வேதியுரங்களின் தட்டுப்பாட்டுக்கு உடனடித் தீர்வு தேவை!

வேதியுரங்களின் தட்டுப்பாட்டுக்கு உடனடித் தீர்வு தேவை!
Updated on
1 min read

காவிரிப் படுகை விவசாயிகள், யூரியா தட்டுப்பாட்டை உடனடியாகக் களையக் கோரி வயல்களில் இறங்கி கவன ஈர்ப்புப் போராட்டங்களை நடத்தியுள்ளனர். யூரியா மட்டுமின்றி பாஸ்பேட், பொட்டாஷ் உர வகைகளிலும் இத்தட்டுப்பாடு நிலவுகிறது.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் நடந்துவரும் போரின் காரணமாக இந்தியா எதிர்கொண்டிருக்கும் பெரும் சவால்களில் வேதியுரங்களின் தட்டுப்பாடும் ஒன்று. உலகின் ஒட்டுமொத்த வேதியுரங்கள் உற்பத்தியில் ரஷ்யா மட்டுமே சுமார் 13% பங்கு வகிக்கிறது. இந்தியாவுக்கு இறக்குமதியாகும் வேதியுரங்களில் ரஷ்யாவின் பங்கு முதன்மையானது. போர் தொடங்கிய பிப்ரவரி கடைசியிலிருந்தே ரஷ்யாவிலிருந்து யூரியா உள்ளிட்ட வேதியுரங்களின் ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் வேதியுரங்களின் விலை கடுமையாக ஏறக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.

இடுபொருள் செலவுகளின் அதிகரிப்பானது உணவு தானியங்களின் உற்பத்தியிலும் விலையிலும்கூட விரைவில் எதிரொலிக்கக்கூடும். எனவே, விலை உயரும்பட்சத்தில், வேதியுரங்களுக்கான மானியங்களை உயர்த்த வேண்டியதும் அவசியம். ஏற்கெனவே அளிக்கப்பட்டுவரும் மானியங்களின் அளவு நடப்பாண்டில் இரண்டு மடங்கு உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2021-22 நிதியாண்டில் வேதியுரங்களுக்கான மானியங்களின் உத்தேச மதிப்பீடு ரூ.1.25 லட்சம் கோடியாக இருக்கும் நிலையில், நடப்பு நிதியாண்டில் அது ரூ.2 லட்சம் கோடி வரையில் அதிகரிக்கக்கூடும்.

எனினும், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு வேதியுரங்களின் விலை உயர்த்தப்படக் கூடாது. யூரியா தேவையை உள்நாட்டு உற்பத்தியின் வழியாகவே பூர்த்திசெய்துகொள்வதற்கான முன்முயற்சிகளும் மத்திய அரசால் தீவிரமாக எடுக்கப்பட்டுவருகின்றன. கோரக்பூர், சிந்திரி மற்றும் பரௌனி ஆலைகளில் தொடங்கப்படவுள்ள புதிய அலகுகளின் உற்பத்தித் திறன் ஆண்டொன்றுக்கு 12.7 லட்சம் டன்கள் ஆகும். இந்த மூன்று ஆலைகளும் செயல்படத் தொடங்கினால், ஆண்டொன்றுக்கு 38.1 லட்சம் டன் யூரியா கூடுதலாக உற்பத்திசெய்ய முடியும்.

வேதியுரங்களின் தட்டுப்பாட்டில் சர்வதேச அரசியல் நிலவரங்களின் பாதிப்புகள் ஒருபுறமிருக்க, வேதியுரங்களின் உள்நாட்டு விநியோகச் சங்கிலியையும் முறைப்படுத்த வேண்டியிருக்கிறது. எதிர்வரும் மே மாதத்திலிருந்து தொடங்கும் ‘காரிப்’ பருவத்துக்குத் தேவையான அளவு வேதியுரங்கள் கையிருப்பில் இருப்பதாகவும் குறிப்பாக யூரியா மட்டுமே 70 லட்சம் மெட்ரிக் டன் கையிருப்பில் உள்ளதாகவும் மத்திய அரசு தகவல்களை அளித்தாலும் அது தேவைப்படும் விவசாயிகளுக்கு உடனடியாகக் கிடைக்காமல் இருப்பதற்கான காரணங்கள் என்னவென்பது கண்டறியப்பட்டுச் சரிசெய்யப்பட வேண்டும். விவசாயத்துக்குத் தேவையான வேதியுரங்களைக் கூட்டுறவுச் சங்கங்களின் மூலமாகவே விநியோகிக்க வேண்டும் என்றும் தனியார் பதுக்கலைத் தவிர்க்க வேண்டும் என்றும் தற்போது போராடிவரும் விவசாயிகள் கோருகிறார்கள்.

வேதியுரங்களுக்காக வெளிநாடுகளை எதிர்பார்த்து நிற்கும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில், வேதியுரங்களின் பயன்பாட்டை முறைப்படுத்துவதற்கான தேவையும் எழுந்துள்ளது. நிலம், பயிர்களுக்கேற்றவாறு வேதியுரங்களின் அளவை முடிவுசெய்ய விவசாயிகளுக்கு வேளாண் துறை உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். விவசாயிகளும் அறிவியல்பூர்வமான துல்லிய உரப் பயன்பாட்டுக்கு மாற வேண்டும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in