தமிழ் இணைப்பு மொழி: சாத்தியமா... சமாளிப்பா?

தமிழ் இணைப்பு மொழி: சாத்தியமா... சமாளிப்பா?
Updated on
2 min read

அண்மையில் நடந்த நாடாளுமன்ற ஆட்சிமொழிக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைத் தொடர்பு மொழியாக ஏற்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது, தமிழ்நாட்டில் மீண்டும் அலுவல் மொழி குறித்த விவாதங்களைத் தொடங்கிவைத்திருக்கிறது. அமித் ஷாவின் கருத்துக்குப் பலத்த எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், ஏறக்குறைய ஒரு வாரம் கழித்து, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கோவை பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கும் கருத்து தமிழ் ஆர்வலர்களிடையே வியப்பையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இலக்கு வைத்துச் செயல்பட்டால் 20 ஆண்டுகளில் தமிழை இந்தியாவின் இணைப்பு மொழியாக்கிவிடலாம். அதற்கான முயற்சிக்கு பாஜக துணைநிற்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது தமிழ்நாடு பாஜகவின் தனிப்பட்ட கருத்தா இல்லை, தேசிய அளவிலும் இந்தக் கருத்தை அக்கட்சி ஏற்றுக்கொண்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில், சித்திரைப் புத்தாண்டு அன்று சென்னை அரசு மருத்துவமனை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட தமிழ்நாடு பாஜக தலைவர் மீண்டும் இதே கருத்தை முன்வைத்துள்ளார். புதிய கல்விக் கொள்கையின்படி, தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் தமிழில்தான் படிக்க வேண்டும், மூன்றாவது மொழியாக எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம் என்ற மத்திய அரசின் நிலையை அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார். மொழிப் பாடங்களைப் பொறுத்தவரை இந்தியைக் கட்டாயம் படித்தே ஆக வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையில் சொல்லப்படவில்லை என்பது உண்மையே. ஆனால், மூன்றாவது மொழியாக எந்த இந்திய மொழியை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்ற வாய்ப்பை அளிக்கும்போது, அதிகம் பேர் பேசுகின்ற மொழி என்பதோடு, அரசமைப்பில் ஆட்சிமொழியாகவும் இடம்பெற்றிருக்கும் மொழி என்ற அடிப்படையில் இந்திக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என்பது மிகவும் இயல்பானது.

இந்தி பேசாத மாநிலங்களின் அரசுகள் தங்களுக்குள் மேற்கொள்ளும் நட்புறவு உடன்படிக்கைகளின் வாயிலாக, இந்திக்கு மாற்றாக இந்தி அல்லாத மற்றொரு மொழியைக் கற்பிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கலாம். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிடுவதும் அதைத்தான். ஆனால், அதற்கான நடைமுறைச் சாத்தியங்கள் அவ்வளவு எளிதானது அல்ல என்பதும் அவருக்குத் தெரியாமல் இருக்காது. தற்போது தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் விவாதங்களின் மையம், இந்தியை இணைப்பு மொழியாக நிறுவும் மத்திய அரசின் முயற்சிகளைப் பற்றியதே. மொழிப் பாடங்களில் ஒன்றாக இந்தியை கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்குவது இந்தியை அலுவல் மொழியாக மட்டுமின்றி, மாநிலங்களுக்கு இடையிலான இணைப்பு மொழியாகவும் மாற்றுகின்ற நீண்ட காலச் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாகவே அச்சத்துடன் பார்க்கப்படுகிறது. மொழிப் பாடங்களில் இந்தி கட்டாயமில்லை என்று சமாதானம் சொல்லும் தமிழ்நாடு பாஜக, இந்தி இணைப்பு மொழியாகாது என்று உறுதியளிக்க முடியுமா என்ற கேள்வி தவிர்க்கவியலாதது. இணைப்பு மொழியாக இந்திய மொழிகளில் எதுவொன்றும் இருக்கலாம் என்றும் பாஜக சமாதானம் சொல்கிறது. ஆனால், இந்திதான் இந்தியாவின் அலுவல் மொழி என்ற கொள்கையில் காங்கிரஸைப் போலவே பாஜகவும் உறுதியாகத்தான் இருக்கிறது

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in