Published : 11 Apr 2022 06:43 AM
Last Updated : 11 Apr 2022 06:43 AM

அலுவல்மொழி, தொடர்புமொழி: ஒரு புதிய விவாதம்!

அண்மையில் நடந்த நாடாளுமன்ற அலுவல் மொழிக் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அலுவல்மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றும் நேரம் வந்துவிட்டது என்று பேசியிருப்பது, அரசியல் வெளியில் கடும் ஆட்சேபணைகளை உருவாக்கியிருக்கிறது. இந்திய அரசமைப்பின் அலுவல்மொழி தொடர்பிலான 17-வது பகுதி இயற்றப்பட்ட காலத்திலிருந்தே கடும் விவாதங்களுக்கு இடமளிப்பதாக இருந்துவருகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே, அன்றைய சென்னை மாகாணத்தில் இந்தியைப் பாடமொழிகளில் ஒன்றாக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும்கூட, அத்தகைய முயற்சி வெற்றியைப் பெறவில்லை.

இந்திய அரசமைப்பு நடைமுறைக்கு வந்து 15 ஆண்டுகளுக்குப் பின்னர், இந்தியை அலுவல்மொழியாக நாடு முழுவதும் ஏற்பது என்ற கூறு, தமிழ்நாட்டின் கடுமையான போராட்டங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் பிறகு காலவரையற்றுத் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. எனினும், இந்திய அரசமைப்பைப் பொறுத்தவரை அலுவல்மொழி என்பது இந்தி என்பதாகவே இன்னும் இருக்கிறது. இந்தி பேசாத மாநிலங்கள் தங்களது மொழியை மாநிலத்துக்குள்ளும் ஆங்கிலத்தை மத்திய அரசுடனான தொடர்புகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று விலக்களிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், இந்தியை அலுவல்மொழியாக வளர்த்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் மத்திய உள் துறை அமைச்சகத்தின் முக்கியமான பொறுப்புகளில் ஒன்றாக இருந்துவருகிறது. கட்சி பேதங்களின்றி கடந்த காலத்திலும் இவ்வாறு அலுவல்மொழிக் கூட்டங்களை நடத்துவதும் மத்திய அரசின் கீழ் இயங்கும் அனைத்துத் துறைகளுக்கும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கைகளை அனுப்புவதும் வழக்கமானதாகவே இருந்துவருகிறது. கரோனா பெருந்தொற்றுக் காலத்திலும்கூட மத்திய உள் துறை அமைச்சகம், அலுவல்மொழியாக இந்தியை நடைமுறைக்குக் கொண்டுவருவது குறித்து, சுற்றறிக்கைகளை அனுப்பத் தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சட்டமன்றத் தேர்தல் பரபரப்பில் இருமொழிக் கல்விக் கொள்கையைப் பின்பற்றும் தமிழ்நாட்டுக் கட்சிகள், அப்போது அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இந்தியை அலுவல்மொழியாக ஏற்பது மாநிலத் தன்னாட்சிக்கும் மொழியுரிமைக்கும் பெரும் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. இந்திக்குப் பதிலாக ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக ஏற்றதன் வாயிலாக, உலகளாவிய வேலைவாய்ப்புகளையும் தமிழ்நாடு பெற்றிருக்கிறது. எனவே, இந்தியை அலுவல்மொழியாக மட்டுமின்றி, தொடர்புமொழியாகவும் பின்பற்ற வேண்டிய தேவை இங்கு எழவில்லை. மத்திய உள்துறை அமைச்சரின் சமீபத்திய உரை, அலுவல்மொழி என்பதைக் காட்டிலும் தொடர்புமொழியாகவே இந்தியை ஏற்கச் செய்யக் கோருகிறது.

வெவ்வேறு இந்திய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், தங்களுக்கிடையில் ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைத் தொடர்புமொழியாகப் பயன்படுத்துமாறு அவர் கோருவது, இந்தியைப் பிரதானமாகப் பேசும் வட இந்தியாவுக்குப் பொருத்தமாக இருக்கலாம். இந்திக்கு முற்றிலும் மாறுபட்ட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த தென்னிந்தியாவுக்கு அது எப்படிப் பொருத்தமாகும் என்பது இயல்பான கேள்வி. மத்திய உள்துறை அமைச்சரின் இந்தக் கருத்து, வழக்கமாகத் தொடர்ந்துவரும் அலுவல்மொழி தொடர்பான விவாதத்தைத் தொடர்புமொழி நோக்கிலும் விரிவுபடுத்தியிருக்கிறது. அதற்கு எதிரான தீவிர விவாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x