையாகவோ கொண்டு இந்தப் பிரச்சினையைக் கடந்துவிட முடியும்.
சொல்லப்படுகிற கருத்துகளைவிடவும் அது யாரால் சொல்லப்படுகிறது என்பதே சமீப காலமாக விவாதங்களைத் தொடங்கிவைக்கிறது. இது இளையராஜாவின் முறை. அவர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரும் அல்லர்; பிரதமர் குறித்து அவர் வெளியிட்ட கருத்து தீவிர விவாதங்களை உருவாக்கும் என்பதை அறியாதவரும் அல்லர். பதின்வயதுகளிலேயே தனது சகோதரர்களுடன் தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஊர்களில் பொதுவுடைமை இயக்க மேடைகளில் கொள்கைப் பாடல்களை முழங்கியவர்.
பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடிகள் பலருடனும் தன்னுடைய இளம் வயதிலேயே பழகும் வாய்ப்பைப் பெற்றவர். எனவே, தன்னுடைய கருத்து அரசியல்வெளியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் அறிந்தே அவர் அதைச் சொல்லியிருப்பார். அவ்வாறு தான் வெளியிட்ட கருத்துக்காக மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்றும் தனது சகோதரர் கங்கை அமரன் வாயிலாக அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
எந்தவொரு தலைவரையும் விமர்சிக்க மட்டுமின்றி, அவரைப் பாராட்டவும் குடிமக்கள் அனைவருக்கும் உரிமை இருக்கிறது. எதிர்க்கருத்து சொல்வதும் கருத்துரிமையின்பாற்பட்டதே. சூடான, சுவையான, தரமான, நயமான விவாதங்களுக்குப் பெயர்போனது தமிழ்நாடு. தமிழர்களும் நல்ல ரசிகர்கள். இருதரப்புக்குமே ஆர்வத்துடன் காதுகொடுப்பவர்கள். தரமற்ற வசைபாடலும் விவாதம் என்ற பெயரில் கலக்கும்போதுதான் அவர்கள் முகம்சுளிப்பார்கள். அப்போது வாதாடுபவர்களின் தரப்பில் நியாயங்கள் இருந்தால்கூட அது எடுபடாமல் போக வாய்ப்புண்டு.