அரசியல் விவாதங்களில் கண்ணியம் குறையாதிருக்கட்டும்!
தமிழ்நாட்டில் இயங்கிவரும் மாநில, தேசியக் கட்சிகளுக்கிடையே கொள்கைகளிலும் அணுகுமுறையிலும் வேறுபாடுகள் இருக்கலாம். அவை எத்தன்மையதாயினும் கண்ணியம் குறையாமல் விவாதிக்கப்பட வேண்டியது அவசியம். அரசியல் விவாதங்கள் என்ற பெயரில் தலைவர்களை அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இழித்துரைப்பதும் அவமதிப்பதும் தவிர்க்கப்பட வேண்டியது. கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி ஆளுநர் போன்ற அரசமைப்பின் முக்கியப் பொறுப்புகள் வகிப்போரைக் குறித்தும் சமீப காலங்களில் அவமரியாதையான கருத்துகள் பேசப்படுகின்றன. நீண்ட நெடிய அரசியல் அனுபவம் கொண்டவர்களிடமிருந்தே இத்தகைய பேச்சுகள் வெளிப்படும்போது, அது தவறான முன்னுதாரணங்களை உருவாக்கிவிடும் ஆபத்து இருக்கிறது.
அண்மையில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடந்த பாரதியார் நினைவு நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அண்ணா விருதுபெற்றவர் தம்மை ஒருமையில் பேசியது வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். பிரபல பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசியது குறித்து, தெலங்கானா ஆளுநர் வருத்தமடைந்திருப்பது தெளிவாகவே தெரிகிறது.
அரசியல் மேடைகளில் பேச்சின் வேகத்தில் இப்படி தொடர்புடையவர்களைச் சங்கடம்கொள்ளச் செய்யும் ஏதாவது வார்த்தைகள் வந்து விழுந்தால், குறைந்தபட்சம் அதற்காக வருத்தம் தெரிவிப்பது அந்தப் பிரச்சினையைத் தணித்துவைக்க உதவும். ஆனால், ஆளுநரின் இந்தக் கருத்துக்குப் பிறகும் ஒருமையில் பேசுவது தமிழ் மரபு என்று நியாயப்படுத்துகிறார் சம்பத். இறைவனை ஒருவன் என்றே அழைக்கும் பக்தி மரபும் நம்மிடம் உண்டு. கம்பனை, இளங்கோவை, பாரதியை அவ்வாறு அழைக்கும் இலக்கிய மரபும் உண்டு. ஆனால், அரசமைப்பின் முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்களைப் பன்மையில் அழைப்பதே தமிழ் மரபு. எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மாண்புமிகு உறுப்பினர் அவர்களே என்று அழைப்பதுதான் சட்டமன்ற மரபு.
வங்கத்தில் முதல்வராகப் பொறுப்பில் இருக்கும் மம்தா பானர்ஜியும் மாநில உரிமைகள் தொடர்பாக ஆளுநருடன் சண்டையிட்டுக்கொண்டுதான் இருக்கிறார். ஆனால், சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின்போது எதிர்க்கட்சிகள் குறுக்கிட்ட நிலையில், உரையைத் தொடருமாறு ஆளுநரைக் கையெடுத்து வணங்கி வேண்டுகிறார். நம்முடைய அரசமைப்பை மிகவும் தீவிரமாக விமர்சிக்கும் நிலையிலும், அதன் மாண்புக்குச் சற்றும் குறை நிகழ்ந்துவிடாத வண்ணம் அவ்விவாதத்தை நிகழ்த்த வேண்டிய கடமை குடிமக்களுக்கு உண்டு.
ஆளுநராகப் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கிற ஒருவர், நடைமுறையில் அரசியல் கட்சி சார்புடையவராகவே இருந்தாலும் அவர் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவராகச் செயல்பட வேண்டும் என்பதே அரசமைப்பு மரபு. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் மற்றொரு மாநிலத்துக்கு ஆளுநராகப் பொறுப்பேற்றிருப்பது எல்லா வகையிலும் நமக்குப் பெருமையே. அவர் பெண் என்பது இன்னும் பெருமை. பெண்ணுரிமை பேசும் திராவிட இயக்கத்தின் சங்கநாதமாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஒரு பேச்சாளரிடமிருந்து இப்படி அவமரியாதையான வார்த்தைகள் வந்து விழுவது அவருக்கும் அவர் சார்ந்த இயக்கத்துக்கும் அழகல்ல. ஒருமையில் அழைப்பதை நியாயப்படுத்தும் நாஞ்சில் சம்பத், கடந்த காலங்களில் தான் ஆதரித்து நின்ற தலைவர்களை அப்படிப் பேசியிருக்கிறாரா? தற்போது ஆதரிக்கின்ற தலைவர்களையும் அப்படியே பேசுவாரா?
