

கடந்த வாரம் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகனின் அமைச்சரவையில் நடந்துள்ள மாற்றங்கள், மற்ற மாநிலங்களை வியப்புடன் திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றன. புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர்களில் 13 பேர் புதியவர்கள். பழைய அமைச்சர்களில் 11 பேர் மட்டுமே தற்போது தொடர்கிறார்கள். அவர்களிலும் பெரும்பாலானவர்களுக்குத் துறைகள் மாற்றப்பட்டுள்ளன.
துணை முதல்வராகப் பொறுப்பு வகித்த ஐந்து பேரில், இருவர் மட்டுமே அப்பொறுப்பில் தொடர்கிறார்கள். மூன்று பேர் புதிய துணை முதல்வர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். 2019 சட்டமன்றத் தேர்தல் முடிந்து, ஆட்சிப் பொறுப்பேற்றபோதே இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சரவை மாற்றியமைக்கப்படும், 90% இடங்கள் புதியவர்களுக்கு அளிக்கப்படும் என்று அவர் உறுதியளித்திருந்தார். பழைய அமைச்சர்களில் 11 பேர் தற்போது தொடர்ந்தாலும் ஜெகன்மோகன் தான் உறுதியளித்தபடி, பெரும் பகுதி மாற்றத்தைச் செய்து முடித்துள்ளார்.
சமூக அமைச்சரவை என்று அழைக்கப்படும் இந்தப் புதிய அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதியினர், பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆகியோர் மொத்தம் 70% வகிக்கின்றனர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அமைச்சரவையில் 10 இடங்கள் அளிக்கப்பட்டுள்ளன. பட்டியலின சாதியினருக்கு 5 இடங்களும் பழங்குடியினருக்கு 1 இடமும் அளிக்கப்பட்டு, அமைச்சரவைக்கு உள்ளும் சமூகநீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது. அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பெண்களின் எண்ணிக்கை மொத்தம் 4. உள்ளாட்சித் துறை போன்ற பொறுப்புகள் மிகுந்த துறையின் அமைச்சராக தலித் பெண் ஒருவர் பொறுப்பேற்றுள்ளார்.
ஏற்கெனவே, அந்தத் துறையின் அமைச்சராகப் பொறுப்பு வகித்தவரும் தலித் பெண்தான். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு அளித்ததையே தமிழ்நாடு சாதனையாகப் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், ஆந்திரம் தனது உள்ளாட்சித் துறை அமைச்சர்களாகவே பெண்களைப் போற்றுகிறது. பெயரளவில் இல்லாமல், பெண்களுக்கு உண்மையிலேயே பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருப்பது ஜெகன்மோகன் அமைச்சரவையை இந்தியாவின் முன்னுதாரண அமைச்சரவைகளில் ஒன்றாக எடுத்துக்காட்டுகிறது. புதிதாகப் பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. வகுப்புவாரியாக மட்டுமின்றி பிராந்தியவாரியாகவும் அனைவருக்கும் இடமளிக்கக்கூடியதாக ஆந்திரத்தின் அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இந்த மாற்றத்துக்குப் பின்னணியில் அடுத்து வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தல்தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. ஆளுங்கட்சிக்கு எதிரான மக்களின் அதிருப்தியைத் தணிக்கும் அரசியல் உத்தி என்ற ரீதியிலும் விமர்சிக்கப்படுகிறது. ஆனால், சமூக நீதி அரசியல் பேசும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில்கூட இன்னமும் பெண்களுக்கும் பட்டியல் சாதியினருக்கும் அமைச்சரவையில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், ‘ஆந்திர மாடல்’ பாராட்டுக்குரிய ஒன்று என்பதில் ஐயமில்லை. அனைத்துக்கும் மேலாக, அமைச்சரவையில் புதியவர்களுக்கான வாய்ப்பை வழங்குவதில் பக்கத்து மாநிலங்களான கேரளம், ஆந்திர பிரதேசம் இரண்டும் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கின்றன என்பதும் தமிழ்நாடு கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி.